‘சிறுபூச்சிகளை உண்டன, சொந்த பற்களை கூட விழுங்கின’ – டைனோசர்கள் பற்றிய புதிரை அவிழ்க்கும் ஆய்வு முடிவுகள்

டைனோசர்

பட மூலாதாரம், Marcin Ambrozi/Handout via REUTERS

படக்குறிப்பு, தாவரங்களை உண்ணும் டைனோசரான சாரோபோடோமார்ப்பை பற்றிய ஒரு கலைப்படைப்பு
  • எழுதியவர், அலெக்ஸாண்ட்ரா மார்டின்ஸ்
  • பதவி, பிபிசி உலக செய்திகள்

உலகில் மிகப்பெரிய ஆதிக்கத்தை ஏற்படுத்திய உயிரினமான டைனோசர்கள், 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த எரிகல்லால் அழிந்து போனதாக அறியப்படுகிறது.

ஆனால், பல்வேறு உயிரினங்களை பின்னுக்குத் தள்ளி எப்படி இந்த டைனோசர்கள் சக்திவாய்ந்த ஒரு உயிரினமாக உருவெடுத்தது என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே இருந்தது.

ஆனால், 20 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் கழிவுகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளதாக, ‘நேச்சர்’ என்னும் ஆய்விதழில் வெளியான கட்டுரை இதழின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த புதைபடிவ கழிவுகளை ப்ரோமாலைட் (bromalites) எனக் குறிப்பிடுவர்.

இவற்றைக்கொண்டு, அப்போது இருந்த உணவுச் சங்கிலி பற்றியும், அதில் இடம்பெற்றிருந்த பூச்சிகள் முதல் அனைத்து உயிரினங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“அந்த டைனோசரின் கழிவில் அவை சாப்பிட்ட பூச்சிகள் கூட இருந்தன. சில பூச்சிகள் வெறும் 1 மில்லி மீட்டர் நீளம்தான் இருந்தன, ஆனால் அதில் இருந்த சிறிய கால்கள், ஆண்டெனா (உணர்கொம்புகள்) போன்ற சிறிய அமைப்புகள் கூட இன்னும் அழியாமல், 23 கோடி ஆண்டுகளுக்குப் பின்னும் அப்படியே இருந்தது!”, என்று பிபிசி உலக சேவையிடம் பேசிய ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தின் புதைபடிவ ஆராய்ச்சியாளரும் இந்த ஆய்வை வழிநடத்தியவருமான மார்ட்டின் க்வார்ன்ஸ்ட்ரோம் கூறினார்.

“அந்த புதைபடிவ கழிவுகளில் நன்றாக மெல்லப்பட்ட எலும்பு துகள்களும் நொறுக்கப்பட்ட பற்களையும் கண்டுபிடித்துள்ளோம். அதாவது, ஆர்கோசோர் ஸ்மோக் என்னும் டைனோசர், கழுதைப்புலிகளைப் போல எலும்புகளை நன்றாக மென்று அதிலிருந்த சத்துக்களை உறிஞ்சு உண்டுள்ளது. ஆனால், அதை கடிக்கும்போது அதனுடைய பற்களையும் விழுங்கியுள்ளது,” என்றார் ஆராய்ச்சியாளர் க்வார்ன்ஸ்ட்ரோம்.

“கிடைத்துள்ள அனைத்து டைனோசர் கழிவுகளையும் வைத்துப்பார்த்தால், அந்த காலகட்டத்தின் மொத்த வாழ்க்கை சூழலையும் இது காட்டுகிறது”.

டைனோசர்

பட மூலாதாரம், Grzegorz Niedźwiedzki

படக்குறிப்பு, விஞ்ஞானிகள் 100 கிலோவுக்கும் அதிகமான புதைபடிவ டைனோசர் கழிவுகளை ஆய்வு செய்தனர்

டைனோசர்களின் எழுச்சி

டைனோசர்கள் சுமார் 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம். ஆனால், அப்போது வேறுமாதிரி பெரிதாக இருந்த முதலை மற்றும் யானை போன்ற விலங்குகளுடன் ஒப்பிடும்போது டைனோசர்கள் சிறிதாக இருந்தன.

ஆனால், 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் டைனோசர்கள் உலகில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தியது. மற்ற விலங்குகள் மிகவும் சிறிதாக இருந்தன.

