கைது :வடக்கு – தெற்கு பொதுவானது!

by adminDev2

வடக்கு , கிழக்கில் இடம்பெற்ற மாவீரர் தின அனுஸ்டிப்புக்களை திட்டமிட்ட வகையில் திரிபுபடுத்தி வடக்கு – தெற்குக்கிடையில் இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் காணொளிகளை பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.அவ்வாறு பதிவேற்றம் செய்தவர்களில் இருவர் புதிய ஜனநாயக முன்னணியின் செயற்பாட்டாளர்கள் என  பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழாக கடந்த இரு வாரங்களில்  இடம்பெற்ற கைதுகள் மற்றும் அதற்கான காரணங்களை அமைச்சர் தெளிவுபடுத்தியிருந்தார்.

வடக்கு,கிழக்கில் அண்மையில் இடம்பெற்ற மாவீரர் தின அனுஸ்டிப்பு நாட்டில்  பிரதான பேசுபொருளாகவுள்ளது. உயிரிழந்த  தமது உறவுகளை நினைவுக்கூரும் உரிமை அனைவருக்கும் உண்டு. வடக்கு மற்றும் கிழக்கு, தெற்கு உட்பட அனைத்து மாகாணங்களுக்கும் அந்த உரிமை உண்டு. நாங்கள் இன்றும் அந்த நிலைப்பாட்டில்தான்  உள்ளோம்.

விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே அந்த அமைப்பின் கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த இடமளிக்க முடியாது என்பதை தெளிவாக அறிவித்துள்ளோம். 

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் கடந்த நவம்பர் மாதம் 21 ஆம்திகதி முதல் 27 ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்பட்டது. இவ்விரு மாகாணங்களிலும்  244 மாவீரர் தின அனுஸ்டிப்புக்கள் இடம்பெற்றன .இவற்றில் 10 அனுஸ்டிப்புக்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அடையாளங்கள் காட்சிப்படுத்தப்பட்டன அல்லது ஊக்குவிக்கும் வகையில்  ஒருசில விடயங்கள் இடம்பெற்றிருந்தன.அது தொடர்பில் காவல்துறையினர்  சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

மாவீரர்தின   அனுஸ்டிப்பின் போது விடுதலைப்  புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் இடம்பெற்ற செயற்பாடுகள் தொடர்பில்  கிளிநொச்சி  , பருத்தித்துறை, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களுக்கு   அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல் சுன்னாகம் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் தினம் குறித்து தெற்கில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும் வகையில்  பல விடயங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன. 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் தின புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை திரிபு படுத்தி அவை 2024 ஆம் ஆண்டு மாவீரர் தினம்  என்று  தெற்கில் சமூக வலைத்தளங்களில்  பதிவேற்றம் செய்யப்பட்டன.

மாவீரர் தினத்தை முன்னிட்டு   இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில்  சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவேற்றம் செய்த நால்வர் கைது செய்யப்பட்டனர். வடக்கில் ஒருவரும்   தெற்கில்;  ஏனையவர்களும்  கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்