- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அடிலெய்ட் நகரில் இன்று (டிசம்பர் 6) தொடங்கும் பகலிரவு மற்றும் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு இந்திய அணி மீது எழுந்துள்ளது.
இதே அடிலெய்ட் மைதானத்தில்தான் கடந்த முறை இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதற்குத் தகுந்த பதிலடி தர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஏற்கெனவே பெர்த் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை அதிர்ச்சித் தோல்வியடையச் செய்து இந்திய அணி மிரட்டலான வெற்றியைப் பெற்றுள்ளது. அடியெல்ட் டெஸ்டிலும் இந்திய அணியின் வெற்றிநடை தொடரும் என்று நம்பலாம்.
மூன்று வெற்றிகள் தேவை
ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணிக்கு இன்னும் 3 வெற்றிகள் தேவை.
இருப்பினும் இப்போதைய புள்ளி விவரங்கள், மற்ற அணிகளின் நிலவரங்களோடு ஒப்பிடும்போது இந்திய அணி 3-0 என்று தொடரை வென்றாலே, இந்திய அணியின் புள்ளிகள் 62.58 என உயர்ந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடுவரிசையில் ரோஹித் சர்மா?
கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் இருவரும் இந்திய அணிக்குள் வருவது பேட்டிங்கில் கூடுதல் பலத்தை அளிக்கும் என்பது சாதகமான விஷயம். அதேநேரம், பெர்த் டெஸ்டில் வரலாற்று பார்ட்னர்ஷிப் அமைத்த ஜெய்ஸ்வால், ராகுல் ஜோடியை பிரிக்காமல் ரோஹித் சர்மா நடுவரிசையில் களமிறங்குவாரா அல்லது தொடக்க வீரராக ஜெய்ஸ்வாலுடன் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
கடந்த 2003 டெஸ்ட் தொடரில் கேப்டனாக இருந்த சௌரவ் கங்குலி, நடுவரிசையில் களமிறங்கித் தனது தொடக்க வரிசையைப் பிற வீரர்களுக்காக விட்டுக் கொடுத்துள்ளார். ஏற்கெனவே ரோஹித் சர்மாவும் கடந்த 2018 தொடரில் நடுவரிசையில் களமிறங்கி விளையாடியுள்ளார்.
ஆதலால், ரோஹித் சர்மா நடுவரிசையில் களமிறங்கினால் பேட்டிங் வரிசை இன்னும் பலப்படும். “தொடக்க ஜோடி கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் பேட்டிங் ஃபார்மை குலைக்காமல் இருந்தாலே சிறப்பாக இருக்கும். பும்ரா கேப்டன்சியே தொடரட்டும், ரோஹித் வழக்கமான வீரராகவே வரலாம்” என முன்னாள் வீரர் சத்தேஸ்வர் புஜாரா தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
ஆதலால், அணிக்குள் வரும் ரோஹித் சர்மா, சுப்மன் கில் இருவரால் பேட்டிங் அசுரபலம் பெற்றாலும், இருவரும் எந்த வரிசையில் களமிறங்குவார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பகலிரவு டெஸ்ட் யாருக்கு சாதகம்?
பகலிரவு டெஸ்டை பொருத்தவரை ஆஸ்திரேலிய அணி வலிமையாகத் திகழ்கிறது. உலக கிரிக்கெட்டில் 10க்கும் அதிகமான பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அணியாகவும் ஆஸ்திரேலிய அணி இருந்து வருகிறது.
இதுவரை உலகளவில் 22 பகலிரவு டெஸ்ட்(பிங்க் பால் டெஸ்ட்) போட்டிகள் நடந்துள்ளன. அதில் ஆஸ்திரேலிய அணி மட்டும் 12 போட்டிகளில் விளையாடி 11 வெற்றிகளைப் பெற்றுள்ளது, ஒரு ஆட்டத்தில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது.
பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடி அதிக அனுபவம் கொண்ட அணியாக ஆஸ்திரேலிய அணி இருந்து வருகிறது. பிங்க் பந்தில் நடத்தப்படும் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமானது, மின்னொளியில் அதிகமாக பவுன்ஸ் ஆகும் பிங்க் பந்தை சமாளித்து பேட் செய்வது பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும்.
இந்திய அணி இதுவரை 4 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 போட்டிகளில் வென்றுள்ளது, ஒரு ஆட்டத்தில் தோற்றுள்ளது. இந்திய அணி தோல்வியடைந்த பகலிரவு போட்டியும் அடிலெய்ட் டெஸ்ட் தான். இங்குதான் 36 ரன்களில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் ஆல்-அவுட் ஆகி மோசமான தோல்வியைச் சந்தித்தது.
ஆதலால் பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் இந்திய அணியைவிட ஆஸ்திரேலிய அணி அதிக அனுபவமும், வலிமையும் கொண்டதாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அடிலெய்ட் ஆடுகளம் எப்படி?
அடிலெய்ட் ஆடுகளம் பொதுவாக பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாகத்தான் இருக்கும். ஆனால், மின்னொளியில் பிங்க்-பந்தில் நடத்தப்படும் டெஸ்ட் போட்டியில் பேட்டர்களின் திறமையைச் சோதிக்கும் களமாகவே இது இருக்கும்.
ஏனென்றால், பிற்பகலில் சூரிய ஒளி இருக்கும்வரை பிங்க் பந்து ஒருவிதமாக இருக்கும், ஆனால் மின்னொளியில் பந்து வீசும்போது பிங்க் பந்து வேறுவிதமாகச் செயல்படும்.
வழக்கமான சிவப்பு கூக்கபுரா பந்தைப் போல் இல்லாமல் பிங்க் கூக்கபுரா பந்து அதிகமான பவுன்சரை மின்னொளியில் வழங்கும், சீமிங், ஸ்விங் இருக்கும் என்பதால், பகல் நேரத்தில் பேட் செய்வதைவிட, மின்னொளியில் பேட் செய்வது பேட்டர்களுக்கு சவாலாகவே இருக்கும்.
அதிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் மின்னொளியில் பந்துவீசும்போது வழக்கத்தைவிட அதிகமான ஸ்விங்கை பிங்க் பந்தில் செய்ய முடியும். ஆதலால் மின்னொளியில் பேட் செய்வதுதான் பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். குறிப்பாக மிட்செல் ஸ்டார்க், பும்ராவின் பந்துகளைச் சமாளிப்பது இரு அணிகளின் பேட்டர்களுக்கும் பெரிய சவாலாக இருக்கும்.
மாற்றங்கள், காயங்கள்
இரண்டாவது டெஸ்டில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இந்திய அணியைப் பொருத்தவரை ரோஹித் சர்மா, சுப்மன் கில் இருவரும் அணிக்குள் வருவதால் தேவ்தத் படிக்கல், ஜூரெல் வெளியேற்றப்படுவார்கள்.
அடிலெய்ட் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமானது என்பதால், இந்த டெஸ்டிலும் அஸ்வினுக்கு வாய்ப்பிருக்காது, வாஷிங்டன் சுந்தரே களமிறங்கலாம் எனத் தெரிகிறது.
ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட்டுக்கு ஏற்பட்ட காயத்தால் இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக போட்லாந்தும், காயத்தால் அவதிப்படும் மிட்செல் மார்ஷுக்கு பதிலாக பியூ வெப்ஸ்டரும் சேர்க்கப்படலாம்.
இதில் நட்சத்திர பேட்டர் ஸ்டீவ் ஸ்மித்தும் பயிற்சியின்போது வலது கை பெருவிரலில் காயம்பட்டு பயிற்சியைப் பாதியில் நிறுத்திச் சென்றதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளனன. இதனால் ஸ்மித் விளையாடுவாரா என்பது கடைசி நேரத்தில்தான் தெரியும்.