“டைனோசர்களின் எழுச்சியைப் பற்றி முற்றிலும் புதிய கோணத்தில் நாங்கள் அணுகினோம்,” என்று விளக்கினார் க்வார்ன்ஸ்ட்ரம்.

“அவற்றின் பரிணாம வளர்ச்சியில் முதல் 3 கோடி ஆண்டுகளில் உலகில் டைனோசர்களின் பங்கு என்னவாக இருந்தது என்பதை பற்றி அறிய, அவை உண்ட உணவுகளின் மாதிரிகளை ஆராய்ந்தோம்.”

அந்த குறிப்பிட்ட காலத்தில் இருந்த உயிரினங்களின் புதைபடிவங்கள் அதிக அளவில் போலந்து நாட்டில் கிடைத்துள்ளதால், போலந்தை மையமாகக் கொண்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

“100 கிலோவை விடவும் அதிகமான டைனோசர் கழிவுகளை நாங்கள் ஆராய்ந்தோம்,” என்கிறார் உப்சாலா பல்கலைக்கழகம் மற்றும் போலந்து நாட்டின் புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதைபடிவ ஆராய்ச்சியாளர் கெர்ஸெகோர்ஸ் நியெட்ஸ்வியெட்ஸ்கி. இவர் இந்த ஆய்வின் மற்றொரு ஆசிரியர் ஆவார்.

டைனோசர்

பட மூலாதாரம், Martin Qvarnström

படக்குறிப்பு, ப்ரோமாலைட் என்னும் புதைபடிவ கழிவுகள்

க்வார்ன்ஸ்ட்ரோம் மற்றும் அவரது குழுவினர் 500-க்கும் மேலான புதைபடிவ கழிவுகளையும் அதில் இருந்தவற்றையும் ஆராய்ந்தனர்.

ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு வகையான மைக்ரோஸ்கோப்களை இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தியுள்ளனர். மேலும் சிங்க்ரோடிரான் மைக்ரோடோமோகிராஃபி (synchrotron microtomography) என்னும் வழிமுறையை கையாண்டனர். இதன் மூலம், புதைபடிவங்களுள் இருப்பதை விரிவாகக் காண ஒரு கருவியை பயன்படுத்தினர்.

அந்த கழிவுகளை ஆராய்ந்ததில், “எந்தெந்த விலங்குகள் எதை உண்டது என்பதை பற்றியும், இது எத்தனை ஆண்டுகளுக்கு முன் இருந்தது என்பதைப் பற்றியும் அறிய முடிந்தது,” என்கிறார் க்வார்ன்ஸ்ட்ரோம்.

இந்த கழிவுகள் எந்த விலங்குடையது என்பதை ஆராய்ச்சியாளர்கள் எவ்வாறு கண்டுபிடிக்கின்றனர்?

புதைபடிவ எலும்புகளும் கால்தடங்களும் அந்த காலத்தில் வாழ்ந்த விலங்குகள் குறித்த தகவல்களை வழங்கும்.

கிடைத்த கழிவுகளின் அளவு மற்றும் வடிவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், அழிந்த இந்த விலங்குகளின் செரிமான அமைப்புகள், தற்போது வாழும் விலங்கு குடும்பத்தில் ஏதாவது விலங்குடன் ஒத்துப்போகிறதா என்பதை ஒப்பிடுவதன் மூலமும் விலங்குகளை அடையாளம் காணுகின்றனர்.

டைனோசர்

பட மூலாதாரம், Grzegorz Niedźwiedzki

படக்குறிப்பு, 20 கோடி ஆண்டுகளுக்கும் மேலான அதிக எண்ணிக்கையிலான புதைபடிவங்களைக் கொண்ட போலந்தின் ஒரு பகுதியில் இந்த ஆய்வு கவனம் செலுத்தியது

இந்த ஆராய்ச்சி தொடங்கியதில் இருந்து புதைபடிவங்களின் உள் இருப்பவற்றின் எண்ணிக்கை மற்றும் வகைகள் அதிகரித்துக் கொண்டே இருந்ததை இந்த குழு கண்டுபிடித்தது.

இது மிகவும் வேறுபட்ட உணவுப் பழக்கங்களை கொண்ட டைனோசர்கள், ட்ரையாசிக் காலத்தின் பிற்பகுதியில் (23.7 கோடி முதல் 20.1 கோடி ஆண்டுகள் வரையிலான காலகட்டம்) ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின என்பதை காட்டுகிறது.

