மகாராஷ்டிரா: கவுன்சிலர் முதல் முதலமைச்சர் வரை – தேவேந்திர ஃபட்னவிஸின் அரசியல் பயணம்
- எழுதியவர், மயூரேஷ் கொன்னூர் மற்றும் தீபாலி ஜக்தாப்
- பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்கள்
மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணியின் வரலாற்று வெற்றி மற்றும் பத்து நாட்கள் நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு பா.ஜ.கவின் சட்டப்பேரவைத் தலைவராகவும், மாநிலத்தின் அடுத்த முதல்வராகவும் ஃபட்னவிஸ் இருப்பார் என்று பா.ஜ.க அறிவித்தது.
இந்நிலையில், இன்று ஃபட்னவிஸ் மகாராஷ்டிரா முதல்வராகவும், துணை முதல்வர்களாக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் ஆகியோரும் பதவியேற்றனர்.
முதல்வரைத் தேர்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து மும்பை சென்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஃபட்னவிஸின் பெயருக்கு ஒப்புதல் அளித்தார்.
பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் ஃபட்னவிஸின் பெயரை முன்மொழிந்தார் மற்றும் பங்கஜா முண்டே இதை ஆதரித்தார்.
சரியாக நான்கு மாதங்களுக்கு முன்பு மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்தபோது மகாராஷ்டிராவில் பா.ஜ.கவால் இரட்டை இலக்கத்தைக்கூட தொட முடியவில்லை. இந்த நிலையில் தேவேந்திர ஃபட்னவிஸின் எதிர்காலம் குறித்து ஊகங்கள் கிளம்பின.
பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கலாம் அல்லது கட்சித் தலைவராக ஆக்கலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் கிரிக்கெட்டை போலவே அரசியலிலும் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து முதல்வர் பதவிக்கான போட்டியில் தேவேந்திர ஃபட்னவிஸின் பெயர் மீண்டும் இடம்பெற்றது.
கடந்த 2019ஆம் ஆண்டில் தேவேந்திர ஃபட்னவிஸ் வெளியிட்ட அறிக்கை சமூக ஊடகங்களில் அடிக்கடி காணப்படும் ஒன்றாக உள்ளது. அதில் அவர் ‘நான் கடல், மீண்டும் வருவேன்’ என்று கூறியிருந்தார்.
பிரதமர் மோதி, ஆர்.எஸ்.எஸ் உடன் நெருங்கிய உறவு
ஃபட்னவிஸுக்கு பிரதமர் நரேந்திர மோதியுடன் நல்லுறவு உள்ளதோடு கூடவே ஆர்.எஸ்.எஸ். விரும்பும் தலைவராகவும் அவர் உள்ளார். பா.ஜ.கவின் தேசிய அளவிலான பெரிய தலைவர்களில் ஒருவராகவும் அவர் கருதப்படுகிறார்.
மராட்டிய இயக்கத்தின் முகமான மனோஜ் ஜாரங்கேவின் கோபத்தால் ஏற்பட்ட இழப்பை மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சந்திக்க நேரிட்டது.
மராத்வாடா உள்பட மாநிலத்தின் பெரும்பாலான இடங்களை பா.ஜ.க இழந்தது. கூடவே வெற்றி எண்ணிக்கை இரண்டு இலக்கங்களைக்கூட எட்டவில்லை.
மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட இந்தப் பின்னடைவு ஃபட்னவிஸுக்கு பல வழிகளில் பெரிய அரசியல் தோல்வியாக அமைந்தது. இந்தத் தேர்தலின்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தாலும், ஃபட்னவிஸ் மகாயுதியின் தலைவராகப் பார்க்கப்பட்டார்.
இந்தத் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்ற தேவேந்திர ஃபட்னவிஸ் துணை முதல்வர் பதவியை விட்டு விலகி கட்சிக்காகப் பணியாற்ற முன்வந்தார். ஆனால் துணை முதல்வராக இருந்தும்கூட தோல்வியின் பொறுப்பு தனது தலையில் சுமத்தப்படுவதில் அவர் கோபத்தில் இருந்ததாகவும் அப்போது பேச்சு அடிபட்டது.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகும், ஃபட்னவிஸை அரசை விட்டு வெளியே செல்ல பா.ஜ.க அனுமதிக்கவில்லை. ஃபட்னவிஸ் அரசில் தொடர்ந்தார். ஆனால் அதன் பிறகு தேவேந்திர ஃபட்னவிஸ் தனது பாணியை மாற்றினார்.
மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைப் பின்னுக்குத் தள்ள ஃபட்னவிஸ் பல்வேறு உத்திகளைச் செயல்படுத்த விரும்பினார்.
கடந்த சில மாதங்களில் மகாராஷ்டிரா அரசியலில், குறிப்பாக பா.ஜ.கவின் அரசியலில் பல பெரிய மாற்றங்களைப் பார்க்க முடிந்தது.
இதற்கிடையில் தேவேந்திர ஃபட்னவிஸ் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டார். ஃபட்னவிஸ் டெல்லிக்கு அனுப்பப்படுவார், அவர் தேசியத் தலைவராக ஆக்கப்படுவார் அல்லது அவர் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்றும் ஊகங்கள் கிளம்பின். ஆனால் இவை அனைத்திற்கும் மத்தியில் தேவேந்திர ஃபட்னவிஸ் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்திக் கொண்டிருந்தார்.
மக்களவைத் தேர்தலின்போது சங்கம் முனைப்புடன் செயல்படவில்லை என்று சொல்லப்பட்டது. ஃபட்னவிஸின் சந்திப்புகளுக்குப் பிறகு சங்கத்தின் செயல்பாடு தீவிரமடைந்தது.
மாநிலத்தில் தலைமைப் பொறுப்பு பகிரப்படக்கூடும் என்றும் விவாதம் தொடங்கியது. ஆனால் இறுதியில் பா.ஜ.கவின் மத்திய தலைமை மற்றும் சங்கத்தின் தலையீடு காரணமாக பா.ஜ.கவின் கடிவாளம் தேவேந்திர ஃபட்னவிஸின் கைகளுக்கே தற்போது வந்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தின்போது அமித் ஷாவின் வருகைகள், பா.ஜ.கவின் மத்திய தலைமையுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் நெருக்கம், அஜித் பவாரின் அவ்வப்போதான அதிருப்தி மற்றும் ஃபட்னவிஸுக்கு எதிராக பா.ஜ.கவுக்குள் கோஷ்டி பூசல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன.
இதையெல்லாம் எதிர்கொண்ட தேவேந்திர ஃபட்னவிஸ், சட்டப்பேரவைத் தேர்தலின் மையத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் வெற்றி பெற்றார்.
குறிப்பாக வேட்பாளர் தேர்வில் தேவேந்திர ஃபட்னவிஸின் செல்வாக்கு அதிகமாகவே தெரிந்தது. அதே நேரம் மகாயுதி கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி பா.ஜ.க அதிகபட்ச தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
மராத்தா இட ஒதுக்கீடு மற்றும் ஒபிசி பிரச்னை எப்படி கையாளப்பட்டது?
மக்களவைத் தேர்தலில் மராத்தா இட ஒதுக்கீடு விவகாரம் காரணமாக பா.ஜ.க பின்னடைவைச் சந்திக்க நேரிட்டது. சட்டப்பேரவையில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பா.ஜ.கவுக்கு முன் எந்தக் கேள்விகள் எழுந்தாலும் மனோஜ் ஜாரங்கே பற்றி பதில் சொல்வதை அது தவிர்த்து வந்தது.
ஆனால் ’ஜாரங்கே ஃபட்னவிஸை மட்டுமே குறிவைக்கிறார்’ என்று ஃபட்னவிஸுக்கு நெருக்கமான பிரசாத் லாட் மற்றும் பிரவீன் தரேகர் கேள்விகளை எழுப்பினர்.
இதன்போது லக்ஷ்மண் ஹாகேவின் இயக்கம் ஆரம்பமானது. ஒருபுறம் மராத்தா இட ஒதுக்கீடு கோரி ஜாரங்கே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது மறுபுறம், ‘ஓபிசி உரிமைகள்’ கோரி போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார் ஹாகே.
