கேட்வே ஆஃப் இந்தியா: பிரிட்டிஷ் ஆட்சியின் தொடக்கம் மற்றும் முடிவின் அடையாளமாக நிற்கும் நினைவுச் சின்னம்
- எழுதியவர், ஜான்வீ மூலே மற்றும் அம்ருதா துர்வே
- பதவி, பிபிசி மராத்தி
மும்பையில் உள்ள நினைவுச்சின்னமான, ‘கேட்வே ஆஃப் இந்தியா’ நிறுவப்பட்டு இன்றுடன் (நவம்பர் 4) நூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக, இது மும்பை நகரின் அடையாளமாக மட்டுமின்றி, இந்த பிராந்தியத்தின் வரலாற்றைக் குறிக்கும் ஒரு முக்கிய சாட்சியாகவும் இருக்கிறது.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி புரிந்த காலத்தில், 1911ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் ராணி மேரி ஆகியோர் இந்தியாவிற்கு வருகை தந்ததன் நினைவாக இது கட்டப்பட்டது. அவர்கள் அப்போதைய பம்பாயில் உள்ள அப்பல்லோ பண்டரில் வந்திறங்கினர்.
கடந்த 1948ஆம் ஆண்டு, இந்தியாவை விட்டு கடைசியாக பிரிட்டன் துருப்புகள் ‘கேட்வே ஆஃப் இந்தியா’ வழியேதான் வெளியேறின. எனவே இது பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவையும் இந்தியாவின் சுதந்திரத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
எவ்வாறு கட்டப்பட்டது?
கேட்வே ஆஃப் இந்தியாவின் அமைப்பு மஞ்சள் பசால்ட் கற்கள் மற்றும் கான்கிரீட் கலவையால் உருவாக்கப்பட்டது. இதன் உயரம் 26 மீட்டர் (85 அடி).
இந்தோ – சாரசெனிக் பாணியில் கட்டப்பட்ட இந்த அமைப்பு, இந்தோ- இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய கட்டடக்கலையின் கூறுகளை இணைக்கிறது.
ஆனால் அது எப்படி கட்டப்பட்டது?
கேட்வே ஆஃப் இந்தியா, பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் முக்கிய துறைமுகமான அப்பல்லோ பண்டர் பகுதியில் கடலைப் பார்த்தபடி அமைந்துள்ளது.
ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், டாடா குழுமத்தின் நிறுவனர் ஜம்செட்ஜி டாடா, கேட்வே ஆஃப் இந்தியா கட்டப்படுவதற்கு 21 ஆண்டுகளுக்கு முன்பு ‘தி தாஜ் மஹால் பேலஸ்’ என்னும் ஹோட்டலை கட்டினார். மும்பையில் ‘தி தாஜ் மஹால் பேலஸ்’ ஹோட்டல் 1903ஆம் ஆண்டு டிசெம்பர் 16ஆம் தேதியன்று திறக்கப்பட்டது.
நினைவுச் சின்னமான கேட்வே ஆஃப் இந்தியா
கடந்த 1911ஆம் ஆண்டில், இந்தியாவின் பேரரசர் மற்றும் பேரரசியாக தங்களது வாரிசுரிமையைக் குறிக்கும் விதமாக அரசர் ஐந்தாம் ஜார்ஜ், ராணி மேரி ஆகியோர் இந்தியாவிற்கு வருகை தந்தனர்.
அவர்கள்தான் இந்தியாவுக்கு வருகை தந்த முதல் பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது வருகையைக் குறிக்கும் விதமாக கேட்வே ஆஃப் இந்தியா கட்டப்பட்டது.
கடந்த 1911ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியன்று கேட்வே ஆஃப் இந்தியாவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், பிரிட்டிஷ் அரச குடும்பம் வந்தபோது இந்த நினைவுச் சின்னம் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை.
எனவே அதற்குப் பதிலாக ஒரு தற்காலிக அட்டை கொண்டு செய்யப்பட்ட மாதிரி வடிவம் அவர்களிடம் காட்டப்பட்டது.
கடந்த 1914ஆம் ஆண்டில், கேட்வே ஆஃப் இந்தியாவுக்காக ஸ்காட்டிஷ் கட்டடக் கலைஞர் ஜார்ஜ் விட்டெட்டின் இறுதி வடிவமைப்பு அங்கீகரிக்கப்பட்டது, மேலும் இந்த நினைவுச் சின்னத்தின் கட்டுமானம் 1924ஆம் ஆண்டு நிறைவடைந்தது.
