திருவண்ணாமலை: சாத்தனூர் அணையிலிருந்து முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறக்கப்பட்டதா?

சாத்தனூர் அணை

படக்குறிப்பு, சாத்தனூர் அணை கடந்த ஒன்றாம் தேதி நள்ளிரவு முறையான அறிவிப்பில்லாமல் திறக்கப்பட்டதால் பலத்த சேதம் ஏற்பட்டதாக பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
  • எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து நள்ளிரவு நேரத்தில் முறையான அறிவிப்பில்லாமல் தண்ணீர் திறக்கப்பட்டதால் பலத்த சேதம் ஏற்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டதாகவும் முறையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தமிழக அரசு கூறுகிறது

சாத்தனூர் அணையில் தேங்கும் தண்ணீர் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் ஃபெஞ்சல் புயலால் வட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக சாத்தனூர் அணை நிரம்பியதால், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘முறையான அறிவிப்பு இல்லை’

திருவண்ணாமலை சாத்தனூர் ஆணை திறப்பு

படக்குறிப்பு, சாத்தனூர் டேம்

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் அருள்குமார் பாண்டியன் பிபிசி தமிழிடம் சாத்தனூர் அணை திறப்பு முறையான அறிவிப்பில்லாமலேயே நடைபெற்றதாக கூறினார்

“எப்பொழுதுமே சாத்தனூர் அணையில் இருந்து 20,000 அல்லது 30000 கன அடி தண்ணீர் திறந்து விடும் பொழுது அறிவிப்பு கொடுப்பார்கள். ஆனால் தற்போது ஃபெஞ்சல் புயல் மழை காரணமாக சாத்தனூர் அணையில் தண்ணீர் அதிகரித்தது. ஆனால் தண்ணீர் திறக்கும் முன்பு முறையான அறிவிப்பு கொடுக்காததால் எங்கள் மாவட்ட பகுதி தென்பெண்ணைஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மக்கள் அதிக இழப்பை சந்தித்துள்ளனர்” என்றார்

சாத்தனூர் அணை

படக்குறிப்பு, சாத்தனூர் அணையில் இருந்து 20,000 அல்லது 30000 கன அடி தண்ணீர் திறந்து விடும் பொழுது அறிவிப்பு கொடுப்பது வழக்கம்

அதிகாரிகள் அறிவிப்பு தந்து விட்டோம் என்று பேப்பரை காட்டுகின்றார்கள். இரவில் கொடுத்த அறிவுப்பு எங்களுக்கு எப்படி தெரியும் என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர், “தொண்டமானூர்- அகரம் பள்ளிப்பட்டு பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம் அடித்து சென்றது . திறந்த மூன்று மாத காலத்திலேயே பாலம் அடித்துச் செல்லப்பட்டது ஆச்சரியமாக உள்ளது”என்றார்

திருவண்ணாமலை மாவட்டம் தென் முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த நீர் பாசன சங்க தலைவர் ஜெயராமன் பிபிசி தமிழிடம், ”வழக்கம் போல இம்முறையும் தண்ணீர் திறக்கப்படும்போது அறிவிப்பு தந்தார்கள். அணையில் இருந்து மட்டும் தண்ணீர் வரவில்லை. அதிக கன மழை பெய்தாலும் பாம்பாறு உள்ளிட்ட சிறிய ஆறுகளின் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததாலும் எல்லாம் சேர்ந்து தென்பெண்ணையாற்றில் வருகிறது” என்றார்

சாத்தனூர் அணை திறப்பு

படக்குறிப்பு, சாத்தனூர் அணை திறப்பால் சூழ்ந்த வெள்ளம்

எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில், ”சாத்தனூர் அணையில் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்துக் கொண்டிருக்கும் போதே தென்பெண்ணை ஆற்றின் வெள்ள அபாய அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் டிசம்பர் 2 அதிகாலை 2.30 மணி அளவில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் ஆற்றின் கரையோரம் இருந்த திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல கிராமங்கள் வெள்ளநீர் புகுந்து பாதிப்புக்கு உள்ளாகியது ” என்றார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்,”முன்னறிவிப்பின்றி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் திருவண்ணாமலை விழுப்புரம் கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது கண்டிக்கத்தக்கது சாத்தனூர் அணை முன்னறிவிப்பு என்று திறந்துவிடப்பட்டதற்கு காரணம் என்ன இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் என்பதை கண்டறிய உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

டிசம்பர் ஒன்றாம் தேதி என்ன நடந்தது?

