பிரபல கசினோ விடுதி மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் சுற்றிவளைப்பு ! on Wednesday, December 04, 2024
கொள்ளுப்பிட்டியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனயை முன்னெடுத்து வந்த பிரபல கசினோ விடுதியொன்று மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுங்கவரியில்லா 100 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதோடு, அவற்றின் மொத்த பெறுமதி 25 இலட்சம் ரூபாவுக்கு அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து மாடிகளைக் கொண்ட விடுதியில் ஒவ்வொரு தளத்திற்கும் வருகை தரும் உறுப்பினர்களுக்கு இலவச மதுபானம் வழங்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், அந்தந்த இடத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உரிமத்தின் மூலம் ஒரு மதுபானக் கூடத்தை மாத்திரமே இயக்க முடியும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டுக்கு பாரிய வரி இழப்பு ஏற்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையின் பேரில், தலைமை அலுவலகம் மற்றும் கொழும்பு நகர மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.