சிரியா: உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் என்ன சிக்கல்? அமெரிக்கா, ரஷ்யா செய்வது என்ன?
சிரியாவில், தாக்குதல் முடிந்துவிட்டதாகக் கூறப்பட்ட முந்தைய கருத்துகளுக்கு மாறாக, கிளர்ச்சிப் படைகள் அசாத் அரசாங்கத்திற்கு எதிராக இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான இந்த எதிர்பாராத தாக்குதல், சிரிய அரசாங்கத்தின் ராணுவத்தைப் பின்வாங்க வைத்து, அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
இந்தத் தாக்குதல், 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு, அலெப்போவில் தனது முதல் வான்வழித் தாக்குதலை நடத்த ரஷ்யாவை தூண்டியது.
போர் தொடங்கி கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த சண்டை, மோதல் நீடிக்கும் என்ற கவலையைத் தூண்டியுள்ளது.
கடந்த 2018 முதல் சிரியா, உள்நாட்டுப் போரால் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ‘பஷர் அல்-அசாத், குர்திஷ் படைகள், இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் என அனைவரும் வெவ்வேறு பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறார்கள்.
சிரியாவில் நீண்டகாலமாக நடந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது ஏன் கடினமாக உள்ளது என்பதற்கான ஐந்து காரணங்களை இங்கு காண்போம்.
வெளிநாட்டு நலன்கள்
சிரியா ஓர் உலகளாவிய சதுரங்கப் பலகையாக மாறியுள்ளது. அங்கு உலக நாடுகள், நட்பு நாடுகளுக்கு உதவுவதாகப் பாசாங்கு செய்து தங்களின் மூலோபாய குறிக்கோள்களைத் தொடர்கின்றன.
துருக்கி, சௌதி அரேபியா மற்றும் அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் ஆயுதமேந்திய எதிர்ப்புக் குழுக்கள் அசாத் அரசுக்குச் சவால் விடும் வகையில் உருவாயின.
ஆனாலும், இரான் மற்றும் ரஷ்யாவின் விமர்சன ஆதரவுடன் அவரது ஆட்சி நீடித்தது.
மோதல் தீவிரமடைந்ததால், இஸ்லாமிய அரசு (ஐஎஸ்), அல்-கொய்தா போன்ற பயங்கரவாத ஜிஹாதி அமைப்புகள் களத்தில் இறங்கின. இது உலகளாவிய கவலைகளைப் பெருக்கின.
மறுபுறம், சிரியாவின் குர்துக்கள், அமெரிக்க ஆதரவுடன் சுயாட்சியை நாடினர். இது மற்றொரு சிக்கலுக்கு வழி வகுத்தது. ஆனால், அசாத்தின் அதிகாரத்தைப் பாதுகாப்பதில் ரஷ்யாவும் இரானும் முக்கியப் பங்கு வகித்தன.
அதே நேரத்தில், வடக்கே தனது சொந்த எல்லைகளைப் பாதுகாக்கும் நோக்குடன் துருக்கி கிளர்ச்சிக் குழுக்களை ஆதரித்தது.
கடந்த 2020ஆம் ஆண்டில், ரஷ்யாவும் துருக்கியும் இட்லிப் பகுதியில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்தி, கூட்டு ரோந்துப் படைகளின் மூலம் பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்கியது. இருப்பினும் தொடர்ந்து சில சண்டைகள் வெடித்தன.
இது பெரிய அளவிலான மோதல்களைக் குறைத்தாலும், சிரிய அரசாங்கம், தனது முழு கட்டுப்பாட்டையும் திரும்பப் பெறவில்லை.
இப்போது, பலவீனமாக உள்ள அரசாங்கத்தை கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதன் முக்கியக் கூட்டாளிகள் மற்ற மோதல்களால் திசை திருப்பப்படுகிறார்கள்.
“அசாத் ஆட்சி பல ஆண்டுகளாக வெளிநாடுகளின் ஆதரவைப் பெரிதும் நம்பியிருந்து, வெற்றிகரமாக ஆட்சி நடத்தியது.
