இன்ஸ்டாகிராமில் பொழுதைக் கழிக்கும் நபர்கள் ப்ரெய்ன் ராட் என அழைக்கப்படுவது ஏன்?
- எழுதியவர், யாஸ்மின் ரூஃபோ
- பதவி, பிபிசி செய்தி
-
இன்ஸ்டாகிராம் ரீல்களில் நேரத்தை வீணடிக்கிறீர்களா? உங்களை அறியாமல் பல மணி நேரங்கள் ரீல்களை பார்க்க ஸ்க்ரோல் செய்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்கு ப்ரெயின் ராட் (brain rot) பாதிப்பு இருக்கலாம்.
ப்ரெயின் ராட் என்னும் வார்த்தையை, ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ் இந்த ஆண்டின் வார்த்தை (word of the year) எனக் குறிப்பிடுகிறது.
ப்ரெயின் ராட் என்பது சமூக ஊடகங்களில் பயனற்ற ஆன்லைன் உள்ளடக்கங்களை பார்க்க நேரம் செலவிடுவதால் ஏற்படும் விளைவை குறிப்பிடும் ஒரு வார்த்தை. இந்த வார்த்தையின் பயன்பாடு 2023 மற்றும் 2024 க்கு இடையில் 230% அதிகரித்துள்ளது.
Demure, Romantasy, dynamic pricing உள்ளிட்ட ஐந்து வார்த்தைகளில் இறுதியாக Brain rot-ஐ இந்த ஆண்டுக்கான வார்த்தையாக ஆக்ஸ்ஃபோர்டு தேர்வு செய்தது
ப்ரெயின் ராட் என்றால் என்ன?
ப்ரெயின் ராட் என்பது ஒரு நபரின் மன அல்லது அறிவுசார் நிலை மோசமடைவதைக் குறிக்கும் வார்த்தை ஆகும்.
இது, பயனற்ற அல்லது முக்கியமற்ற உள்ளடக்கங்களை அதிகப்படியாக பார்ப்பதன் விளைவாக ஏற்படும் நிலை என்று கருதப்படுகிறது.
ப்ரெயின் ராட் வார்த்தை இணையம் உருவாக்கப்படுவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்தது.
இந்த வார்த்தையின் ஆரம்பகால பயன்பாடு ஹென்றி டேவிட் தாரோவால் 1854 இல் வால்டன் என்ற புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
சவால் மிக்க ஆழ்ந்த சிந்தனைகளுக்கு குறைவான முக்கியத்துவம் கொடுத்து மதிப்பிழக்கச் செய்யும் சமூகத்தின் போக்கை அவர் விமர்சிக்கிறார். இதனை மன மற்றும் அறிவுசார் வீழ்ச்சியின் ஒரு பகுதியாக கருதுகிறார்.
“பிரிட்டன் உருளைக்கிழங்கு அழுகுவதை நிறுத்த முயற்சிக்கிறது, ஆனால் மூளை அழுகல் பிரச்னையை குணப்படுத்த யாரும் முயற்சிக்க மாட்டார்களா?” என்னும் கேள்வியை அவர் முன்வைக்கிறார்.
“ஏனெனில் இந்த பிரச்னை மிகவும் பரவலானது மற்றும் மோசமானது.” என்கிறார் ஹென்றி டேவிட்.
ஆரம்பத்தில் இந்த வார்த்தை சமூக ஊடகங்களை பயன்படுத்தும், ஜென் ஸி தலைமுறை மற்றும் ஜென் ஆல்ஃபா தலைமுறையினர் மத்தியில் பிரபலமானது.
ஆனால் இப்போது சமூக ஊடகங்களில் காணப்படும் பயனற்ற உள்ளடக்கங்களை விவரிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
“ப்ரெயின் ராட் என்ற ஒரு நிலை உள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.” என்கிறார் பேராசிரியர் பிரசிபில்ஸ்கி.