தீவிரப் பயிற்சியில் இந்திய அணி
அடிலெய்ட் டெஸ்டில் கடந்த முறை 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி பெரிய அவமானத்தை இந்திய அணி சந்தித்தது. இதனால் இந்த முறை அடிலெய்டில் தகுந்த பதிலடி தர வேண்டும் என்ற வேகத்தோடு தீவிரமான பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர்.
மின்னொளியில் நடத்தப்பட்ட ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று நம்பிக்கையைப் பெற்றுள்ளது. சுப்மன் கில் அரைசதம், ராகுல், ஜெய்ஸ்வாலின் அபார தொடக்கம் ஆகியவை நம்பிக்கையை ஏற்படுத்தியது.
ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் நியூசிலாந்து தொடரிலிருந்து தொடர்ந்து இந்த ஆட்டத்திலும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் இருவரும் பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி பேட் செய்தனர்.
பந்துவீச்சிலும் ஹர்சித் ராணா, நிதிஷ் ரெட்டி, ஆகாஷ் தீப் ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசினர். ஒட்டுமொத்தத்தில் இந்திய அணி தீவிரமான பயிற்சியுடன் வலுவாகத் தயாராகியுள்ளது.
ரோஹித்தின் மோசமான ஃபார்ம்
இந்த ஆண்டில் நடந்த பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா 2 சதங்கள், 2 அரைசதங்கள் உள்பட 588 ரன்கள் சேர்த்து 29 சராசரி வைத்துள்ளார். 2019ஆம் ஆண்டுக்குப் பின் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி காலாண்டர் ஆண்டில் மோசமாகக் குறைந்தது இதுதான் முதல்முறை.
அதிலும் வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட், நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் என 5 போட்டிகளிலும் ரோஹித் சர்மா 133 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். கடந்த 10 இன்னிங்ஸில் ரோஹித் சர்மா ஒரு அரைசதம் மட்டுமே அடித்து 13 சராசரி மட்டுமே வைத்துள்ளார்.
உள்நாட்டில் நடந்த 5 டெஸ்ட்களிலும் ரோஹித் சர்மா 6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18 மற்றும் 11 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ரோஹித் சர்மா இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் பேட் செய்து, 833 ரன்கள் சேர்த்து, 33 ரன்கள் சராசரி வைத்துள்ளார். இதில் 3 சதங்கள், 4 அரைசதங்கள் அடங்கும்.
இந்தச் சூழலில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் ரோஹித் சர்மா 3 ரன்னில் ஆட்டமிழந்தது அவரின் பேட்டிங் ஃபார்ம் மீதான கவலையை அதிகப்படுத்துகிறது.
ரோஹித் சர்மா தொடக்க வீரராகக் களமிறங்காமல் நடுவரிசையில் களமிறங்கினால் நடுவரிசை பேட்டிங் ஸ்திரமடையும், வலுவடையும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் கூட்டணி சிறப்பாக பேட் செய்து வருவதால், அவர்களின் வரிசையை உடைக்காமல் ரோஹித் சர்மா பின்வரிசையில் ஆடினால் இழந்த ஃபார்மை மீட்கலாம்.
ரசிகர்களை ஈர்த்த இந்திய அணி
அடிலெய்ட் மைதானத்தில் இந்திய அணி கடந்த சில நாட்களாக எடுக்கும் தீவிரப் பயிற்சியை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகிறார்கள்.
குறிப்பாக பும்ராவின் பந்துவீச்சையும், கோலியின் பேட்டிங்கையும் வெகுவாக ரசித்தனர். பயிற்சியைக் காணவே ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்த நிலையில் போட்டியின்போது அரங்கு முழுவதும் ரசிகர்கள் இருப்பார்கள் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியை விளையாடி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2022ஆம் ஆண்டு பெங்களூருவில் இலங்கை அணிக்கு எதிராக பிங்க் பந்தில் டெஸ்ட் போட்டி ஆடி இந்திய அணி வென்றது. அதன் பிறகு விளையாடவில்லை. ஆனால், ஆஸ்திரேலிய அணி ஆண்டுதோறும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடி அதிக அனுபவத்தைப் பெற்றுள்ளது.
