அதிபர் யூன் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, குடிமக்கள் பலர் புதன்கிழமை இரவு நாடாளுமன்றத்தில் ஒன்று கூடினர்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அதிபர் யூன் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி, குடிமக்கள் பலர் புதன்கிழமை இரவு நாடாளுமன்றத்தில் ஒன்று கூடினர்
  • எழுதியவர், லூயிஸ் பாருச்சோ மற்றும் ரேச்சல் லீ
  • பதவி, பிபிசி செய்தியாளர்

செவ்வாய் இரவு, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக ராணுவ ஆட்சியை அறிவித்து, தென் கொரிய அதிபர் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் , “அரசுக்கு எதிரான சக்திகள்” மற்றும் “வட கொரியாவின் அச்சுறுத்தல்” பற்றிக் குறிப்பிட்டு ராணுவ ஆட்சியை அறிவித்தார்.

ஆனால் இந்த முடிவு, வெளிப்புற அச்சுறுத்தல்களால் தூண்டப்படவில்லை. மாறாக அவரது சொந்த அரசியல் பிரச்னைகளால் தூண்டப்பட்டது என்பது விரைவில் தெளிவாகியது.

எனவே, ராணுவச் சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையை நீக்க ஏதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர வாக்கெடுப்பு நடத்தினர்.

அந்த வாக்கெடுப்பில் யூன் தோற்கடிக்கப்பட்டார். ராணுவ ஆட்சியை அறிவிக்கும் அவரது முடிவும் நீக்கப்பட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நாடாளுமன்றம் ராணுவச் சட்டத்தை ரத்து செய்த பிறகு, அதிபர் யூன் நாடாளுமன்றத்தின் முடிவை ஏற்றுக்கொண்டார்.

ஆனாலும், அவர் “ஜனநாயகத்தை அழிக்க முயற்சிப்பதாக” குற்றம் சாட்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரை பதவி நீக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

யூன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆயிரக்கணக்கான மக்கள் தென் கொரியா முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த சர்ச்சையை அடுத்து, பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ராணுவச் சட்டப் பிரகடனத்தால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு, பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரிய அவர், அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

தென் கொரியாவின் அடுத்த அதிபர் யார் ?

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல், செவ்வாய் இரவு, தனது உரையில் ராணுவச் சட்டத்தை அறிவித்தார்

சமீபத்தில் அரசியலில் நுழைந்த ஜனாதிபதி யூன், 2022 தேர்தலில், தென் கொரியாவின் அதிபராக வெற்றி பெற்றார்.

63 வயதான யோல், அவரது தேர்தல் பிரசாரத்தின் போது, வடகொரியா மீது கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதாகவும், சர்ச்சைக்குரிய பாலின பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார்.

ஆனால், இந்த ஆண்டு பல ஊழல் மோசடிகளில் சிக்கியிருப்பதால், மக்கள் மத்தியில் அவரது ஆட்சி குறித்த பிம்பம் சரியத் தொடங்கியது.

அவரது ஆட்சி குறித்த மக்களின் மதிப்புகளில் வீழ்ச்சியைக் கண்டார்.

மேலும், அவர் விடுத்த ராணுவ சட்டம் தொடர்பான அறிக்கை, நிலைமையை இன்னும் மோசமாக்கியது.

“நாட்டில் நிலவும் கள யதார்த்தத்திலிருந்து முற்றிலும் தொடர்பற்றவராக யூன் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை வெளிக்காட்டும் வகையில் அவரது முடிவு உள்ளது,” என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் காங் கியுங்-வா கூறினார்.

“அடுத்து என்ன நடக்கும் என்பது அதிபர் யூனைப் பொறுத்தது. இந்த நெருக்கடி அவர் உருவாக்கியது. அதனை எவ்வாறு சரிசெய்வது என்று அவர் தான் கண்டுபிடிக்க வேண்டும்,” என்று முன்னாள் வெளியுறவு அமைச்சர் காங் கியுங்-வா கூறினார்.

பலர் யூனை விமர்சித்து வரும் நிலையில், அவருக்கு சில தீவிர வலதுசாரி அரசியல்வாதிகளின் ஆதரவு இன்னும் உள்ளது.