ஃபட்னவிஸ் மனோஜ் ஜாரங்கேவுக்கு எதிராக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால் லக்ஷ்மண் ஹாகே இட ஒதுக்கீடு பிரச்னையை எழுப்பினார் மற்றும் மனோஜ் ஜாரங்கேவை கடுமையான வார்த்தைகளில் விமர்சிக்கத் தொடங்கினார். மனோஜ் ஜாரங்கேவுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டதைப் போலவே, இப்போது லக்ஷ்மன் ஹாகேவுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் இந்த இரண்டு கேள்விகளுக்கும் இதுவரை யாரும் பதிலளிக்கவில்லை.
லஷ்மண் ஹாகேவினுடைய இயக்கத்தின் தாக்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் காணப்பட்டது. இப்போது மகாராஷ்டிராவில் ஓபிசி வாக்குகள் ஓரளவிற்கு ஒருமுனைப்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவை அனைத்தின் விளைவாக மீது எழுந்த தேவேந்திர ஃபட்னவிஸ் கடுமையான விமர்சனம், பா.ஜ.க மற்றும் ஃபட்னவிஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அவர் மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது. அதே நேரம் மனோஜ் ஜாரங்கேவின் பங்கு குறித்தும் வாக்காளர்கள் மனதில் சந்தேகம் எழத் தொடங்கியது.
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, தேவேந்திர ஃபட்னவிஸை ஊக்குவிக்கும் வகையில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரது பிரசாரத்தின்போது, ’பகுஜன் நலனுக்காக அவர் முன்வந்தார், அதனால் அவர் குறிவைக்கப்பட்டார்’ என்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.
இந்துத்துவத்தை அமைதியாக ஆதரித்தவர்
தேவேந்திர ஃபட்னவிஸ், ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்புகளுடன் இணைந்து இந்துத்துவத்தை எல்லா இடங்களிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் விவாதப் பொருளாக்கினர்.
நிதீஷ் ராணே மற்றும் இந்து விழிப்புணர்வு ஊர்வலம் நிறுத்தப்பட்டாலும் ஃபட்னவிஸ், இந்து அமைப்புகள் மூலமாக இந்த விஷயங்களை எழுப்பினார். இது கிராமப்புற வாக்காளர்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தேர்தல் பிரசாரத்தின்போது ஃபட்னவிஸ் பலமுறை ‘வாக்கு ஜிகாத்’ விஷயத்தை எழுப்பி தொடர்ந்து அதைப் பற்றியே பேசினார். முஸ்லிம்கள் ஒன்றினைந்து வாக்களிக்கும்போது, இந்துக்களும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும் என்றார் அவர். தேர்தலில் மகாயுதி இதன் நன்மையை பெற்றது.
இதுதவிர அரசு ‘லாட்லி பஹன்’ மற்றும் பல திட்டங்களைக் கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் ‘நவீன மகராஷ்ட்ராவின் உருவாக்கத்திற்கு உழைப்பவர்’ என்ற பிம்பத்தை உருவாக்க ஃபட்னவிஸ் முயன்றார்.
மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காதவர்களை சங்கத்தின் உதவியுடன் வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வந்து கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க அவர் முயற்சி செய்தார்.
கவுன்சிலர், மேயர், எம்எல்ஏ, கட்சியின் மாநில தலைவர் மற்றும் முதல்வர்
தேவேந்திர ஃபட்னவிஸ் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் உள்ளார். அவர் தனது சமகால அரசியல் எதிரிகளைவிட இளம் வயதிலேயே தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் மற்றவர்களைவிட இளம் வயதில் பல பதவிகளை அடைந்தார். அவர் அரசியல் பின்னணியில் இருந்து வந்தவர்.
இவரது தந்தை கங்காதர் ஃபட்னவிஸ் பா.ஜ.கவின் முக்கியத் தலைவர். அவர் பல ஆண்டுகள் சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். அவர் இறக்கும்போது தேவேந்திர ஃபட்னவிஸின் வயது 17. கங்காதர் ஃபட்னவிஸின் மறைவுக்குப் பிறகு காலியான சட்ட மேலவைத் தொகுதிக்கு நிதின் கட்கரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதல் கூட்டணி ஆட்சியில் உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சராக இருந்த ஷோபாதாய் ஃபட்னவிஸ், தேவேந்திர ஃபட்னவிஸின் சித்தி.
