திருவண்ணாமலை: மூன்றே மாதத்தில் உடைந்த புதுப்பாலம் – கட்டுமானக் குறைபாடு காரணமா? என்ன நடந்தது?

திருவண்ணாமலை, பாலம்

படக்குறிப்பு, திருவண்ணாமலையில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் ஒன்று உடைந்து விழுந்தது
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

திருவண்ணாமலை தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் ஒன்று, கடந்த திங்கள் கிழமையன்று (டிசம்பர் 2) உடைந்து விழுந்தது. அதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

நீர் வெளியேற்ற அளவைவிட அதிக வெள்ளம் ஏற்பட்டதால், பாலத்தில் சேதம் ஏற்பட்டதாக நெடுஞ்சாலைத்துறை கூறுகிறது.

பாலத்தின் கட்டுமானத்தில் முறையாக கவனம் செலுத்தியிருந்தால் சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் குறைவு, என்கின்றனர் பொறியியல் நிபுணர்கள்.

புதிதாகக் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது ஏன்? கட்டுமானத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணை உள்ளது. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால், இந்த அணையில் நீர்வரத்து அதிகரித்தது.

திங்கள் கிழமையன்று (டிசம்பர் 2), அதிகாலையில் சாத்தனூர் அணையிலிருந்து சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறந்துவிடப்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தால் தண்டராம்பட்டு அருகே உள்ள அகரம் பள்ளிப்பட்டு-தொண்டமானூர் கிராமத்தை இணைக்கும் உயர்நிலைப் பாலம், திங்கள் கிழமையன்று அடித்துச் செல்லப்பட்டது.

16 கோடி மதிப்பில் புதிய பாலம்

திருவண்ணாமலை

தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி இந்தப் பாலம் திறக்கப்பட்டது. 15.90 கோடி ரூபாய் செலவில் இந்தப் பாலம் கட்டப்பட்டதாக நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.

சுமார் 7 மீட்டர் உயரமும் 12 மீட்டர் அகலமும் 250 மீட்டர் நீளமும் கொண்டதாக, இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட 90 நாட்களில் இந்தப் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது இப்பகுதி மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “காலம் காலமாக நிற்கவேண்டிய பாலம் வெறும் 90 நாட்களில் அடித்துச் செல்லப்பட்டு மொத்தமாக உடைந்துள்ளது.

தி.மு.க ஆட்சியில் கட்டப்படுகிற பாலங்கள் எவ்வளவு தரமற்றுக் கட்டப்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி” என்று அவர் விமர்சித்துள்ளார்.

திருவண்ணாமலை, பாலம்

பட மூலாதாரம், x/@EPSTamilNadu

அமைச்சர் எ.வ.வேலு சொன்ன விளக்கம்

இதற்கு வியாழக்கிழமை அன்று (டிசம்பர் 4) பதில் அளித்து அறிக்கை வெளியிட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஏழு பாலங்கள் கட்டிய உடனே இடிந்து விழுந்த வரலாறும் உண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விழுப்புரம் தளவானூர் தடுப்பணை, நாகநதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம், படவேடு-ராமர் கோவில் சாலையில் கமண்டல நதி பாலம் ஆகியவை அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக, அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

சாத்தனூர் அணையில் வழக்கத்தைவிட நான்கு மடங்கு அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக, அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

அகரம் பள்ளிப்பட்டு-தொண்டமானூர் பாலத்தின் நீர் வெளியேற்றும் திறன் என்பது விநாடிக்கு 54 ஆயிரம் கன அடி எனக் கூறியுள்ள அமைச்சர் எ.வ.வேலு, எதிர்பாராத பேரிடர் காரணமாக அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பாலம் உடைபட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாலத்தின் ஆயுள் எவ்வளவு ஆண்டுகள்?

திருவண்ணாமலை, பாலம்

படக்குறிப்பு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்

“அளவுக்கு அதிகமாக வெள்ளம் வந்ததால், பாலத்தில் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். அதேநேரம், ஒரு பாலத்தைக் கட்டினால் அது குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் வரை தாங்கக்கூடிய அளவுக்கு வலுவாக இருக்க வேண்டும்” என்கிறார், நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் ரா.கிருஷ்ணகுமார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “பாலத்தை வடிமைக்கும்போது, அதன் அடியில் எவ்வளவு உயரத்திற்கு தண்ணீர் செல்லும் (maximum flood level) என்பதை ஆய்வு செய்து குறித்து வைப்பது வழக்கம்.

அதற்கேற்ப பாலத்தின் உயரம் தீர்மானிக்கப்படும். அணையில் உள்ள நீரின் அளவுக்கு ஏற்ப பாலத்தைக் கட்டுவதற்கு ஒப்புதல் கொடுக்கப்படும். அதன் பிறகே பணிகள் தொடங்கும்” என்றார்.

பாலம் கட்டுவதில் அரசு செய்வது என்ன?

அதைத் தொடர்ந்து, பாலம் கட்டுவதற்கான நடைமுறைகளை கிருஷ்ணகுமார் விவரித்தார்.

“நெடுஞ்சாலைத்துறையில் வடிவமைப்புப் பிரிவு ஒன்று இயங்குகிறது. பாலத்தை வடிவமைக்கும்போதே கட்டுமானத்திற்குத் தேவையான சிமென்ட், மணல், கம்பி ஆகிய கலவையின் விகிதங்கள் பற்றியும் முடிவு செய்யப்படும்.”

