அயோத்தியில் கட்டப்பட வேண்டிய மசூதியின் நிலை என்ன? – பிபிசி கள நிலவரம்

டிசம்பர் 6, பாபர் மசூதி, அயோத்தி ராமர் கோவில் விவகாரம்

  • எழுதியவர், சையத் மொசஸ் இமாம்
  • பதவி, பிபிசி, அயோத்தி

அயோத்தியில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தன்னிப்பூர் கடந்த இரண்டு வருடங்களாக பேசு பொருளாக மாறியுள்ளது. அரசாங்கம் இங்கே மசூதி கட்டுவதற்காக நிலம் ஒதுக்கியதே இதற்கு காரணம்.

கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. நீண்ட சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு, 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி அன்று, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஒப்புக் கொண்டது.

அன்றைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அமைக்கப்பட்ட ஐந்து நபர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கில் ஒருமித்தத் தீர்ப்பை வழங்கியது.

அதன்படி, அயோத்தியில் அமைந்துள்ள, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராமர் கோவில் கட்ட வழங்கப்பட்டது. இதற்கு ஈடாக, மசூதி ஒன்றை கட்ட முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

தற்போது ராமர் கோவிலின் குடமுழுக்கு நிகழ்வு நடந்து ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், தன்னிப்பூரில் மசூதி கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவே இல்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உத்தர பிரதேசத்தில் கோரக்பூர்-அயோத்தி-லக்னோ நெடுஞ்சாலையில் ரௌனாஹி காவல் நிலையத்திற்கு அருகே செல்லும் சாலையில் இருந்து தொடங்குகிறது தன்னிப்பூர் கிராமம்.

மசூதி கட்ட தேர்வு செய்யப்பட்ட நிலம் நெடுஞ்சாலையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அங்கே சென்றபோது, கூடாரங்களில் தங்கியிருந்த சிலர் தங்களின் துணிகளை அங்கே உலர்த்திக் கொண்டிருந்தனர். சிலர் தங்களின் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அந்த நிலத்தின் மையத்தில் அமைந்திருக்கும் தர்காவுக்கு சிலர் வந்து கொண்டிருந்தனர்.

சுன்னி மத்திய வக்ஃப் வாரியம் கூறுவது என்ன?

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, 2020ம் ஆண்டு அரசு, அந்த நிலத்தை மசூதி கட்டுவதற்காக சுன்னி மத்திய வக்ஃப் வாரியத்திற்கு வழங்கியது.

அதன் பிறகு, இந்தோ – இஸ்லாமிக் கல்சுரல் ஃபவுண்டேஷன் (IICF) என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவர் ஜுஃபர் ஃபரூக்கி, நிதி பற்றாக்குறையால் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என்று கூறினார்.

மசூதி கட்டுவதற்கான நிதியை திரட்ட குழு உருவாக்கப்பட்டாலும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அது கலைக்கப்பட்டது.

அறக்கட்டளையின் செயலாளர் அத்தர் ஹூசைன், நிதி திரட்டுவதற்காக உருவாக்கப்பட்ட குழு அதன் பணியை சரியாக செய்ய இயலவில்லை என்று கூறினார்.

ஹஜி அராஃபத் ஷேக் இந்த குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். அவருக்கு நிதி திரட்டும் பொறுப்பு வழங்கப்பட்டது. இது தொடர்பாக பிபிசி அவரிடம் பேச முயற்சி செய்தது.

இது தொடர்பாக வக்ஃப் வாரியத்தின் தலைவரிடம் தான் பேச வேண்டும் என்று கூறிய அவர், மேற்கொண்டு பேச மறுத்துவிட்டார்.

டிசம்பர் 6, பாபர் மசூதி, அயோத்தி ராமர் கோவில் விவகாரம்

படக்குறிப்பு, அறக்கட்டளையின் தலைவர் ஜூஃபர் ஃபரூக்கி

தன்னிப்பூரில் நடப்பது என்ன?

அறக்கட்டளை வழங்கிய தகவல்களின் படி, மசூதியோடு, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய புற்றுநோய் மறுத்துவமனை கட்ட வேண்டும் என்ற திட்டமும் இருந்துள்ளது.