தேவேந்திர ஃபட்னவிஸ் தனது மாணவப் பருவத்தில் ‘அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்’ உடன் தொடர்பு கொண்டிருந்தார். ஆனால் விரைவில் அவர் கட்கரியின் தலைமையில் அரசியலில் தீவிரமாக இறங்கினார். 1992ஆம் ஆண்டில் அவர் தனது 22 வயதில் முதல் முறையாக நாக்பூர் நகராட்சியில் கவுன்சிலரானார். அவரது அரசியல் வாழ்க்கை அங்கிருந்து தொடங்கியது.
“தேவேந்திர ஃபட்னவிஸின் அரசியல் பிரவேசம் மற்ற தலைவர்களைவிட எளிதாக இருந்தது. ஆனால் அரசியலில் அவரது பயணம் கடினமாக இருந்தது” என்று மகாராஷ்டிரா டைம்ஸின் நாக்பூர் ஆசிரியர் ஸ்ரீபாத் அபராஜித் குறிப்பிட்டார்.
“அவர் 1992இல் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். உண்மையில் இந்தத் தேர்தல் 1989இல் நடக்கவிருந்தது. அப்போது அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வயதுகூட இல்லை.1992இல் இந்தத் தேர்தல் நடந்தது அவரது அதிர்ஷ்டம்” என்றார் ஸ்ரீபாத் அபராஜித்.
ஃபட்னவிஸ் விரைவில் நாக்பூர் மேயரானார். ஆனால் அவரது இலக்கு இதைவிடப் பெரியது. 1999இல், சிவசேனா-பா.ஜ.க கூட்டணி தோல்வியைச் சந்திக்க நேரிட்டபோது, ஃபட்னவிஸ் முதல்முறையாக சட்டப்பேரவைக்கு வந்தார்.
தேவேந்திர ஃபட்னவிஸ் நாக்பூரில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியபோது, நிதின் கட்கரி நாக்பூர் மற்றும் விதர்பாவில் மூத்த பாஜக தலைவராக இருந்தார். அரசியலில் கட்கரியை பின்பற்றத் தொடங்கினார் ஃபட்னவிஸ்.
பின்னர் பா.ஜ.கவில் மாறி வந்த சமன்பாடுகள் காரணமாக ஃபட்னவிஸ் கட்கரியை விட்டு விலகி கோபிநாத் முண்டேயுடன் கைகோர்த்தார். இதன் மூலம் 2013இல் பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் பதவியைப் பெறுவதில் ஃபட்னவிஸ் வெற்றி பெற்றார்.
நாக்பூரில் வசிக்கும் தேவேந்திர ஃபட்னவிஸ், ஆர்.எஸ்.எஸ்-இன் விசுவாசியாகக் கருதப்படுகிறார். இது அவருக்குச் சாதகமான ஓர் அம்சமாக அமைந்தது. இரண்டாவது விஷயம் 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.கவின் தலைமை மோதி-அமித் ஷா கைகளுக்கு வந்தது. நிதின் கட்கரியின் கைகளுக்குச் செல்லவில்லை.
மேலும் எந்தெந்த மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றதோ அங்கெல்லாம் தனது முதல்வரை வித்தியாசமான முறையில் கட்சி தேர்வு செய்தது.
ஹரியாணாவில் ஜாட் அல்லாத மனோகர் லால் கட்டர், ஜார்கண்டில் பழங்குடியினர் அல்லாத ரகுபர் தாஸ், மகாராஷ்டிராவில் மராட்டியர் அல்லாத தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோருக்கு முதல்வர் பதவி கிடைத்தது.
2019க்கு பிறகு தேவேந்திர ஃபட்னவிஸ் மாறிவிட்டாரா?
கடந்த 2019 நவம்பரில் பா.ஜ.கவும், மகாராஷ்டிர அரசியலும் தேவேந்திர ஃபட்னவிஸை மையமாகக் கொண்டிருந்தபோது ஒரு பெரிய அரசியல் திருப்புமுனை ஏற்பட்டது. ஃபட்னவிஸ் மகாராஷ்டிரா அரசியலில் கொண்டு வந்த ஒரு மாற்றம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் விவாதப் பொருளாக உள்ளது.