ஹெஸ்பொலாவில் கடுமையான தாக்குதல் நடத்திய இஸ்ரேல், யுக்ரேனில் நடந்த போரின் காரணமாகச் சிதைந்து வரும் ரஷ்ய வளங்கள் ஆகியவை அசாத் ஆட்சியை தனித்து நிற்க வைத்தது.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, பிராந்தியத்தை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கோடு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தாக்குதலைத் தொடங்கியது,” என்கிறார் மெல்போர்ன் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியலில் மூத்த விரிவுரையாளராக இருக்கும் முனைவர் சைமன் ஃபிராங்கல் பிராட்.
“வடக்கு சிரியாவில் ஒருபோதும் முழுமையாகத் தீர்க்கப்படாத பல வகையான உள்நாட்டுப் பிரச்னைகள் உள்ளன. போரின் தொடக்கத்துக்குக் அதுவே காரணம். அதோடு அசாத் நம்பியிருந்த வெளிநாட்டு ஆதரவு சரிந்தது மற்றொரு காரணம்” என்றும் அவர் கூறுகிறார்.
பொருளாதாரச் சரிவு மற்றும் நெருக்கடி
பல ஆண்டுக்கால யுத்தம் சிரியாவை சீரழித்து, அதன் பொருளாதாரத்தை முடக்கி, உள்கட்டமைப்பை அழித்து, லட்சக்கணக்கான மக்களை இக்கட்டான சூழ்நிலையில் தள்ளியுள்ளது.
இவற்றை மறுகட்டமைப்பு செய்வதற்குத் தெளிவான பாதை இல்லாமல், இந்தப் போர்ச்சூழல் அடிப்படைத் தேவைகளுக்கும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
சிரியாவில் போருக்கு முன்பு இருந்த 2.2 கோடி மக்கள் தொகையில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா கூறியுள்ளது.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த 68 லட்சம் மக்களில், 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மிகக் குறைவான அடிப்படை வசதிகளுடன் நெரிசலான முகாம்களில் வாழ்கின்றனர். இவைபோகக் கூடுதலாக 60 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
பெரும்பாலும் லெபனான், ஜோர்டான் மற்றும் துருக்கியில், 53 லட்சம் அகதிகள் உள்ளனர்.
“சூழ்நிலை நிச்சயமற்றதாக உள்ளது. வெவ்வேறு இடங்களில் சண்டை நடக்கிறது, அது உள்நாட்டுக்குள் இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுக்கிறது” என்று வேர்ல்ட் விஷன் சிரியாவின்(World Vision Syria) இயக்குநரான இம்மானுவேல் இஷ் கூறுகிறார்.
“அவர்கள் வெவ்வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள். வடமேற்கு சிரியாவில் ஏற்கெனவே 20 லட்சம் மக்கள் முகாம்களில் வாழ்கின்றனர் என்பதே எங்கள் கவலை. இடம் பெயர்ந்தவர்களில் சிலர் உதவி பெறும் நம்பிக்கையில் இந்த இடங்களுக்குச் செல்கிறார்கள். ஆனால் உள்நாட்டில் இடம்பெயரும் அதிகளவிலான மக்களைப் பாதுகாக்கும் சூழல் அங்கு இல்லை” என்று இம்மானுவேல் கூறுகிறார்.
இந்தச் சமீபத்திய மோதலுக்கு முன், 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, சிரியாவில் 1.53 கோடி மக்கள் அடிப்படை உதவிகள் தேவைப்படும் நிலையில் இருந்தனர். 1.2 கோடி மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் நிலையில் இருந்தனர்.
மேலும் பிப்ரவரி 2023இல் துருக்கியின் காசியான்டெப் அருகே ஏற்பட்ட நிலநடுக்கம், நிலைமையை இன்னும் மோசமாக்கியது.
சிரியாவில் 5,900க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர், 88 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.
எண்ணெய் வயல்கள் மற்றும் முக்கிய வர்த்தகப் பாதைகள் மீதான கட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார நலன்களும் தொடர்ந்து பதற்றங்களைத் தூண்டி வருகின்றன. இவற்றோடு, மக்களின் அடிப்படைத் தேவைகள் பிரச்னையும் இணைந்ததால், நாட்டில் அதிருப்தி மற்றும் சண்டை நிலவுகிறது.
சர்வாதிகாரப் போக்கு
அதிகாரத்தைத் தக்கவைக்க, வன்முறை மற்றும் அடக்குமுறையை அசாத் ஆட்சி நம்பியிருப்பதும் எதிர்ப்பைத் தூண்டி மோதலை நீடிக்கச் செய்கிறது.