“இணைய உலகம் மீதான நமது வெறுப்பை பிரதிபலிக்கவே இந்த வார்த்தையை நாம் பயன்படுத்துகிறோம். சமூக ஊடகங்கள் பற்றிய நமது கவலைகளை வெளிப்படுத்த நாம் பயன்படுத்தும் வார்த்தை இது. உண்மையில் ப்ரெயின் ராட் எனும் ஒரு பாதிப்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை” என்கிறார் அவர்.
ஆக்ஸ்ஃபோர்டு வார்த்தை தேர்வு எதை சுட்டிக்காட்டுகிறது?
“கடந்த இருபது ஆண்டுகளாக ஆக்ஸ்ஃபோர்டு Word of the Year தேர்வைப் பார்க்கும்போது, நம் மெய்நிகர் வாழ்க்கை முக்கியத்துவம் பெறுகிறது என்பது புரிகிறது. நமது மெய்நிகர் வாழ்க்கை மீது சமூகம் எவ்வாறு அதிக அக்கறை செலுத்துகிறது என்பதும் ஆன்லைன் கலாசாரம் நம் அடையாளங்கள் மற்றும் உரையாடல் தலைப்புகளை எவ்வாறு ஊக்குவிக்கிறது என்பதும் இதன் மூலம் தெரிகிறது” என்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு மொழிகள் பிரிவுத் தலைவர் காஸ்பர் கிராத்வோல்.
“கடந்த ஆண்டு ‘rizz’ என்ற சொல் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த சொல் ஆன்லைன் சமூகங்களுக்குள் மொழி எவ்வாறு உருவாகிறது, வடிவமைக்கப்படுகிறது மற்றும் பகிரப்படுகிறது என்பதற்கு ஒரு சுவாரஸ்யமான உதாரணம்” என்றார்.
“ப்ரெயின் ராட் என்பது மெய்நிகர் வாழ்க்கையின் ஆபத்துக்களை பற்றியும் நமது ஓய்வு நேரத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது பற்றியும் பேசுகிறது.”
பிற வார்த்தைகள்
Demure (பெயரடை சொல்) : மென்மையான இயல்புடைய நபரை குறிக்கும் சொல். தோற்றத்தில் அல்லது அவரது பண்பில் அடக்கமான நபர்.
Dynamic pricing (பெயர்ச்சொல்): மாறிவரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப ஒரு பொருள் அல்லது சேவையின் விலையை மாற்றுதல். குறிப்பாக ஒரு பொருளுக்கு அதிக தேவை இருக்கும்போது, அதன் விலை அதிகரிக்கிறது.
Lore (பெயர்ச்சொல்): ஒரு நபர் அல்லது தலைப்பு தொடர்பான உண்மைகள், பின்னணித் தகவல்கள் மற்றும் கதைகளின் தொகுப்பு. ட்ரெண்ட் ஆகும் தலைப்பைப் பற்றிய முழுமையான புரிதல் அல்லது விவாதத்திற்கு அவசியமானதாகக் கருதப்படும் பின்னணித் தகவல்.
Romantasy (பெயர்ச்சொல்): காதல் மற்றும் கற்பனையை இணைக்கும் புனைகதை. பொதுவாக மாய, இயற்கைக்கு அப்பாற்பட்ட மற்றும் சாகசக் கதைகளை குறிக்கும் சொல். ஆனால் அவற்றின் மையக் கருவாக`காதல்’ இருக்கும்.
Slop (பெயர்ச்சொல்) : செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கலை, எழுத்து அல்லது பிற உள்ளடக்கம். இது கண்மூடித்தனமாக ட்ரெண்ட் செய்யப்படுகிறது. இணையத்தில் பகிரப்படுகிறது. இந்த பகிர்வுகள் தரம் குறைந்த, நம்பகத்தன்மையற்ற அல்லது துல்லியமற்றதாக வகைப்படுத்தப்படுகிறது