மேலும், 1857ம் ஆண்டு நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டத்திற்கான போர் நினைவுகளை பாதுகாக்கும் வகையிலான அருங்காட்சியகம் ஒன்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஃபைசாபாத்தை சேர்ந்த, 1857ம் ஆண்டு நடைபெற்ற போரில் ஈடுபட்ட தியாகி மௌலவி அஹ்மதுல்லா ஷாவின் பெயரில் அந்த அருங்காட்சியகம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

மசூதி கட்ட ரூ.100 கோடியும், இதர திட்டங்களை நிறைவேற்ற ரூ. 400 கோடியும் தேவைப்பட்டது என்று கூறும் அறக்கட்டளையின் தலைவர் ஃபரூக்கி, இந்த பணிகளை தொடங்க ஆரம்பகட்ட முதலீடு தேவைப்படும் என்று குறிப்பிடுகிறார்.

டிசம்பர் 6, பாபர் மசூதி, அயோத்தி ராமர் கோவில் விவகாரம்

படக்குறிப்பு, தன்னிப்பூர் கிராமத்தில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது

நிதி திரட்டும் முயற்சி

அறக்கட்டளை வாயிலாக மருத்துவமனைகளை நடத்தும் நபர்களிடமும் பேசி வருகிறது IICF அறக்கட்டளை.

“வெளி நாட்டில் இருக்கும் பலரும் நன்கொடை வழங்க முன்வந்துள்ளனர். அதனால் நாங்கள் எஃப்.சி.ஆர்.ஏ.-வின் (வெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) சட்டம்) கீழ் விண்ணப்பித்துள்ளோம்,” என்று ஃபரூக்கி கூறுகிறார்.

“இது செயல்பட தொடங்கினால் நிதி பற்றாக்குறை ஏற்படாது. நாங்கள் மேலும் சில நிலங்களை ஆராய்ந்து வருகிறோம். நிதி வந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்,” என்றும் அவர் கூறினார்.

மசூதிக்கான மாதிரி வரைபடமும் இரண்டு முறை தயாரிக்கப்பட்டது. முதன் முறை டெல்லியைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.எம். அக்தர் அதனை தயாரித்தார். பிறகு வேறொரு நபருக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய அக்தர், அவர் தயாரித்த மாதிரி வரைபடம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை கமிட்டியிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.

நிதி பற்றாக்குறை குறித்துப் பேசிய அறக்கட்டளையின் செயலாளர் அத்தர் ஹூசைன், “ஆரம்பத்தில் கிடைத்த நிதியை பயன்படுத்தி, கொரோனா காலத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது,” என்று கூறினார்.

“அவர்கள் முதலில் பணியை தொடங்கியிருக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் மக்களிடம் நிதிக்காக சென்றிருக்க வேண்டும்,” என்று கூறுகிறார் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஊடகவியலாளர் அர்ஷத் அஃப்சல் கான்.

“ஆரம்பத்தில் பெரிய மருத்துவமனைகளின் உரிமையாளர்கள் பலர் இதில் ஆர்வம் காட்டினார்கள். ஆனால், கால தாமதம் ஏற்பட்டதால் முன்பு போல் பலரும் ஆர்வம் தெரிவிக்கவில்லை,” என்கிறார் அவர்.

நிதி திரட்ட தன்னார்வலர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் நியமிக்கப்பட்டுள்ளனர் உள்ளனர். க்ரவுட் ஃபண்டிங் (crowd funding) எனப்படும் பொது நிதி திரட்டும் திட்டமும் ஆலோசிக்கப்பட்டது.

அயோத்தில் ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்று ஓராண்டு நிறைவேற உள்ளது. இதுவரை மசூதி கட்டப்படாதது குறித்து பாஜக தலைவர்களிடமும் நாங்கள் பேசினோம்.

உத்தரப் பிரதேசம் சிறுபான்மையினர் முன்னணியின் தலைவர் குன்வர் பஸித் அலி, “அறக்கட்டளை இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. மசூதி கட்டும் பணி விரைவில் தொடங்கும். என்னுடைய நண்பர்கள் பலர் இதற்காக நன்கொடை அளித்துள்ளனர். இதுவரை ரூ. 1 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.

டிசம்பர் 6, பாபர் மசூதி, அயோத்தி ராமர் கோவில் விவகாரம்

படக்குறிப்பு, அறக்கட்டளையின் செயலாளர் அத்தர் ஹூசைன், நிதி திரட்டுவதற்காக உருவாக்கப்பட்ட குழு அதன் பணியை சரியாக செய்ய இயலவில்லை என்று கூறினார்

உண்மை நிலவரம் என்ன?