புதைபடிவங்களையும் அப்போது இருந்த தாவரங்களை பற்றிய தரவுகளையும் ஒப்பிட்டு, டைனோசர்களின் எழுச்சி அப்போது உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் மற்றும் அதன் தக்கவைக்கும் நிலையைப் பொறுத்துதான் அமைந்துள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உதாரணமாக, காலநிலை மாற்றத்தால் ஈரப்பதம் அதிகரித்து, கிடைக்கும் தாவரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்.

நிலத்தில் வாழ்ந்த மற்ற விலங்குகளோடு ஒப்பிடுகையில், காலநிலை மாற்றத்திற்கும் உணவு பழக்கங்களின் மாற்றத்திற்கும் டைனோசர்கள் நன்றாக தகவமைத்துக்கொள்ள முடிந்தது.

அதிகரித்த எரிமலை வெடிப்புகள் தொடர்பான பிற சுற்றுச்சூழல் மாற்றங்களால், தாவரங்களை உண்ட டைனோசர்கள் பெரிதும் வீழ்ச்சியை சந்தித்தது, ஏனென்றால் எரிமலை வெடிப்புகளால் தாவரங்களின் அளவு குறைந்துவிட்டது.

இதன் காரணமாகதான் மிகப் பெரிய அளவில் மற்ற விலங்குகளை உண்ணும் டைனோசர்கள் மட்டும் பரிணாம வளர்ச்சி அடைந்தன.

டைனோசர்

பட மூலாதாரம், Sigrid Ejemar

படக்குறிப்பு, ஆராய்ச்சியாளர் மார்டின் க்வார்ன்ஸ்ட்ரோம்

“இதன் மூலமாக டைனோசர்களின் எழுச்சிக்குப் பல ஆண்டுகள் ஆனது என்பதையும், அது மிகவும் சிக்கலானதாக இருந்தது என்பதையும் நாங்கள் அறிந்தோம்,” என்கிறார் க்வார்ன்ஸ்ட்ரோம்.

“டைனோசர்கள் ஒரே இரவில் ஒன்றும் வளர்ச்சியடையவில்லை, அது மற்ற உயிரினங்களோடு கடுமையாக போட்டியிட்டது. கொஞ்சம் அதிர்ஷ்டமும் அவர்களுக்குக் கை கொடுத்தது.”

ஆரம்பத்தில் தோன்றிய டைனோசர்களின் இந்த உலகில் வாழ்ந்த வழிமுறைகள் மிக முக்கியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

“குறிப்பிட்ட உணவுகளை மட்டும் உண்ணும் விலங்குகள் காலநிலை மாற்றத்தால் பெரும் அழிவை சந்தித்தன.”

அதற்கு மாறாக, “வேறுபட்ட உணவு முறையை கொண்ட விலங்குகள் இந்த காலநிலை மாற்றத்தை நன்றாக சமாளித்தன, அதனால்தான் தொடக்கத்தில் வாழ்ந்த டைனோசர்கள் பரிணாம வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்தன”.

இந்த ஆய்வின் மூலம் பல்வேறு சிரமங்கள் ஏற்படும்போது வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதை பற்றி நமக்கு உணர்த்தும்.

“முந்தைய காலத்தில் வனவிலங்குகளுக்கு ஏற்பட்ட இந்த மாற்றங்களை புரிந்துகொண்டால்தான் தற்பொழுது நாம் சந்திக்கும் காலநிலை மாற்றத்தை சமாளிப்பது எப்படி என்பது நமக்கு தெரியவரும்,” என்று பிபிசி உலக சேவையிடம் க்வார்ன்ஸ்ட்ரோம் தெரிவித்தார்.

இனி வரும் காலங்களில் வெவ்வேறு இடங்களில் கிடைக்கும் கழிவுகளிலும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள்.

“இந்த ஆய்வு மாதிரியை மற்ற இடங்களில் வாழ்ந்த டைனோசர்களின் கழிவுகளை வைத்தும் சோதிக்க திட்டமிடுகிறோம். முதன் முதலில் டைனோசர்கள் கண்டறியப்பட்ட இடமான தென் அமெரிக்காவில் ஆராய்ச்சி மேற்கொள்ள ஆவலாக இருக்கிறோம்.”

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.