நாடாளுமன்ற சபாநாயகர் வூ வோன்-ஷிக் மற்றும் யூனின் கட்சியின் தலைவர் ஹான் டோங்-ஹூன் ஆகியோர் , யூனின் முடிவுகளைத் தடுப்பதாகக் குற்றம் சாட்டி அவர்களைக் கைது செய்யுமாறு, அவரது ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள் அதிபர் ஹ்வாங் கியோ-ஆன் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

“வட கொரியா சார்பு குழுக்கள்” அகற்றப்பட வேண்டும் என்று ஹ்வாங் கூறியதுடன், அவசர காலத்தில், நெருக்கடிகளைச் சமாளிக்க அதிபர் பயன்படுத்தும் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி விசாரணை நடத்தி, அவர்களுக்கு எதிராகச் செயல்படுமாறு யூனை ஹ்வாங் வலியுறுத்தினார்.

அதிபர் யூன் பதவி நீக்கம் செய்யப்படுவாரா?

தென் கொரியாவின் நாடாளுமன்றம் யூனின் பதவி நீக்கம் மீது வாக்கெடுப்பு நடத்தும்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தென் கொரியாவின் நாடாளுமன்றம் யூனின் பதவி நீக்கம் மீது வாக்கெடுப்பு நடத்தும்

தென் கொரிய நாடாளுமன்றம், யூனின் பதவி நீக்கம் குறித்து விரைவில் வாக்கெடுப்பு நடத்தும்.

தென் கொரிய அதிபர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்படுவது இது முதல் முறை அல்ல என்றாலும் அதிபர் யூன் பதவி நீக்கம் செய்யப்படுவாரா என்பதைப் பலரும் எதிர் நோக்கியுள்ளனர்.

யூனின் பதவி நீக்கம் குறித்து ஏற்கனவே 6 எதிர்க்கட்சிகள் அறிக்கைத் தாக்கல் செய்துள்ளன. 72 மணி நேரத்தில் அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில், டிசம்பர் 6 வெள்ளிக்கிழமை அல்லது டிசம்பர் 7 சனிக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களது தீர்மானம் வெற்றிபெற, 300 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் ஆதரவு தேவைப்படும். அதாவது குறைந்தது 200 வாக்குகள் தேவைப்படும்.

எதிர்க்கட்சிகளுக்கு ஏற்கனவே போதுமான வாக்குகள் உள்ளன.

யூனின் சொந்த கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் அவரின் நடவடிக்கையை விமர்சித்தனர். ஆனால், யூனின் பதவி நீக்கம் குறித்து அவர்கள் நிலைப்பாடு எடுக்க வேண்டும். ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் அவ்வாக்கெடுப்பில் இணைந்தால், பதவி நீக்கம் வெற்றியடையலாம்.

கடந்த 2004 இல், தென் கொரியாவின் நாடாளுமன்றம், அதிபர் ரோ மூ-ஹியூனை பதவி நீக்கம் செய்ய வாக்களித்தது.

அதிபர் யூனை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றம் வாக்களித்தால், அவர் உடனடியாக அதிகாரங்களை இழந்து, பிரதமர் ஹான் டக்-சூ தற்காலிக அதிபராகப் பதவியேற்பார்.

தென் கொரியாவின் நாடாளுமன்றம், அதிபர் பதவி நீக்கத்திற்கு ஒப்புதல் அளித்தால், அரசியலமைப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும். இது தென் கொரிய அரசாங்கத்தின் கிளைகளை மேற்பார்வையிடும் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சில் அகும்.

நீதிமன்றம், பதவி நீக்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தால், அதிபர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

பதவி நீக்கம் உறுதிப்படுத்தப்பட்டால், யூன் பதவியிலிருந்து நீக்கப்படுவார். 60 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

பதவி நீக்கம் நிராகரிக்கப்பட்டால், யூன் மீண்டும் அதிபராகத் தனது பணிகளைத் தொடர்வார்.

இச்சூழ்நிலை, 2016 ஆம் ஆண்டு நடந்த அதிபர் பார்க் கியூன்-ஹேயின் பதவி நீக்கத்தை எதிரொலிக்கிறது.

ஊழலுக்காக பார்க் மீது வழக்குத் தொடர்ந்த சட்டக் குழுவை வழிநடத்தி, அதிபர் பார்க் கியூன்-ஹை பதவி நீக்கம் செய்ததில், யூன் முக்கிய பங்கு வகித்தார்.

4 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு, பார்க் 2022 இல் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும், கடந்த 2004ல் அரசியலமைப்பு நீதிமன்றம் ரோ மூ-ஹியூனின் பதவி நீக்கத்தை ரத்து செய்தது.

தென் கொரியாவில் இதற்கு முன்னர் ராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதா?

நாடாளுமன்ற உறுப்பினர்கள், டிசம்பர் 4 அன்று

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், டிசம்பர் 4 அன்று யூன் சுக் யோல் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற வாசக அட்டைகளை வைத்துள்ளனர்

கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக ராணுவ ஆட்சியை அறிவித்து, நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் யூன்.

ராணுவ ஆட்சி நடவடிக்கையை தவறாகப் பயன்படுத்திய பழைய வரலாற்றை இது மீண்டும் நினைவுபடுத்துகிறது.

அவசர காலத்தில், நெருக்கடிகளைச் சமாளிக்க உருவாக்கப்பட்ட ராணுவ ஆட்சி, தற்போது கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும், அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கும், ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிப்பதற்கும் ஒரு கருவியாக உபயோகப்படுத்தப்படுவதாக அடிக்கடி விமர்சிக்கப்படுகிறது.

கடந்த 1948 இல், அதிபர் சிங்மேன் ரீ, ஜெஜு எழுச்சியை அடக்குவதை எதிர்க்கும் ஒரு கலகத்தைக் கட்டுப்படுத்த ராணுவச் சட்டத்தை அறிவித்தார். இதன் விளைவாக பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

கடந்த 1960 இல், ஏப்ரல் புரட்சியின் போது ராணுவச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. தேர்தல் மோசடிக்கு எதிரான பேரணியின் போது உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் காவல்துறையினரால் கொல்லப்பட்டதையடுத்து, ரீ நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்தன.

அதிபர் பார்க் சுங்-ஹீ தனது ஆட்சிக்கு எதிராக உள்ள அச்சுறுத்தல்களை அடக்குவதற்கு அடிக்கடி ராணுவ ஆட்சியை அறிவித்தார். 1980 ஆம் ஆண்டில், தென் கொரியாவின் அதிபர் பார்க் சுங்-ஹீ படுகொலை செய்யப்பட்ட பின்னர், புதிய தலைவரான சுன் டூ-ஹ்வான், நாட்டைக் கட்டுப்படுத்த ராணுவச் சட்டத்தை அறிவித்தார்.

இந்த நேரத்தில், குவாங்ஜு நகரில் மக்கள் அவரது அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். ராணுவம் எதிர்ப்பாளர்களைத் தாக்கி, அவர்களில் பலரைக் கொன்றது குவாங்ஜு படுகொலை என்று அறியப்பட்டது.

இந்த நிகழ்வுகள் தென் கொரியர்களுக்கு அதிர்ச்சிகரமான விளைவுகளை ஏற்படுத்தியது.

ராணுவச் சட்டத்தை பொதுப் பாதுகாப்புக்கான நடவடிக்கையாக இல்லாமல், அரசியல் அதிகாரத்திற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக இந்நிகழ்வுடன் தொடர்புப்படுத்தப்பட்டது.

1987 முதல், தென் கொரியாவின் அரசியலமைப்பு ராணுவச் சட்டத்தை அறிவிப்பதற்கான நிபந்தனைகளை கடுமையாக்கியுள்ளது. ராணுவ சட்டத்தை நீட்டிப்பு செய்ய அல்லது நீக்கத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை.

தென் கொரிய ஜனநாயகம் எவ்வளவு வலிமையானது?

முன்னாள் வெளியுறவு அமைச்சர் காங், பிபிசியிடம், ‘பதட்டங்கள் தணிந்து வருவதாகத் தெரிகிறது’ என்றார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, முன்னாள் வெளியுறவு அமைச்சர் காங், பிபிசியிடம், ‘பதட்டங்கள் தணிந்து வருவதாகத் தெரிகிறது’ என்றார்.

கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவில், தென் கொரிய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக, இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் ஜனவரி 6 அன்று நடந்த கலவரத்தைவிட (டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தைத் தாக்கியது) தென் கொரியாவில் நடக்கும் சம்பவங்கள், அதன் ஜனநாயக நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

“யூனின் இந்த முடிவு தவறான அரசியல் கணிப்புகளால் எடுக்கப்பட்டது என தெரிகிறது. இம்முடிவால் தேவையில்லாமல் தென் கொரியாவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்படும்” என்று சோலில் உள்ள ஈவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் லீஃப்-எரிக் ஈஸ்லி கூறினார்.

“பெருகிவரும் ஊழல்கள், அரசியல் எதிர்ப்பு மற்றும் பதவி நீக்க அச்சுறுத்தல்களால் முற்றுகையிடப்பட்ட அரசியல்வாதியைப் போல் யூன் உள்ளார். அவரது நடவடிக்கைகள், இப்போது தீவிரமடைய வாய்ப்புள்ளது” என ஈஸ்லி விவரித்தார்.

ஆனால் அந்த இரவு பெருங்குழப்பதோடு இருந்தபோதிலும், தென் கொரியாவின் ஜனநாயகம் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

முன்னாள் வெளியுறவு அமைச்சர் காங், பிபிசியிடம், ‘பதட்டங்கள் தணிந்து வருவதாகத் தெரிகிறது’ என்றார்.

“இரவு முழுதும், மக்கள் நாடாளுமன்றம் முன் கூடி, ராணுவ ஆட்சி நீக்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றமும் அதன் பங்கைச் செய்தது. எனது நாட்டில் ஜனநாயகம் வலுவானது மற்றும் நிலையானது என்று மீண்டும் நிரூபணமானது” என்றும் காங் கூறினார்.

வட கொரியாவின் நிலைப்பாடு என்ன ?

இச்சம்பவம் குறித்து வட கொரிய அரசிடமிருந்து எந்த தகவலும் இல்லை

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இச்சம்பவம் குறித்து வட கொரிய அரசிடமிருந்து எந்த தகவலும் இல்லை

யூன் தனது பிரகடனத்தில், வட கொரியாவை குறிவைத்து, “வட கொரிய கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தலில் இருந்து சுதந்திர கொரிய குடியரசைப் பாதுகாப்பது” மற்றும் “எங்கள் மக்களின், சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் சூறையாடும் வெறுக்கத்தக்க வட கொரிய சார்பு அரசு எதிர்ப்பு சக்திகளை ஒழிப்பது” என்றும் யூன் கூறினார்.

இது போன்ற கருத்துக்கள் பொதுவாக வட கொரியாவில் இருந்து எதிர்வினையை வெளிப்படுத்தும், ஆனால் நாட்டின் அரசு ஊடகங்களில் இருந்து எந்த பதிலும் இல்லை.

புதன்கிழமை விடியற்காலையில், யூனின் ராணுவச் சட்ட ஒழுங்கு நடவடிக்கை கலைக்கப்பட்டதாகவும், “வட கொரியாவிடமிருந்து அசாதாரண நடவடிக்கைகள் எதுவும் இல்லை” என்றும் தென் ராணுவ தலைமை அதிகாரி கூறினார்.

“வட கொரியாவிற்கு எதிரான தென் கொரியாவின் பாதுகாப்பு நிலைப்பாடு உறுதியாக உள்ளது” என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறியது.

வட கொரிய அச்சுறுத்தல்களை யூன் ஏன் குறிப்பிட்டார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், வட மற்றும் தென் கொரியாவுக்கு இடையே ஏற்கனவே அதிகரித்து வரும் பதட்டங்களை இது பெரிய அளவில் பாதிக்காது என்றும் பலர் நம்புகின்றனர்.

“இந்த நெருக்கடியை வட கொரியர்கள் பயன்படுத்துவதற்கு வழி இல்லை” என்று சியோலில் உள்ள கூக்மின் பல்கலைக்கழகத்தில் வட கொரிய அரசியலை ஆய்வு செய்யும் பியோதர் டெர்டிட்ஸ்கி கூறுகின்றார்.

ஒரு சில மணி நேரம் மட்டுமே நீடித்த அவரது திட்டங்கள் எல்லாம் மிக விரைவாக வெளிப்பட்டது” என்றும் பியோதர் டெர்டிட்ஸ்கி, பிபிசியிடம் கூறினார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.