இந்தியாவுடன் நெருங்கிய உறவைப் பேணுவதே இலங்கைக்கு சாதகமாக அமையும் – டக்ளஸ் தேவானந்தா !

by wp_shnn

இந்தியாவுடன் நெருங்கிய உறவைப் பேணுவதே இலங்கைக்கு சாதகமாக அமையும் – டக்ளஸ் தேவானந்தா ! on Friday, December 06, 2024

பூகோள அரசியல் பரப்பில் இந்திய, சீன முரண்பாடு நிலவும் பின்னணியில், இலங்கை ஆட்சியாளர்களில் சிலர் அவ்விரு நாடுகளுடனான உறவை சமநிலையில் பேண முற்படுவர். சிலர் ஏதேனுமொரு தரப்பை சார்ந்து இயங்க முற்படுவர்.

எது எவ்வாறிருப்பினும் இலங்கையைப் பொறுத்தமட்டில், இந்தியாவுடன் நெருக்கமானதொரு உறவைப் பேணுவது தான் பல்வேறு வழிகளிலும் சாதகமானதாக அமையும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்றுமுடிந்த தேர்தல்களின் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதை அடுத்து நாட்டில், குறிப்பாக வடக்கில் சீன ஆதிக்கம் மேலோங்கிவருவதாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் பற்றியும், அதன்விளைவாக தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஏற்படக்கூடிய பின்னடைவு குறித்தும் வினவியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பைத் தந்தது. அதனை நாம் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், இவ்வளவு அழிவுகளும், துன்ப துயரங்களும் ஏற்பட்டிருக்காது.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது தம்மில் 651 பேர் களப்பலியானதாக பிரபாகரன் உரிமை கோரினார். ஏனைய இயக்கங்களைச் சார்ந்தவர்களையும் சேர்த்தால் 2000 க்கு உட்பட்டோரே பலியாகினார்.

இருப்பினும் அதன் விளைவாக நாம் அவ்வாய்ப்பைப் பயன்படுத்துவதற்குத் தவறியதால், பெரும் எண்ணிக்கையான உயிர்களை இழக்கும் நிலையேற்பட்டது. இன்றளவிலே அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தமும் கேள்விக்குறியாகியிருக்கிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் இவையனைத்துக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் பொறுப்புக்கூறவேண்டியது அவசியமாகின்றது.

அதேபோன்று இந்தியா அல்லது சர்வதேச சமூகம் எதுவாயினும், அவர்கள் தத்தமது நலன்களின் அடிப்படையிலேயே எமது பிரச்சினைகளை அணுகுவர். எனவே எம்முடைய பிரச்சினைகளை முன்னிறுத்தவும், அவற்றுக்குத் தீர்வு காணவும் எம்மால் தான் முடியும்.

அதேவேளை பூகோள அரசியல் பரப்பில் இந்திய, சீன முரண்பாடு நிலவும் பின்னணியில், இலங்கை ஆட்சியாளர்களில் சிலர் அவ்விரு நாடுகளுடனான உறவை சமநிலையில் பேண முற்படுவர்.

சிலர் ஏதேனுமொரு தரப்பை சார்ந்து இயங்க முற்படுவர். எது எவ்வாறிருப்பினும் இலங்கையைப் பொறுத்தமட்டில், இந்தியாவுடன் நெருக்கமானதொரு உறவைப் பேணுவது தான் பல்வேறு வழிகளிலும் சாதகமானதாக அமையும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்