’40 ஆண்டுகளில் பார்க்காத வெள்ளம், கட்டிய துணியோடு வந்தோம்’ – கொதிக்கும் விழுப்புரம் மக்கள்

சுந்தரி

படக்குறிப்பு, சுந்தரி
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் விழுப்புரம் உள்பட கடலோர மாவட்டங்கள் பலவும் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.

விழுப்புரத்தில் பெரும்பாலான விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்ததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

அரசின் உதவிகள் தற்போது வரையில் வந்து சேரவில்லை என அப்பகுதி மக்கள் கொந்தளிக்கின்றனர்.

மக்களின் குறைகளைத் தீர்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறுகிறார், விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ லட்சுமணன்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விழுப்புரம் நிலவரம்

ஃபெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால், இம்மாவட்டங்களில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை அறிய பிபிசி தமிழ் நேரில் சென்றது.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரும்பு, நெல், வெண்டை, உளுந்து ஆகியவை இங்கு பிரதானமாக பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு பொய்யப்பாக்கம், கோலியனூர் உள்பட நான்கு ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால், தங்களின் கிராமங்கள் தனித்துவிடப்பட்டதாக கூறுகிறார், கள்ளப்பட்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் அருள்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஏரிகள் உடைந்துவிட்டதால் நரையூர் வழியாக கள்ளப்பட்டு செல்லும் பாதை அடைபட்டுவிட்டது. அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்ல முடியாத நிலையில் தவிக்கிறோம்” என்கிறார்.

“மருத்துவ உதவி தேவை என்றால், வளவனூர், கோலியனூர் செல்ல வேண்டும். அரசிடம் இருந்து எந்த உதவியும் வந்து சேரவில்லை” என்கிறார் அருள்.

விழுப்புரத்தில் பெரும்பாலான விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்துள்ளது

படக்குறிப்பு, விழுப்புரத்தில் பெரும்பாலான விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்துள்ளது

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

தன்னுடைய ஏழு ஏக்கர் நிலத்தில் நன்கு விளைந்திருந்த கரும்புகள், மழை நீரால் முற்றிலும் சேதம் அடைந்துவிட்டதாக கூறுகிறார், நரையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வம்.

இவர், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் என 2 லட்ச ரூபாய் வரை செலவு செய்து கரும்பு பயிரிட்டுள்ளார். “இவ்வளவு வெள்ளத்தை எதிர்பார்க்கவில்லை. இதை நம்பித் தான் மொத்த குடும்பமும் உள்ளது” என்கிறார்.

விழுப்புரத்தில் தனியார் சர்க்கரை ஆலைக்கு தனது கரும்புகளை விற்று வருவதாக கூறும் செல்வம், “வெள்ளத்தில் மூழ்கியதால் இந்தக் கரும்பை பயன்படுத்த முடியாது. ஆடு, மாடுகளுக்குத்தான் கொடுக்க வேண்டும்” என்கிறார்.

இதேபோல், தனது விவசாய நிலமும் பாதிக்கப்பட்டதாக கூறுகிறார், நரையூர் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா.

இவர் தனது ஓர் ஏக்கர் நிலத்தில் உளுந்து பயிரிட்டிருந்தார். வெள்ளம் வந்ததால் விதைத்த அடையாளமே தெரியாத அளவுக்கு பயிர்கள் மூழ்கிவிட்டதாக அவர் வேதனைப்பட்டார்.

“12 ஏக்கரில் நெல் விவசாயம் செய்து வந்தேன். நல்ல விலை கிடைக்குதுன்னு கருப்பு கவுனி பயிரிட்டேன். இப்ப எல்லாம் மூழ்கிப் போயிருச்சு” என்கிறார், கோலியனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பிரேம்நாத்.

விவசாயி செல்வம்

படக்குறிப்பு, விவசாயி செல்வம்

’44 ஆண்டுகளுக்குப் பிறகு பெருவெள்ளம்’

1980-ஆம் ஆண்டில் இப்படியொரு வெள்ளத்தைப் பார்த்ததாகவும் அதன்பிறகு 44 ஆண்டுகளுக்குப் பிறகு பெருவெள்ளத்தைப் பார்ப்பதாகவும் கூறுகிறார், கோலியனூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன்.

கடைகள் மூடிக் கிடப்பதால் கடந்த மூன்று நாட்களாக பால், ரொட்டி, உணவு உள்பட எதுவும் கிடைக்கவில்லை எனவும் அரசாங்கமோ அதிகாரிகளோ தங்களை வந்து பார்க்கவில்லை எனவும் அவர் கூறினார்.

வழக்கத்துக்கு மாறாக விழுப்புரம் மாவட்டத்தை வெள்ள நீர் சூழ்ந்தது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய விக்கிரவாண்டி எம்.எல்.ஏ அன்னியூர் சிவா, “சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர்” என்றார்.

மேலும் ”திருவண்ணாமலை, திருக்கோயிலூர், விழுப்புரம் ஆகியவற்றின் பெய்த மழையும் விக்கிரவாண்டியில் உள்ள பம்பை வாய்க்காலுக்கு வருகிறது. அதனால் இரண்டு பக்கமும் வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது. சுமார் 110 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன” என்கிறார் அவர்.

