தமிழீழ மாவீரர் தினத்தை முன்னிட்டு தனது முகநூல் பக்கத்தில் புலிகள் மீள வந்துவிட்டதாக பிரச்சாரங்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கெலும் ஜயசுமனவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் திலின கமகே, இன்று புதன்கிழமை (04) உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை தேசியத்தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான யாழ்ப்பாண இளைஞருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரால் இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இளைஞன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் சரீரப் பிணையில் விடுவித்ததுடன் வெளிநாட்டு பயணத் தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே சமூக ஊடகங்களில் பொது ஒழுங்கை மீறும் வகையிலும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் செய்திகள் பரப்பப்பட்டமைக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறை கண்காணிப்புக்களை தொடர்வதாக தெரிவித்துள்ளது.