ஆனால் இந்தச் சம்பவம் ஃபட்னவிஸ் மற்றும் அவரது அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியதா என்பதுதான் கேள்வி.
பா.ஜ.கவும், சிவசேனாவும் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட போதிலும் முதல்வர் பதவி விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதையடுத்து பா.ஜ.கவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா மறுத்துவிட்டது.
உத்தவ் தாக்கரே மற்றும் ஷரத் பவார் காங்கிரஸுடன் இணைந்து மகாவிகாஸ் அகாடியை உருவாக்கினார்கள். மகாராஷ்டிராவில் இதற்கு முன்பு இது நடந்ததில்லை. 105 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணியின் தெளிவான பெரும்பான்மை இருந்தபோதிலும் பா.ஜ.க., ஆட்சி அமைக்க முடியாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து 5 ஆண்டுகள் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னவிஸ் 2019 நவம்பர் 23ஆம் தேதி காலை திடீரென முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார்.
இந்த முழு செயல்முறையிலும் யார் யாருடைய பங்கு இருந்தது? பா.ஜ.க தரப்பில் இருந்து மோதி மற்றும் அமித்ஷாவின் பங்கு என்ன? இந்தத் திட்டத்தை ஷரத் பவார் ஒப்புக்கொண்டாரா? அஜீத் பவார் ஏன் இப்படிச் செய்ய முடிவு செய்தார்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இன்னும்கூடத் தெளிவாக இல்லை. ஆனால் இந்தச் சம்பவங்களின் மையத்தில் தேவேந்திர ஃபட்னவிஸ் இருந்தார். ‘ஆதரவு அளிக்க மறுத்து உத்தவ் தாக்கரே முதுகில் குத்தியதாகவும், ஷரத் பவார் முதலில் பாஜக-தேசியவாத கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு பின்னர் பின்வாங்கியதாகவும்’ ஃபட்னவிஸ் பின்னர் பல சந்தர்ப்பங்களில் கூறினார்.
அரசியலில் தனது வலுவைக் காட்டவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். ஆனால் அவரது அரசு 80 மணிநேரம் மட்டுமே நீடித்தது. ஃபட்னவிஸும் பா.ஜ.கவும் அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்க மாட்டார்கள் என்று பின்னர் விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து உத்தவ் தாக்கரே முதல்வராகவும், ஃபட்னவிஸ் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவியேற்றனர். அவரது ஆக்ரோஷமான அரசியல், மாநில அரசை பலமுறை சிக்கலில் தள்ளியது.
கடந்த 2022 ஜூன் மாதம் நடந்த சட்டமேலவை தேர்தலுக்குப் பிறகு சிவசேனாவில் கிளர்ச்சி ஏற்பட்டது. இந்த நடவடிக்கையால் ஏக்நாத் ஷிண்டே மற்றும் 40 எம்.எல்.ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறினர். ஆனால் அனைவரின் பார்வையும் ஃபட்னவிஸ் மீதே இருந்தது.
ஷிண்டே பிரிவும் பா.ஜ.கவும் இணைந்து ஆட்சி அமைக்கும் எனத் தெரிந்ததும் ஃபட்னவிஸ் முதல்வராக வருவார் என்று கருதப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பதவியேற்பார் என்று ஃபட்னவிஸ் அறிவித்தார். இது ஃபட்னவிஸின் அரசியலுக்குப் பெரும் அடியாகக் கருதப்பட்டது.
கட்சி மற்றும் அமைப்பின் முடிவுதான் இறுதியானது என்று அவர் சொன்னாலும் அவரது எதிர்பார்ப்பு வேறு என்பதும் தெரிந்தது.
மோதி, அமித்ஷாவின் விருப்பப்படி துணை முதல்வராகப் பதவியேற்றார் ஃபட்னவிஸ். இருப்பினும் புதிய கூட்டணியிலும் அதிகார மையமாக அவர் இருந்தார். சிவசேனா பிளவுபட்ட சில மாதங்களுக்குப் பிறகு என்சிபியில் பிளவு ஏற்பட்டது. மேலும் அஜித் பவார் இந்தக் கூட்டணியில் இணைந்தார். இப்போது ஃபட்னவிஸ் தனது அரசில் மற்றொரு போட்டியாளரை எதிர்கொண்டார்.