“திட்டத்தை வடிவமைக்கும்போது அந்தப் பகுதியில் போர் (bore) பரிசோதனை செய்ய வேண்டும். போர் போடும் இயந்திரம் மூலம் எவ்வளவு தூரத்தில் பாறை கிடைக்கிறது என்பதை ஆய்வு செய்வார்கள்.

பூமிக்கு அடியே நீண்ட தொலைவுக்கு வலுவான பகுதிகள் கிடைக்காமல் இருந்தால் பைல் (Pile) ஃபவுண்டேஷன் போட வேண்டும்” என்று அவர் விளக்கினார்.

பூமிக்கு அடியில் அஸ்திவாரம் அமைப்பதற்கு வலுவான இடம் கிடைக்காவிட்டால், அந்தக் குழியில் சிமென்ட் கலவைகளை நிரப்பி திட்டு போன்ற ஓர் அமைப்பை ஏற்படுத்துவதே பைல் ஃபவுண்டேஷன் என்று விவரித்தார் அவர்.

அந்தத் திட்டின் மீது அதிக எடை நிலைநிறுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுவதாகக் கூறும் கிருஷ்ணகுமார், பைல் ஃபவுண்டேஷனில் குறைகள் ஏற்படுகின்றனவா என்பதை ஆராய இவ்வாறு எடை பரிசோதனை(load test)செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதில் “தோல்வி ஏற்பட்டால் புது பைல் ஃபவுண்டேஷன் போட வேண்டும். அதன் பிறகே தூண்கள் எழுப்பப்பட வேண்டும். அனைத்து தூண்களையும் கட்டிய பிறகு இரும்புக் கம்பிகள் மூலம் பெட் பிளாக் (bed block) அமைக்கப்பட்டு கான்கிரீட் கலவை போடப்படும்” என்கிறார் கிருஷ்ணகுமார்.

பாலத்தின் ஆயுளுக்கு அவசியமான முதல் 28 நாட்கள்

திருவண்ணாமலை, பாலம்

படக்குறிப்பு, நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் ரா.கிருஷ்ணகுமார்

இந்தப் பணிகள் முடிந்த பிறகு கான்கிரீட் கலவையைப் பலப்படுத்த 28 நாட்கள் வரை அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்கிறார் கிருஷ்ணகுமார். பாலத்தின் ஆயுளை அதிகப்படுத்த இந்த 28 நாட்கள் என்பது அவசியமானது எனவும் அவர் கூறுகிறார்.

“அந்த கான்கிரீட் தளங்கள் மீது சாக்குப் பைகளைக் கட்டி தினசரி ஒருமுறை தண்ணீர் ஊற்ற வேண்டும். கட்டுமானத்தை வலுப்படுத்துவதற்காக, பாலத்தின் மேல் பகுதிகளில் பாத்தி கட்டி, அவற்றில் பூஞ்சை பிடிக்கும் அளவுக்குத் தண்ணீர் தேக்கி வைக்கப்பட வேண்டும்” எனவும் அவர் கூறுகிறார்.

சுமார் 200 மீட்டர் நீளமுள்ள பாலத்தைக் கட்டி முடிப்பதற்கு 2 வருடங்கள் வரையில் கால அவகாசம் தேவைப்படும் எனக் கூறும் கிருஷ்ணகுமார், “முறையான கண்காணிப்புகள் இருந்து கலவை சரியான முறையில் அமைக்கப்பட்டு இருந்தால் பாலத்தில் எந்தப் பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் விளக்கம்

திருவண்ணாமலை, பாலம்

படக்குறிப்பு, சாத்தனூர் அணையில் இருந்து 24 கி.மீ தொலைவில் இந்தப் பாலம் அமைந்துள்ளது.

ஆனால், திறந்தவெளி அடித்தளம் மற்றும் 11 வட்டவடிவ தூண்கள் அமைத்து நல்ல தரத்துடன் பாலம் கட்டி முடிக்கப்பட்டதாக, தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அணையில் இருந்து 24 கி.மீ தொலைவில் இந்தப் பாலம் அமைந்துள்ளது. தொடர் மழையால் பாம்பாறு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளமும் இணைந்து பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் காரணமானதாகக் கூறியுள்ளது.

பாலத்தின் நீரியல் வெளியேற்றம் என்பது 54,417 கன அடி எனக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசு, “சாத்தனூர் அணையில் இருந்து வழக்கமாக வெளியேறும் உபரி நீரின் அளவைவிட நான்கு மடங்கு அதிகமாக, அதாவது 2 லட்சம் கன அடிக்கு மேல் அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்பட்டது.”

“இதனால் நான்கு மீட்டர் உயரத்துக்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால் பாலம் சேதம் அடைந்து போக்குவரத்து தடைபட்டது,” என்று கூறியுள்ளதோடு, இதை விரைவில் ஆய்வு செய்து பாலத்தைச் சீரமைக்க உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

பாலத்தின் தரம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்துள்ள அமைச்சர் எ.வ.வேலு, பாலங்களைக் கட்டும்போது ஒவ்வொரு நிலையிலும் தரக் கட்டுப்பாட்டு பொறியாளர்கள் பாலத்தின் தரத்தைப் பரிசோதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.