அரிசி நெருக்கடியை தீர்ப்பதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு இம்மாதம் 20ஆம் திகதிக்குள் 50 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி கிடைக்கப்பெறவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரிசி கையிருப்பு தொடர்பான அறிக்கைகள் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் அரிசி மாபியாவை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் தயாராகி வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
“நாங்கள் வந்து சிறிது காலத்தில் நாட்டினுள் போதுமான அரிசி உள்ளதாக விவசாயத் திணைக்களத்திடம் இருந்து எங்களுக்குத் தகவல் வந்தது.
ஆனால் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய கணக்கெடுப்பின்படி அரிசிக்கு தட்டுப்பாடு இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்தோம்.
“இரண்டு அல்லது மூன்று பேரின் ஏகபோக உரிமைக்கு இது அனுமதிக்கப்படவில்லை.
இப்போது அந்த பலம் அவர்களிடம் உள்ளது. ஏனென்றால் நம்மிடம் கட்டுப்படுத்த எந்த கருவியும் இல்லை.
நாங்கள் கடினமான நிலையில் இருக்கிறோம். தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். ஆனால் அதற்கு சிறிது காலம் எடுக்கும்” என்றார்.