பஞ்சாப்: முன்னாள் துணை முதல்வர் கொலை முயற்சி முறியடிக்கப்பட்டது எப்படி? என்ன நடந்தது?
பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சரும் ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்பீர் சிங் பாதல், தான் பெற்ற மத தண்டனை காரணமாக பொற்கோவில் வாயிலில் காவல் பணியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2007 முதல் 2017 வரை பஞ்சாபில் ஷிரோமணி அகாலி தல் அரசு எடுத்த சில முடிவுகளுக்காக அகல் தக் சாஹிப் சீக்கிய மதக்குழு அவருக்கு மத தண்டனை வழங்கியது. அவருடன் சேர்த்து அகால் தல் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
தண்டனைப்படி சுக்பீர் சிங் பொற்கோவிலுக்கு வெளியே இரண்டு நாட்களுக்கு ஒரு மணிநேரம் பணியாட்களின் உடை அணிந்து, வாயிற்காவலராக சேவை செய்ய வேண்டும். தண்டனையின் இரண்டாம் நாளான இன்று இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.
அவருக்கு எந்த பாதிப்புமும் இன்றி இந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
“துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கூட்டத்தில் இருந்ததாகவும், அவரைத் தாக்கி கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்தியவர் சுக்பீர் பாதலுக்கு அருகில் இருந்ததாகவும்” பிபிசி பஞ்சாபி செய்தியாளர் ரவீந்தர் சிங் ராபின் கூறினார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகளில், சுக்பீர் பாதல் தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பொற்கோவிலுடைய தர்பார் சாஹிப் நுழைவாயிலுக்கு வெளியே சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்ததைக் காண முடிகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார்?
பிபிசி பஞ்சாபி செய்தியாளர் ரவீந்தர் சிங் ராபின் பகிர்ந்துள்ள தகவலின்படி, “அமிர்தசரஸில் சுக்பீர் சிங் பாதல் மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சி முறியடிக்கப்பட்டதாக”, அமிர்தசரஸ் காவல்துறை ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர் தெரிவித்துள்ளார்.
“துப்பாக்கிச் சூடு நடத்தியவர், ‘நாராயண் சிங் சவுதா’ என்றும், அவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாகவும்” புல்லர் கூறினார்.
காலிஸ்தான் இயக்கத்துடன் இணைந்து, நாராயண் சிங் சவுதா தீவிரமாகச் செயல்பட்டதாகவும், காலிஸ்தான் விடுதலைப் படை மற்றும் அகல் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2004ஆம் ஆண்டு புரைல் சிறையிலிருந்து காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த நால்வர் தப்பியோடிய வழக்கிலும், சவுதா குற்றம் சாட்டப்பட்டவர். அவரை 2013இல் போலீசார் கைது செய்தனர்.
மேலும் “Conspiracy against Khalistan” என்ற புத்தகத்தையும் நாராயண் சிங் சவுதா எழுதியுள்ளார்.
கொலை முயற்சி முறியடிக்கப்பட்டது எப்படி?
“நாராயண் சிங் சவுதா, தேரா பாபா நானக் நகரத்தின் சவுதா கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது இரு மகன்களும் வழக்கறிஞர்களாக உள்ளனர்.
நாராயண் சிங் சவுதா அரசியல் அறிவியலில் முதுகலை முடித்துள்ளார்” என மூத்த பத்திரிக்கையாளர் கரம்ஜித் சிங் தெரிவித்தார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில், பொற்கோவிலில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர் தெரிவித்தார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக, பொற்கோவில் வளாகத்தில் 175க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவரை முதலில் எங்கள் ஊழியர் ரிஷ்பால் சிங் பார்த்தார். இதற்குப் பிறகு, காவல்துறை அதிகாரிகளான ஜஸ்பீர் சிங், பர்மிந்தர் சிங் ஆகியோர் தாக்குதல் முயற்சியின்போது நாராயண் சிங் சவுதாவின் கையைப் பிடித்து, துப்பாக்கியை மேல்நோக்கித் திருப்பினர். இதனால் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்” காவல்துறை கூடுதல் துணை ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர் கூறியுள்ளார்.
தாக்குதல் குறித்து போலீசார் கூறியது என்ன?
“போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு தொடர்பாக ஆணையர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்” என்று பஞ்சாப் கூடுதல் துணை காவல் ஆணையர் ஹர்பால் சிங் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
மேலும், “காலை 7 மணி முதல், நாங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் கவனித்துக் கொண்டிருந்தோம். குறிப்பிட்ட இந்த நபரையும் கண்காணித்து வந்தோம். மேலும் சுக்பீர் சிங் பாதலை சுற்றி பாதுகாப்பு அளித்து வந்தோம்” என்று இந்த விவகாரம் குறித்து அவர் கூறினார்.
மேற்கொண்டு பேசியவர், “பாதல் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ‘நாராயண் சிங் சவுதா’ என அறியப்படுகிறார். இவர் நேற்று தர்பார் சாஹிப் நுழைவாயில் பக்கம் சுற்றித் திரிந்துள்ளார்.”
“பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், எச்சரிக்கையாக இருந்ததால் அவர் நேரடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. நாங்கள் கவனமாக இருந்து அவரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வந்தோம்,” என்று கூறினார்.
கண்டனம் தெரிவித்த ஷிரோமணி அகாலிதளம்
ஷிரோமணி அகாலி தளம் சார்பில் பேசிய டாக்டர் தல்ஜித் சிங் சீமா, சுக்பீர் சிங் பாதல் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும், மிகப்பெரிய சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது என்றும், மாநிலம் எந்தத் திசையில் செல்கிறது என்றும் சீமா கேள்வி எழுப்பினார்.
“இந்த முழு சம்பவம் குறித்தும் வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும். மாநில அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. பஞ்சாப் மாநில முதல்வர் ‘பகவந்த் மான்’ மற்றும் ‘பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர்’ என யாராவது ஒருவர் இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று டாக்டர் தல்ஜித் சிங் சீமா கூறியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.