மகாராஷ்டிரா அரசியலில் கட்சிகளுக்கு இடையே இதுபோன்ற பிளவு இதற்கு முன் எப்போதும் இருந்தில்லை. ஷிண்டேவும் அஜித் பவாரும் அவரவர் கட்சியில் கிளர்ச்சி செய்தபோதிலும் அனைவரது பார்வையும் பா.ஜ.க மற்றும் ஃபட்னவிஸ் மீதுதான் இருந்தது.
இந்த முழு நாடகத்தின் உண்மையான நடிகர் தேவேந்திர ஃபட்னவிஸ் என்று ஏக்நாத் ஷிண்டே சட்டப்பேரவையில் நகைச்சுவையாகக் கூறினார். ‘நான் திரும்பி வர இரண்டரை ஆண்டுகள் ஆனது. ஆனால் நான் வந்து இரண்டு கட்சிகளை உடைத்துவிட்டேன்’ என்று ஃபட்னவிஸ் கூறியதும் பெரும் விவாதத்தை உருவாக்கியது.
இந்தச் சம்பவங்கள் மகாராஷ்டிரா வாக்காளர்கள் மத்தியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. பா.ஜ.க மற்றும் ஃபட்னவிஸின் பிம்பத்தில் ஏற்பட்ட மாற்றம் தெளிவாகத் தெரிந்தது. அஜித் பவார், ஷிண்டே போன்ற மராட்டிய தலைவர்களைத் தன்னிடம் வைத்திருப்பது பா.ஜ.கவின் பாரம்பரிய வாக்கு வங்கியின் மீது ஆக்கபூர்வ தாக்கத்தை ஏற்படுத்தியது.
“கடந்த 2019க்கு முன்பு இருந்த ஃபட்னவிஸுக்கும், அதற்குப் பிறகான ஃபட்னவிஸுக்கும் இடையே நேரடியான வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறது. முன்பு ஃபட்னவிஸ் ஒரு நல்ல நிர்வாகி, உணர்வுபூர்வமான தலைவர் என்ற பிம்பத்தைக் கொண்டிருந்தார். ஆனால் 2019 தேர்தல் நெருங்கியபோது மற்ற கட்சிகளின் தலைவர்கள் பா.ஜ.கவில் சேரத் தொடங்கினர்.
அப்போது அவரது பிம்பம் மாறத் தொடங்கியது. ஃபட்னவிஸ் யாருக்கு எதிராக அரசியல் செய்தாரோ அவர்களையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை வந்ததால் இந்த மாற்றம் தொடங்கியது,” என்று அரசியல் ஆய்வாளர் அபய் தேஷ்பாண்டே குறிப்பிட்டார்.
“கடந்த ஒரு வருடத்தில், ஃபட்னவிஸ் மராட்டிய அரசியலில் வில்லனாக பார்க்கப்பட்டார். மராத்தியர்களும், ஓபிசிகளும் சர்ச்சைகளின் மையமாகவே இருந்தனர். அவரை நோக்கி விரல் நீட்டுவதற்கு உண்மையில் உறுதியான காரணம் எதுவும் இல்லை. ஆனால் சரியோ தவறோ அவரின் சிரமங்கள் நிச்சயமாக அதிகரித்துள்ளன.”
மராத்தா இட ஒதுக்கீடு 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எல்லா இடங்களிலும் கட்சி பின்னடைவைச் சந்திக்க வேண்டியதாயிற்று. இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பொறுப்பேற்று தேவேந்திர ஃபட்னவிஸ் அரசில் இருந்து வெளியே வந்து அமைப்பில் செயல்படுவதாகப் பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் தற்போது மகாராஷ்டிராவில் பா.ஜ.க அல்லது மகாயுதி கூட்டணியில் ஃபட்னவிஸ் போன்ற வலுவுள்ள தலைவர் வேறு யாரும் இல்லை என்பதும் உண்மை.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியிட்டது