ஆனால் பயிற்சியின்போது பும்ரா பந்துவீச அதை கோலி எதிர்கொண்டு பேட் செய்ததை ரசிகர்கள் ரசித்தனர். பும்ராவின் “பாடிலைன்” பந்துவீச்சு, யார்க்கர், ஸ்விங் பந்துகளை கோலி சிறப்பாக எதிர்கொண்டு ஆடினார். ரிஷப் பந்த், ரோஹித் சர்மா, சுப்மன் கில், ராகுல் ஆகியோரும் பும்ரா பந்துவீச்சை எதிர்கொண்டு பேட் செய்தனர். வாஷிங்டன் சுந்தரின் சுழற்பந்து வீச்சிலும் பேட் செய்து இந்திய பேட்டர்கள் பயிற்சி எடுத்தனர்.
வலுவான நிலையில் இந்திய அணி
பெர்த் டெஸ்டில் பெற்ற வெற்றி இந்திய அணிக்கு கூடுதல் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. இதில் ரோஹித் சர்மா, சுப்மன் கில் இருவரும் 2வது டெஸ்டில் அணிக்குள் வருவது பேட்டிங்கில் கூடுதல் பலத்தை வழங்கும்.
ராகுல், ஜெய்ஸ்வால் தொடக்க வரிசையில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதால் இருவரும் 2வது டெஸ்டிலும் ஆட்டத்தைத் தொடங்குவார்கள் என்று தெரிகிறது.
பெர்த் டெஸ்டில் ராகுல், ஜெய்ஸ்வால் கூட்டணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வரலாறு படைத்தனர். இதனால் இவர்களின் ஃபார்மை குலைக்க மாட்டார்கள் எனத் தெரிகிறது.
கோலியின் ரெக்கார்ட்
அதேபோல கோலியும் சதம் அடித்து இழந்த ஃபார்மை மீட்டுள்ளது, இந்திய அணிக்குப் பெரிய பலமாகும். கடந்த சில நாட்களாக கோலி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் கோலியின் மிரட்டலான ஃபார்ம் அடிலெய்ட் டெஸ்டிலும் தொடரும்.
இதே அடிலெய்ட் டெஸ்டில் பிங்க் பந்தில் கோலி அரைசதம் அடித்து 73 ரன்கள் சேர்த்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் பிங்க் பந்தில் கோலி ஒரு சதம் அடித்து, 277 ரன்கள் சேர்த்துள்ளார்.
பயிற்சி ஆட்டத்தில் சுப்மன் கில் அரைசதம் அடித்தது பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. ரிஷப் பந்த் அனாசயமாக ஆஸ்திரேலிய பந்துவீச்சைச் சமாளித்து ஆடுவதும் வெற்றி வேட்கையில் இருக்கும் இந்திய அணிக்கு பக்கபலமாக இருக்கும்.
ரோஹித் சர்மா எவ்வாறு பேட் செய்வார் என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது. நிதிஷ் குமார் ரெட்டி முதல் டெஸ்டில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறக் காரணமாக அமைந்தார்.
இந்திய அணியில் தொடக்க வரிசையில் ராகுல், ஜெய்ஸ்வாலுக்கு பின், 3வது வரிசையில் சுப்மன் கில்லும், நான்காவதாக விராட் கோலியும், 5வது வரிசையில் ரோஹித் சர்மாவும் களமிறங்குவார்கள்.
அதன்பின் கீழ்வரிசையில் ரிஷப் பந்த், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ராணா என வலுவான பேட்டிங் வரிசையை இந்திய அணி கட்டமைத்துள்ளது.
இதில் ராணா வரை இந்திய அணியில் ஓரளவுக்கு நிலைத்து பேட் செய்யக்கூடிய பேட்டர்கள் இருப்பது இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும். ஆனால் மற்ற டெஸ்ட் போட்டியைப் போன்று பகலிரவு டெஸ்ட் போட்டி இருக்காது. இரவு நேரத்தில் பிங்க் பந்து எகிறும் என்பதால் பேட்டர்களுக்கு சவால் அதிகம். இந்திய அணி தீவிரமாக எடுத்து வரும் பயிற்சியால் அந்த சவாலைச் சமாளிக்க முடியும் என நம்பலாம்.