கடந்த 2020ம் ஆண்டு தன்னிப்பூரில் மசூதி கட்ட அரசாங்கம் நிலம் வழங்கிய போதும், அங்கே கட்டுமானப் பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை. பல இடங்களில் பதாகைகள் மட்டும் பொறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அயோத்தியில் ராமர் கோவிலின் குடமுழுக்கு விழாவை தொடர்ந்து, நிலுவையில் இருந்த கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

ராமர் கோவில் கட்டும் பணிக்காக சுமார் ரூ. 1,800 கோடி செலவிடப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் பாதை ராமர் கோவில் வரை கட்டப்பட்டுள்ளது. அயோத்தியை அழகாக்கும் பணிகளையும் அரசு செய்து வருகிறது. இதற்காக தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புனித பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்காக விமான நிலையத்தை திறந்துள்ள அரசு, புதிய பேருந்து நிலையத்தையும் அமைத்துள்ளது. ரயில் போக்குவரத்தை நீட்டிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 100 கோடி அயோத்தியின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ. 150 கோடி விமான நிலைய விரிவாக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டையும் ஒப்பிட இயலாது என்கிறார், அறக்கட்டளை செயலாளர் அத்தர் ஹூசைன். ராமர் கோவில் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அரசாங்கமும் அதற்கு ஆர்வம் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

தன்னிப்பூர் பொதுமக்கள் பலரும் மசூதி தொடர்பாக பேச விரும்பவில்லை.

“மசூதி கட்டுவதற்கான ஆரம்பப் பணிகளை தொடங்க பலமுறை நாட்கள் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பணி ஏதும் நடைபெறவில்லை,” என்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த முகமது இஸ்லாம்.

“ஆரம்பத்தில் ஆகஸ்ட் 15, ஜனவரி 26 போன்ற தேதிகளில் கமிட்டி உறுப்பினர்கள் வந்து தேசியக் கொடி ஏற்றுவார்கள். இந்த ஆண்டு அவர்கள் யாரும் வராத காரணத்தால் உள்ளூர் மக்களே கொடி ஏற்றினார்கள்,” என்று அவர் கூறினார்.

இங்கே மருத்துவமனை வந்தால், உள்ளூர் மக்கள் அதனால் பயனடைவார்கள். லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை, அவர்கள் பயணிக்க வேண்டியதில்லை என்றும் கூறுகிறார் முகமது இஸ்லாம்.

டிசம்பர் 6, பாபர் மசூதி, அயோத்தி ராமர் கோவில் விவகாரம்

படக்குறிப்பு, தன்னிப்பூரில் மருத்துவமனை அமைந்தால் உள்ளூர் மக்கள் அதிகம் பயனடைவார்கள்

மக்களின் கருத்து என்ன?

தன்னிப்பூரில் மசூதி கட்டுவது தொடர்பாக பேசிய அனைத்திந்திய மில்லி கவுன்சிலின் பொது செயலாளர் காலிக் அகமது கான், நிலம் சுன்னி மத்திய வக்ஃப் வாரியத்திடம் வழங்கப்பட்டுவிட்டது, கட்டுமான பணிகளை ஆரம்பிப்பது அவர்களின் பொறுப்பு என்று கூறினார்.

“மக்களிடமோ, கட்சிகளிடமோ அந்த நிலம் வழங்கப்பட்டிருந்தால் இந்த நேரத்தில் மசூதி கட்டப்பட்டிருக்கும்,” என்று கான் தெரிவித்தார்.

“பாபர் மசூதியில் வழிபாடு நடத்தியவர்கள் தங்களின் பிரார்த்தனைகளை தொடரவே மசூதி கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், ஐந்து முறை தொழுகை நடத்த யார் அவ்வளவு தூரம் பயணிப்பார்கள்?” என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாபர் மசூதி வழக்கின் வாதிகளில் ஒருவரான இக்பால் அன்சாரி கட்டுமானப் பணிகளை தொடங்குவதில் ஏற்பட்டுள்ள தொய்வு குறித்து கவலை தெரிவித்தார்.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய அவர், “வக்ஃப் வாரியம் நிலத்தை பெற்றுக் கொண்டது. ஆனால், ஒரு பணியும் தொடங்கவில்லை. இது தொடர்பாக, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை” என்று தெரிவித்தார்.

“அவர்களிடம் நிலம் உள்ளது. மசூதியை கட்டி முடிக்கும் பொறுப்பு அவர்களுடையது. அயோத்தியில் மசூதி இருந்தவரை அதனை நாங்கள் பார்த்துக் கொண்டோம்,” என்று கூறினார் அன்சாரி.

இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்கின் மாநில தலைவர் நஸ்முல் ஹாசன் கானி, “நிலத்தை வைத்திருப்பவர்கள் மக்களிடம் பேசி பணியை தொடங்க வேண்டும். ஆனால், அவர்களின் ஆர்வம் குறைவாக உள்ளது,” என்று கூறினார்.

அயோத்தியில் வசிக்கும் கஷான் அஹமது, “அரசு இதுவரை எந்த ஆவணத்தையும் வழங்கவில்லை. அரசு அதிகாரிகள் எங்களிடம் எதையும் தெரிவிப்பதில்லை. பணிகள் நடந்தால் தடைகள் பின்னால் ஏற்படும்,” என்று கூறினார்.

டிசம்பர் 6, பாபர் மசூதி, அயோத்தி ராமர் கோவில் விவகாரம்

அயோத்தி விவகாரம் கடந்து வந்த பாதை

2019ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பு, அயோத்தி விவகாரம் 150 ஆண்டுகளாக பேசு பொருளாக இருந்தது

1528: அயோத்தியில், ராமர் பிறந்த இடமாக இந்துக்கள் பலரால் நம்பப்படும் ஒரு இடத்தில் மசூதி கட்டப்பட்டது

1853: முதன்முறையாக இந்த மசூதிக்கு அருகே மதக்கலவரம் ஏற்பட்டது. முகலாய பேரரசர் பாபரால் இந்த மசூதி கட்டப்பட்டது என்று நம்பப்படுவதால், இது பாபர் மசூதி என்று அழைக்கப்படுகிறது

1859: ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றிலும் வேலி அமைத்து இஸ்லாமியர்களை உள்ளே சென்று வழிபாடு நடத்தவும், இந்துக்களை வெளியே நின்று வழிபாடு நடத்தவும் அனுமதித்தனர்

1949: ராமரின் சிலைகள் மசூதியில் கண்டெடுக்கப்பட்டன. சில இந்துக்கள் இந்த சிலைகளை அங்கே வைத்துச் சென்றதாக புகார்கள் எழுந்தன. இஸ்லாமியர்கள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர். அரசாங்கம் இப்பகுதியை பிரச்னைக்குரிய பகுதியாக அறிவித்து, அப்பகுதியை மூடியது.

1984: ராமரின் பிறப்பிடத்தை விடுவிக்கவும், ராமர் கோவில் கட்டவும், விஷ்வ ஹிந்து பரிஷாத்தின் தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. பிறகு, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் லால் கிருஷ்ண அத்வானியின் தலைமையில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

1986: மாவட்ட நீதிமன்றம் மசூதியின் கதவுகளை திறக்கவும், இந்துக்களை வழிபாடு நடத்தவும் உத்தரவிட்டது. இஸ்லாமியர்கள் பாபர் மசூதி சங்கர்ஷ் சமிதி எனும் அமைதியை உருவாக்கினார்கள்.

1989: ராமர் கோவில் கட்டுவதற்கான பரப்புரைகளை தீவிரமாக மேற்கொண்டது விஷ்வ ஹிந்து பரிஷத். மேலும் சர்ச்சைக்குரிய நிலத்திற்கு அருகே ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டியது.

1990: விஷ்வ ஹிந்து பரிஷத்தை சேர்ந்தவர்கள் பாபர் மசூதியில் சில சேதாரங்களை ஏற்படுத்தினார்கள். அப்போதைய பிரதமராக இருந்த சந்திரசேகர் இந்த விவகாரத்திற்கு தீர்வு காண முயன்று aதில் தோல்வியுற்றார்.

1992: விஷ்வ ஹிந்து பரிஷத், சிவ சேனா, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் டிசம்பர் 6ம் தேதி அன்று பாபர் மசூதியை இடித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மதக்கலவரம் ஏற்பட்டது.

2010: செப்டம்பர் 30ம் தேதி அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை வரலாற்று தீர்ப்பை வெளியிட்டது. சர்ச்சைக்குரிய பகுதியை ராம ஜென்மபூமி என்று கூறி, அதனை மூன்றாக பிரிக்க உத்தரவிட்டது.

2011: மே 9, உச்ச நீதிமன்றம் அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை பிறப்பித்தது. மேலும், 1993ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி இருந்த நிலையே தொடர வேண்டும் என்று அறிவித்தது.

2019: நவம்பர் 9ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஒப்புதல் அளித்தது. முஸ்லிம்கள் தரப்பு மசூதி கட்டுவதற்காக, 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவை பிறப்பித்தது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.