கேட்வே ஆஃப் இந்தியாவின் மேற்பார்வையாளர் அல்லது மேலாளராகப் பணியாற்றிய ராவ் பஹதூர் யேஷ்வந்த்ராவ் ஹரிஷ்சந்திர தேசாய் என்பவரால் இந்தக் கட்டமைப்பின் ஒரு சிறு கல் மாதிரி உருவம் உருவாக்கப்பட்டது.
அவரது சந்ததியினர் அதை ‘மினி கேட்வே ஆஃப் இந்தியா’ என்று இன்னும் மும்பையில் பாதுகாத்து வருகின்றனர்.
கேட்வே ஆஃப் இந்தியா பிரிட்டிஷ் வைஸ்ராய்கள், கவர்னர்கள் மற்றும் பிற முக்கியத் தலைவர்கள் இந்தியாவுக்குள் நுழைவதற்கான நுழைவாயிலாகச் செயல்பட்டது.
கடந்த 1915ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பியபோது அப்பல்லோ பண்டர் பகுதியில்தான் வந்து இறங்கினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மற்றொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு நடந்தது. 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று இந்தியாவில் இருந்து கடைசி பிரிட்டிஷ் படைகள் கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் இருந்துதான் வெளியேறின.
சாமர்செட் லைட் காலாட்படையின் முதல் படைகள் இந்த நினைவுச் சின்னத்தின் வழியாக வெளியேறி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் முடிவைக் குறிக்கும் அடையாளமாக அமைந்தது.
இன்று, கேட்வே ஆஃப் இந்தியா ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக இருக்கிறது.
கேட்வே ஆஃப் இந்தியா அமைந்துள்ள வளாகத்தில், அதற்கு நேரெதிராக மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் வெண்கல சிலைக்குப் பதிலாக, 1961ஆம் ஆண்டில் மன்னர் சிவாஜியின் சிலை நிறுவப்பட்டது.
இந்த வளாகத்தில் சுவாமி விவேகானந்தரின் சிலையும் இருக்கிறது. அவர் இந்தச் சிறிய துறைமுகப் பகுதியில் இருந்துதான் அமெரிக்காவிற்குப் பயணம் செய்தார்.
இந்த வளாகத்தில் உள்ள சிறிய துறைமுகத்தில் இருந்து, யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளமான எலிஃபண்டா குகைகள், அலிபாக், ரெவாஸ், மண்ட்வா போன்ற கடலோர நகரங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் படகுகள் வந்து செல்கின்றன.
கடந்த 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கேட்வே ஆஃப் இந்தியா வளாகத்தில் ஒரு பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டது, அதன் பின்னர் வளாகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
புகழ்பெற்ற தி தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல், கடலில் இருந்து பார்க்கும்போது கேட்வே ஆஃப் இந்தியாவுக்கு நேரெதிரே இடது பக்கத்தில் அமைந்துள்ளது.
இந்தக் கட்டடத்தில் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதியன்று மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. இந்த வளாகம் சில நேரங்களில் போராட்டம் நடைபெறும் இடமாகவும் செயல்படுகிறது.
கேட்வே ஆஃப் இந்தியா, பல திரைப்படங்கள், படப் பிடிப்புகள், இசைக் கச்சேரிகள் மற்றும் பிற கலாசார நிகழ்வுகள் நடைபெறும் ஒரு கண்கவர் இடமாக இருக்கிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம், மரியா கிராசியா சியூரி என்பவர் டையோர் நிறுவனத்திற்காக வடிவமைத்த ஆடைகளை கேட்வே ஆஃப் இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தினார்.
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 4ஆம் தேதி, இந்திய கடற்படை தினத்தை ஒட்டி கேட்வே ஆஃப் இந்தியாவின் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
பருவமழையை யாரும் மறக்க முடியாது, கனமழை அல்லது புயலின்போது, பெரிய அலைகள் கேட்வே ஆஃப் இந்தியா மீது அடிக்கடி மோதும்.
எனவே, கேட்வே ஆஃப் இந்தியா இப்போதும் மும்பை மற்றும் அதன் மக்களுடைய வாழ்க்கையின் அடையாளமாக இருக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.