பந்துவீச்சில் பும்ரா தலைமையில் சிராஜ், ராணா, நிதிஷ் குமார் ஆகியோரின் வேகப்பந்துவீச்சு முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய பேட்டர்களை மிரட்டியது. பெர்த் டெஸ்டிலும் பும்ராவின் மின்னல் வேகப் பந்துவீச்சு, ராணாவின் மிரட்டல் வேகம் தொடரும் என நம்பலாம். பயிற்சி ஆட்டத்தில் ராணா, நிதிஷ் சிறப்பாகப் பந்துவீசியது நம்பிக்கை அளிக்கிறது.
அச்சத்தில் ஆஸ்திரேலிய அணி
பெர்த் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்வி ஆஸ்திரேலிய அணிக்கு சற்று அச்சத்தை அளித்துள்ளது. இதனால் லாபுஷேன், ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகிய 3 பேரும் கடந்த வாரத்தில் இருந்து பிங்க் பந்தில் தீவிரமாக பேட்டிங் பயிற்சி எடுத்துள்ளனர்.
லாபுஷேன், ஸ்மித் இருவரின் ஃபார்மும் இந்த காலண்டர் ஆண்டில் சுமாராகவே இருந்து வருகிறது, பெர்த் டெஸ்டில் இந்திய வீரர்களின் மின்னல் வேகப் பந்துவீச்சுக்கு விரைவாக இரையாகினர்.
டிராவிஸ் ஹெட் மட்டும் கடந்த டெஸ்டில் ஓரளவுக்கு பேட் செய்தார். தொடக்க வீரர் நாதன் மெக்சீன், மிட்செல் மார்ஷ், கவாஜா, அலெக்ஸ் கேரே என வலுவான பேட்டிங் வரிசையை வைத்துள்ளது. பிங்க் பந்து டெஸ்டில் விளையாடி இவர்களுக்கு அனுபவம் இருப்பதால், சிறப்பாக ஆடுவார்கள் என நம்பலாம். ஆனாலும், இந்திய அணியின் ஃபார்மை பார்த்து அச்சத்துடனே ஆஸ்திரேலியா அடிலெய்ட் டெஸ்டிலும் விளையாடும்.
அதேபோல பந்துவீச்சில் ஸ்டார்க், கம்மின்ஸ் இருவரும் பிங்க் பந்தில் சிறப்பாகப் பந்து வீசக்கூடியவர்கள். ஹேசல்வுட் காயத்தால் விலகியது அந்த அணிக்குப் பின்னடைவுதான், இருப்பினும் போலந்த் வருகை எதிர்பார்த்த பலனைத் தருமா என்பது இந்த டெஸ்டில் தெரியவரும்.
மிட்செல் மார்ஷ் காயத்தால் விளையாடமாட்டார் என்ற தகவலை ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்த நிலையில், கடைசி நேரத்தில்தான் அது உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளன. ஒருவேளை மார்ஷ் விளையாடினாலும் பந்துவீசமாட்டார் என்றும், மார்ஷ் விளையாடாவிட்டால் அவருக்குப் பதிலாக பியூ வெப்ஸ்டர் களமிறங்கலாம் எனத் தெரிகிறது.
இந்திய ப்ளேயிங் லெவன்(உத்தேசம்)
ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா(கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, சுந்தர் அல்லது ஆர்.அஸ்வின், ராணா அல்லது ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, சிராஜ்.
ஆஸ்திரேலிய ப்ளேயிங் லெவன்(உத்தேசம்)
நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரே, மிட்செல் மார்ஷ் அல்லது பியூ வெப்ஸ்டர், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), போலந்த், மிட்ஷெல் ஸ்டார்க், நாதன் லேயான்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.