ரசாயனத் தாக்குதல்கள், மக்கள் வசிக்கும் பகுதிகளில் வான்வழி குண்டுவீச்சுகள், குடிமக்களைப் பட்டினியால் வாட்டும் முற்றுகைகள் மற்றும் அடிப்படை உதவிகளுக்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் உள்பட, அசாத் அரசால் நடத்தப்பட்ட பரவலான அட்டூழியங்களை 2021 ஐ.நா. அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.
“இந்தப் போரின் மையமாக சர்வாதிகார அரசாட்சி இருப்பதாக,” மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் வெளிநாட்டு உறவுகளுக்கான ஐரோப்பிய கவுன்சிலின் இயக்குநர் ஜூலியன் பார்ன்ஸ்-டேசி கூறுகிறார்.
“அசாத் ஆட்சி தொடர்ந்து சமரசம் செய்ய அல்லது அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள மறுத்து வருகிறது” என்கிறார் அவர்.
கடந்த 2022ஆம் ஆண்டுக்குள், 306,887 குடிமக்கள் போர் நடவடிக்கைகளால் உயிரிழந்ததாக ஐநா மதிப்பிட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் பட்டினி, நோய் மற்றும் சுகாதாரப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“அசாத் ஆட்சி, மக்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்பதற்குப் பதிலாக நீண்ட காலம் பதவியில் இருப்பது குறித்துக் கவனம் செலுத்துவதாக” கூறுகிறார், பிரிட்டனில் இருந்து இயங்கி வரும் பாதுகாப்பு சிந்தனைக் குழுவான, ‘ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டில்’ மத்திய கிழக்குப் பாதுகாப்புத் துறையில் மூத்த ஆராய்ச்சியாளராக இருக்கும் புர்கு ஒசெலிக்.
பிளவுபட்டுள்ள சமூகம்
“மோதலில், அரசியல் பிளவுகள் முன்னணி காரணமாக இருந்தாலும், நீண்ட காலமாக, அதன் அடித்தளத்தில் உள்ள ஒரு குழு, மோதலில் தனது முக்கியப் பங்கைக் கொண்டுள்ளதை மறுக்க முடியாது” என்று பார்ன்ஸ்-டேசி கூறுகிறார்.
கிழக்கில், போர் தொடங்கிய ஆரம்ப ஆண்டுகளில் இருந்து குர்திஷின் பெரும்பான்மையான பகுதிகள் சிரிய அரசின் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளன.
இதற்கிடையில், பரந்த சிரிய பாலைவனத்தில் இஸ்லாமிய அரசின் எச்சங்கள், தொடர்ந்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன. குறிப்பாக அதிக லாபம் தரக்கூடிய ட்ரஃப்ல் எனப்படும் காளான் வகையைச் சேகரிக்க மக்கள் அப்பகுதிக்குச் செல்லும்போது, அம்மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர்.
வடமேற்கில், போரின் உச்சகட்டத்தில் ஆயுதக் குழுக்களின் கோட்டையாக, ‘இட்லிப்’ மாறியுள்ளது. இந்தப் படைகளை வழிநடத்தும் நடைமுறை ஆட்சியாளராக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் உள்ளது.
கிளர்ச்சிக் குழுக்களிடையே நிலவும் மோதல்களால் நிலைமை மேலும் சிக்கலாக உள்ளது. துருக்கிய ஆதரவுப் படைகள் உள்பட சில பிரிவுகள், சிரிய ஜனநாயகப் படைகளுடன் (SDF) மோதியுள்ளன. இது பெரும்பாலும் மக்கள் பாதுகாப்புப் பிரிவுகளில் (YPG) குர்திஷ் வீரர்களைக் கொண்ட கூட்டணியாகும். துருக்கி இதை பயங்கரவாத அமைப்பாகக் கருதுகிறது.
தாக்குதலைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அலெப்போவின் பெரும்பகுதியைக் கைப்பற்றிய துருக்கிய ஆதரவு பெற்ற சுதந்திர சிரிய ராணுவமும், கிளர்ச்சிக் கூட்டணியுமான “ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்” நகரைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள பகுதிகளையும், பிற கிராமங்களையும் கைப்பற்றியதாகக் கூறியது.
