பெண்கள் கழிப்பறையில் பேனா கேமரா வைத்த பயிற்சி மருத்துவர் – கைது செய்த காவல்துறை

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்
  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
  • பதவி, பிபிசி தமிழ்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் பேனா கேமரா பொருத்தியதாக கைது செய்யப்பட்ட மருத்துவர், பயிற்சியிலிருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீதான இறுதி நடவடிக்கையை துறையின் தலைமையே எடுக்கும் என்று கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட பேனா கேமரா மற்றும் மெமரி கார்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பேனா கேமரா கண்டுப்பிடிக்கப்பட்டது எப்படி?

கடந்த நவம்பர் 28-ஆம் தேதியன்று, மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி செவிலியர் மாணவி ஒருவர், அங்கிருந்த கழிப்பறைக்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த சுத்தம் செய்யும் பிரஷ் ஒன்றில் பேனா போன்ற ஏதோ ஒன்று, ரப்பர் பேண்ட் சுற்றப்பட்டிருந்ததைப் பார்த்துள்ளார்.

அருகில் சென்று பார்த்தபோது, அது பேனா கேமரா என்பது தெரியவந்தது. அவர் சொன்ன தகவலுக்குப் பிறகு, அந்த பேனா கேமராவை பெண்கள் கழிப்பறைக்குள் வைத்தது தொடர்பாக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பயிற்சி மருத்துவர் வெங்கடேசனை போலிசார் கைது செய்துள்ளனர்.

மெமரி கார்டு இல்லை!

நடந்த சம்பவம் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் ஆய்வாளர் ரத்தினகுமார், இந்த சம்பவம் குறித்து காவல்துறை வெளியிட்ட செய்தி அறிக்கையையும் விவரித்தார்.

போலீசார் கூறும் தகவலின்படி, நவம்பர் 28 மதியம் 12:30 மணியளவில் அந்த பயிற்சி நர்ஸ், கழிப்பறைக்குச் சென்றபோது, பிரஷ்சில் பேனா கேமரா இருப்பதைப் பார்த்திருக்கிறார்.

அதைப்பற்றி அவர் வெளியே வந்து சொன்னதும் இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் மாரிமுத்து, பயிற்சி டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் அங்கு சென்று பார்த்து அதை எடுத்துள்ளனர். அதன்பின் மருத்துவர் ராஜா புகார் கொடுத்ததும், போலீசார் சென்று பார்த்தபோது, அந்த பேனா கேமராவில் மெமரி கார்டு இல்லை.

சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோதுதான், கழிப்பறைக்கு டாக்டர் வெங்கடேசன் சென்று வந்ததைப் பார்த்துள்ளனர். அவரிடம் மேற்கொண்டு விசாரித்தபோது, பேனா கேமராவை பெண்கள் கழிப்பறைக்குள் தான் வைத்ததையும், அந்த நர்ஸ் சொன்னதும் உள்ளே சென்று பேனா கேமராவிலிருந்த மெமரி கார்டை எடுத்து விட்டதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

காவல்துறையினர் பேனா கேமரா, மெமரி கார்டு இரண்டையும் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

மருத்துவர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு, இப்போது சிறையில் உள்ளார். அவர் கைதானதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, டாக்டர் வெங்கடேசனை பயிற்சியிலிருந்து ‘சஸ்பெண்ட்’ செய்திருக்கிறார்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

காவல்துறை சொல்வது என்ன?

இதுகுறித்து பேசிய பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர், டாக்டர் ராஜா, ‘‘அந்த டாக்டர் இங்கு பணியில் இருப்பவரில்லை. 10 நாட்களாகத்தான் அவர் இங்கு பயிற்சிக்காக பணிக்கு வந்து கொண்டிருந்தார். பெண்கள் கழிப்பறையில் பேனா கேமரா என்ற தகவல் வந்ததுமே நாங்கள் உடனே போலீசுக்குத் தகவல் தெரிவித்துவிட்டோம். இதுபோன்ற விவகாரங்களில் 6 மணி நேரத்துக்குள் போலீஸ் புகார் தர வேண்டுமென்று கோர்ட் உத்தரவு உள்ளது. நாங்கள் தகவல் கூறிய அடுத்த கால் மணி நேரத்திலேயே போலீசார் வந்து விட்டனர்.’’ என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘அந்த நர்ஸ் பேனா கேமராவைப் பார்த்து விட்டு வெளியே வந்தபோது, டாக்டர் வெங்கடேசன் அங்கே நின்று கொண்டிருந்திருக்கிறார். அவர்தான் அந்தப் பெண்ணிடம் அது பேனா கேமரா இல்லை என்று ஏதோ சொல்லியிருக்கிறார். அதனால் அவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. அதன்பின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அவர்தான் என்பது உறுதியாகிவிட்டது.’’ என்றார்.

இதுகுறித்து பொள்ளாச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கிடம் கேட்டபோது, ‘‘பேனா கேமராவையும், மெமரி கார்டையும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். முடிவு வந்தபின்புதான், அவர் மீதான அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை குறித்து எதையும் உறுதியாகக் கூற முடியும்.’’ என்றார்.

விழிப்புணர்வுடன் இருக்க பெண்களுக்கு அறிவுரை!

கோவை

படக்குறிப்பு, கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா

கோவை அரசு மருத்துவக் கல்லுாரியில் பயின்று வந்த அந்த மருத்துவர், பயிற்சிக்காக கடந்த மாதம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதுபற்றி கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் மருத்துவர் நிர்மலாவிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ‘‘இதுவரை என்னுடைய கவனத்திற்கு அதுபோன்ற புகார் எதுவும் வரவில்லை. அந்த டாக்டரைப் பற்றியும் வேறு எந்தப் புகாரும் இதுவரை வந்ததில்லை. ஆனால் இந்த சம்பவத்துக்குப் பின், அனைத்து பெண்கள் கழிப்பறைகளிலும் ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறேன். செவிலியர், பயிற்சி மாணவிகள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தியிருக்கிறேன்.’’ என்றார்.

”இதில் விழிப்புணர்வோடு இருப்பதுதான் முதல் தேவை. இப்போது இந்த டாக்டர் கைது செய்யப்பட்டிருப்பதால், இது போல தவறு செய்ய நினைக்கிற யாரும் அச்சப்படுவதற்கு வாய்ப்புள்ளது. என்னுடைய பணி அனுபவத்தில் இதுதான் முதல் சம்பவம்.’’ என்றார்.

அவர் மீதான இறுதி நடவடிக்கை பற்றித் தெரிவித்த டாக்டர் நிர்மலா, ‘‘அவர் கைது செய்யப்பட்டதன் அடிப்படையில் தற்போது ‘சஸ்பெண்ட்’ செய்திருக்கிறோம். ஆனால் அவருடைய பயிற்சி மற்றும் முதுகலை படிப்பு குறித்து இறுதி முடிவை துறைத் தலைமைதான் எடுக்க வேண்டும். நாங்கள் இதுகுறித்து துறைரீதியாக அறிக்கையை அனுப்பி விடுவோம்.’’ என்றார்.