இந்தப் பாதிப்பால் விவசாயிகள் மட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கான விவசாயக் கூலி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார், கள்ளப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அருள்.

கோலியனூர் பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மை, “விவசாயக் கூலி வேலைக்குப் போனா, தினமும் 150 ரூபாய் கூலி கிடைக்கும். அஞ்சு நாளா வேலை இல்லை. வேலைக்குப் போனா தான் சாப்பாடு. அரசாங்கம்தான் உதவி செய்யணும்” என்கிறார்.

ஐந்து நாட்களாக வேலை இல்லை என்கிறார் வள்ளியம்மை

படக்குறிப்பு, ஐந்து நாட்களாக வேலை இல்லை என்கிறார் வள்ளியம்மை

நிவாரண முகாம்களில் என்ன நிலவரம்?

மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புகள் பலவும் நீரில் மூழ்கிவிட்டதால், அப்பகுதிளைச் சேர்ந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி, “59 நிவாரண முகாம்களில் 3,200க்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 78 கிராமங்களில் அதிக அளவு நீர் புகுந்துவிட்டது” என்கிறார்.

விழுப்புரத்தில் கடந்த சில நாட்களில் 50 செ.மீ அளவுக்கு மேல் மழை பெய்ததும் வெள்ளத்திற்கு ஒரு காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

சென்னை-கும்பகோணம் பைபாஸ் சாலையில் சமத்துவபுரம் குடியிருப்புகள் உள்ளன. இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஞாயிற்றுக் கிழமையில் (டிசம்பர் 1) காலையில் இருந்தே இந்த வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துவிட்டது. எட்டு அடி உயரத்துக்கு மேல் வெள்ள நீர் புகுந்ததால், அருகில் உள்ள சமுதாய நலக் கூடம் ஒன்றில் இப்பகுதி மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

‘கட்டிய துணியோடு வந்தோம்’

நிவாரண முகாமில் தங்கியுள்ள சுந்தரி, “பல வருடமாக சமத்துவபுரத்தில் குடியிருந்து வருகிறோம். வீட்டுக்குள்ள தலைக்கு மேல தண்ணி போகுது. ஆடு, மாடு உட்பட வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் இழந்துட்டோம். எதுவுமே மிச்சம் இல்லை” என்கிறார்.

வெள்ளம் வீட்டுக்குள் வந்ததால், கட்டிய துணியோடு நிவாரண முகாமுக்கு வந்ததாக சுந்தரி கூறுகிறார். “முகாம்களில் இருக்கும் தங்களுக்கு உடை, போர்வை, பாய் ஆகியவை கிடைத்தால் நன்றாக இருக்கும்” என அவர் கூறுகிறார்.

 உணவு குடிதண்ணீர் வழங்கப்படவில்லை என கூறி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

படக்குறிப்பு, உணவு, குடிதண்ணீர் வழங்கப்படவில்லை என கூறி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

கோவிலில் சிக்கிய பக்தர்கள்

அடுத்து, விழுப்புரம் அரசூர் வராகி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கினர். அவர்களால் கோயிலை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தாங்கள் பாதிப்பில் உள்ளதாக வாட்ஸ்ஆப்பில் வீடியோ பதிவு ஒன்றை அவர்கள் அனுப்பியுள்ளனர். இதனை அறிந்து அவர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினரும் பேரிடர் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டனர்.

ஆனால், ஞாயிறு, திங்கள் என இரு நாட்களும் மழை பெய்து கொண்டிருந்ததால், அவர்களை ஹெலிகாப்டர் உதவியோடு மீட்கும் முயற்சிகள் தோல்வி அடைந்தன.

அதேபோல், திருப்பாச்சனூர், மேட்டுப்பாளையம், பில்லூர், காணை, மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் 20 இடங்களில் தரைப்பாலம் மூழ்கிவிட்டது. இதனால் 140க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் விழுப்புரம், விக்ரவாண்டி, அரசூர் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழையின் தாக்கம் குறைந்தாலும் வெள்ள நீர் வடிவதற்கு தாமதம் ஏற்படுவதாக கூறுகிறார், விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி.

 விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ லட்சுமணன்

படக்குறிப்பு, விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ லட்சுமணன்

விழுப்புரம் எம்.எல்.ஏ சொல்வது என்ன?

விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ லட்சுமணன், “முதலமைச்சர் நேரில் கள ஆய்வு நடத்தி, நிவாரண பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்” என்கிறார்.

விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான நிவாரணத்தை முதலமைச்சர் அறிவிக்க உள்ளதாக கூறுகிறார் லட்சுமணன்.

மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் மக்களை மீட்டு அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தருவது முதல் தேவையாக உள்ளதாக கூறும் லட்சுமணன், “பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அனைத்து இடங்களுக்கும் பேரிடர் மீட்பு படை செல்வதில் தாமதம் ஏற்படுகிறது” என்கிறார்.

மக்களிடம் எழும் அதிருப்தி குறித்துக் கேட்டபோது, “அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தருவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்” என்கிறார்.

ஆனால், அரசின் உதவிகள் எதுவும் தங்களுக்கு வந்து சேரவில்லை என்ற அதிருப்தி குரல்களையே, மாவட்டம் முழுவதும் பரவலாக கேட்க முடிந்தது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.