இந்தத் தாக்குதல் பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்தால் நடத்தப்படவில்லை. மாறாக சிரிய ஜனநாயகப் படையால் (SDF) நடத்தப்பட்டது. இது மோதலின் பிளவுபட்ட கூறுகளையும், அதன் பன்முகத்தன்மையையும் விளக்குகிறது.
தோல்வியடைந்த சர்வதேச ராஜதந்திரம்
முக்கிய நாடுகளிடையே நிலவும் முரண்பட்ட திட்டங்களால் ஐ.நா தலைமையிலான பேச்சுவார்த்தை உள்பட அமைதிக்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்தன.
இந்த முக்கிய நாடுகள், பெரும்பாலும் அமைதியை நிலைநாட்டுவதைவிடத் தங்கள் மூலோபாய இலக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. அதை முன்னிலைப்படுத்தி நிலையான தீர்மானங்களை ஏற்படுத்தாமல் விட்டுவிடுகின்றன.
“இதன் அடிப்படைக் கட்டமைப்பு மாறாமல் உள்ளது. அசாத் ஆட்சி அதிகாரத்தைத் துறக்கவோ அல்லது சமரசம் செய்யவோ விரும்பவில்லை. அதே நேரத்தில் கிளர்ச்சிப் பிரிவுகள் அவரை வெளியேற்றுவதற்கும், நாட்டில் தங்களது இடத்தைப் பாதுகாப்பதற்கும் போராட்டத்தைத் தொடர்கின்றன” என்று பார்ன்ஸ்-டேசி கூறுகிறார்.
மேலும், “இந்தப் பிரச்னை எவ்வாறு தீர்க்கப்படும் என்பது தெளிவாகத் தெரியாததால், இந்தப் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள் மிகவும் பதற்றமடைந்துள்ளதாக” அவர் தெரிவித்தார்.
“பதற்றமடைந்துள்ள நாடுகள், பெரும்பாலும் சில கொள்கைகளைப் பின்பற்றுகின்றன.
உதாரணமாக, அமைதியை நிலைநாட்ட இரான் மற்றும் வளைகுடா நாடுகள் தற்காலிக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டன. மோதல் தீவிரமடைவதைத் தடுக்க, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பழமைவாத வெளியுறவுக் கொள்கைகளைப் பின்பற்றுவதையும் கூறலாம்,” எனக் குறிப்பிடுகிறார் பார்ன்ஸ்-டேசி.
டிரம்ப் நிர்வாகத்தில், அமெரிக்காவின் கொள்கைகள் மாற்றப்பட்டதையும், அதன் விளைவாக போர்ச்சூழல் கணிக்க முடியாதவாறு மாறத் தொடங்கியதையும், சில வல்லுநர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.
உதாரணமாக, டிரம்ப் பதவியேற்புக்கு முன்னதாகத் தனது நிலையை வலுப்படுத்திக் கொள்ள, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் சாதகமான பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்த, துருக்கி சமீபத்திய கிளர்ச்சிக் குழுவின் தாக்குதலை ஆதரித்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் பார்ன்ஸ்-டேசியின் கூற்றுப்படி, டிரம்ப் நிர்வாகத்தின் மத்திய கிழக்கு குறித்த உத்திகள் தெளிவாக இல்லை.
“மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவான, இரான் ஆக்கிரமிப்புக்கு எதிரான மத்திய கிழக்குக் கொள்கையை விரும்பும் ஒரு பிரிவு, அமெரிக்காவின் தலையீட்டைத் திரும்பப் பெறுவதை ஆதரிக்கும் மற்றொரு பிரிவு என டிரம்ப் நிர்வாகத்தில், இரண்டு பிரிவுகள் உள்ளன.
ஆனால் டிரம்ப் இரானை குறிவைத்து, அமெரிக்க தலையீட்டைத் தொடர்வாரா அல்லது அமெரிக்காவின் தலையீட்டைத் திரும்பப் பெரும் திட்டத்தை விரைவுபடுத்துவாரா என்பது உறுதியற்றதாக உள்ளது.
இந்த நிச்சயமற்ற சூழலால், பிராந்திய அரசுகள் தங்கள் மோதல்களைச் சுயாதீனமாகத் தாங்களே தீர்க்க நேரிடலாம்”, என்றும் பார்ன்ஸ்-டேசி தெரிவிக்கின்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.