சாத்தனூர் டேம்

படக்குறிப்பு, சாத்தனூர் அணை

சாத்தனூர் அணை திறப்பு விவகாரம் குறித்து சாத்தனூர் அணையின் உதவி பொறியாளர் சந்தோஷ் பிபிசி தமிழிடம், ”கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே ஆர் எஸ் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையும் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையும் சாத்தனூர் அணைக்கு வந்தது. இதனால் அணையில் நீர்மட்டம் உயர்ந்தது” என்றார்

மேலும் அவர் ”டிசம்பர் ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நள்ளிரவில் வினாடிக்கு 1.68 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டமும் முழு கொள்ளளவான 119 அடியை நெருங்கியது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த தண்ணீர் தென்பெண்ணையாற்றில் அதிகாலை 2. 40 மணிக்கு திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது.”

இது விழுப்புரம் பகுதி அடைவதற்கு ஆறு மணி ஆகும். ஆனால் நாங்கள் இங்கு திறக்கப்படுவதற்கு முன்பாகவே விழுப்புரம் பகுதி தென்பெண்ணையாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு இருந்தது அதற்கு காரணம் அதன் கிளை ஆறுகளே என்கிறார் சந்தோஷ்

”அதிகாலையில் 1.68 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் இருக்கும் சிறு ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகவும் அதிக மழை பொழிவு காரணமாகவும் வடிகால் பகுதியான கடலூருக்கு செல்லும்போது 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி வரை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது” என்று கூறினார் அவர்.

அணையின் பாதுகாப்பு கருதி முறையான அறிவிப்பு கொடுத்தே அதிகாலை அணை திறக்கப்பட்டது என்று கூறும் அவர் ”இது குறித்த அறிவிப்புகள் மாவட்டத்தின் தாசில்தார்களுக்கு ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக ஒவ்வொரு முறையும் முன்னறிவிப்பு தருவது வழக்கம் அதன்படி இம்முறையும் செய்தோம்” என்றார்

அந்த அறிவிப்பு கடிதங்களையும் பிபிசிக்கு அனுப்பி வைத்தார்.

தென்பெண்ணை

படக்குறிப்பு, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் காட்சி இந்த பகுதியில் கரையின் ஓரம் பலத்த சேதமும் ஏற்பட்டுள்ளது

அணை திறப்புக்கு முன்பு ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தனூர் அணை திறப்புக்கு முன்பாக ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

”ஃபெஞ்சல் புயலால் நீர் பிடிப்பு பகுதியில் பெரும் மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது தண்ணீர் வரத்தை முன்கூட்டியே கணித்து அணையில் பாதுகாப்பு கருவி அணைக்கு வந்த தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது” என அறிக்கை மூலம் அவர் தெரிவித்துள்ளார்

”சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றிய பொய்யான தகவல்களை பரப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றார்கள். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சாத்தனூர் அணையின் வெள்ளப்பெருக்கு விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி முன்கூட்டியே கணித்து ஐந்து வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன” என்று அவர் தெரிவித்துள்ளார்

அணை திறப்பதற்கான நடைமுறை என்ன?

சாத்தனூர்

படக்குறிப்பு, சாத்தனூர் அணை திறப்பு முன் அறிவிப்பு கடிதம்

ஓர் அணை திறக்கப்படுவதற்கான வழிமுறைகளை பிபிசி தமிழிடம் விளக்கிய தமிழக பொதுப்பணித்துறையின் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் இளங்கோவன், ‘‘பொதுவாக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடும்போது மட்டும்தான், அரசாணை வெளியிடப்பட்டு, எவ்வளவு பரப்புக்கு எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்படுமென்று முன் கூட்டியே அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால் மழை வெள்ளம் போன்ற அவசர காலங்களில், அணையின் உயரத்தைப் பொருத்து, அதைத் திறப்பதற்கு அந்தந்த அணையின் செயற்பொறியாளருக்கே அதிகாரம் உள்ளது.’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘உதாரணமாக 119 அடி உயரமுள்ள சாத்தனுார் அணையில் 117 அடி தண்ணீர் நிரம்பியவுடனே, அதைத் திறப்பதற்கு முடிவெடுக்கப்பட்டிருக்கும்” என்றார்

”வழக்கமாக, பகல் நேரமாக இருந்தால் இதுபற்றிய தகவல் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும். நள்ளிரவு நேரமாக இருந்தால், அணைப்பகுதியில் உள்ள பெரிய சைரனில் அணை திறப்பதற்கான அபாய ஒலி எழுப்பப்படும். இதற்கு அரசின் மேலதிகாரிகளிடம் தகவல் கூறி, அனுமதி பெற வேண்டுமென்ற அவசியம் இல்லை. கண்காணிப்புப் பொறியாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு, செயற்பொறியாளரே அணையைத் திறக்கலாம்.’’ என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு