’15 நாள் கூட மழை பெய்திருக்கிறது; ஆனால் இப்படி நடந்ததில்லை’: திருவண்ணாமலை மண்சரிவு குறித்து மக்கள்
திருவண்ணாமலையில், மண் சரிவில் சிக்கிய 7 பேரில், ஆறு பேரின் சடலங்கள் மீட்கப்படுள்ளன.
முன்னதாக, நேற்று 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று 6வதாக மற்றொரு நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படைகளுடன் இணைந்து, மாநில காவல் கமாண்டோ படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மதியம் முதல் ஜேசிபி வாகனம் மூலம் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
மழையால் மண் சரிந்து சேறும், சகதியுமாக அந்த பகுதி இருப்பதால் மீட்புப் பணிகளுக்கு சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
மீதமுள்ள ஒருவரின் உடலை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையின் காரணமாக, வ.உ.சி நகர் பகுதியில் உள்ள அண்ணாமலையார் மலையில் ஞாயிறு அன்று (டிச. 01) மண் சரிவு மற்றும் பாறை சரிவு ஏற்பட்டது. இதில், 11வது தெருவின் குடியிருப்புப் குதியில் மலையிலிருந்து உருண்டு வந்த சுமார் 40 டன் எடை கொண்ட பாறை விழுந்ததில், இரண்டு வீடுகள் சேதமடைந்தன.
இந்நிலையில், “மண் சரிவால் மண்ணில் புதைந்துள்ள வீட்டுக்குள் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது பிள்ளைகள் 2 பேர் மற்றும் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் சிக்கியுள்ளனர்,” என அமைச்சர் எ.வ. வேலு முன்பு தெரிவித்திருந்தார்.
மண் சரிவு குறித்து உள்ளூர் மக்கள் கூறுவது என்ன?
மண் சரிவு குறித்து களத்தில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் சாரதாவிடம் அப்பகுதி மக்கள் இச்சம்பவம் குறித்துப் பேசினர்.
நீண்ட காலமாக அப்பகுதியில் வசித்து வரும் சுமார் 60 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, “50 வருடமாக இங்கு இருக்கிறேன். இம்மாதிரியான மழையைப் பார்த்ததில்லை. 4 மணியளவில் பெரும் சத்தத்துடன் மண் சரிவு ஏற்பட்டது. அனைவரும் கீழே செல்ல அழைத்தனர். நானும் சென்று விட்டேன். இப்போது மழை இல்லை. வீட்டைப் பார்க்க வந்துள்ளேன்” எனக் கூறினார்.
மண் சரிவில் தப்பிச் சென்ற சுமார் 30 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண் பிபிசி தமிழிடம் பேசுகையில், “இதற்கு முன் 15 நாட்கள் கூட மழை பெய்தது. ஆனால், இதுபோல நடந்ததில்லை. மண் சரிவு ஏற்பட்ட சத்தம் கேட்கவில்லை. ஆனால், மண் சரிவில் சிக்கிய நபர்கள் அலறி அடித்துக்கொண்டு தப்பி ஒடிய சத்தம் கேட்டு, நிலைமை என்னவென அறிந்து நாங்களும் தப்பிச் சென்றோம்” என தெரிவித்தார்.
“வீட்டின் சுவர் முழுவதும் நீரில் ஊறியுள்ளது. இங்கிருந்து வேறு இடத்திற்கு செல்ல பார்த்தால், வாடகை அதிகமாக உள்ளது. அரசாங்க அதிகாரிகள் வந்து ஆய்வு செய்துள்ளனர். ஆனால், நிவாரணம் பற்றி எந்த தகவலும் இப்போது வரை எங்களிடம் கூறவில்லை.கூலி வேலை மட்டும் செய்து வருவதால், எங்களிடம் பெரிய வசதியில்லை. இடம் கொடுத்தால் எங்களால் வீடு கட்ட முடியாது. மாற்று வீட்டை அரசு கொடுத்தால் செல்ல தயார்,” என தெரிவித்தார்.
இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிவாரணம் அரசு அறிவிக்கும் என எதிர்பார்ப்பில் உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
என்ன நடந்தது?
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் பெய்த தொடர் கனமழை காரணமாக, மாவட்டத்தில் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துகொண்டது.
ஞாயிறு பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, திருவண்ணாமலை மலையில் இருந்து ராட்சதப் பாறை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகர் மக்களின் வீடுகளின் மீது சரிந்தது.
இந்த சத்தம் கேட்டவுடன் அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஞாயிறு இரவு, சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், மண் சரிவு ஏற்பட்ட சிறுது நேரத்தில் மோப்ப நாய்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மண் சரிவில் சிக்கியவர்களில் நிலை என்ன?
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திங்கள் அன்று வந்து மீட்புப் பணியை ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய அவர், “சிக்கலான நிலப்பரப்பாக இருப்பதால், ஜேசிபி போன்ற இயந்திரங்களைப் பயன்படுத்த முடியவில்லை. பணியாளர்கள் மூலம் தான் இங்கு சரிந்துள்ள மண்ணை அகற்றுவது மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று கூறியிருந்தார்.
மண் சரிவை நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன?
ஞாயிறு அன்று மண் சரிவை நேரில் பார்த்த நபர் தனியார் தொலைக்காட்சியிடம், “எப்போதும் போல மலையிலிருந்து தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. திடீரென மண்ணும் நீரோடு சேர்த்து அடித்துக்கொண்டு வந்தது. நாய்கள் குலைத்துக்கொண்டு ஓடின, முடிந்த வரை அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு உதவிகள் செய்தோம். அப்போது மேலே உள்ள வீடுகள் மண் சரிவில் சிக்கின,” என்றார்.
“சத்தம் கேட்டு நானும் எனது குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியேறி கீழே சென்றோம். அப்போது, எனது உறவினர் ஒருவர் மண் சரிவால் வீட்டிற்குள் சிக்கினார். அவரை ஓட்டைப்பிரித்து நாங்கள் மீட்டோம்,” என மண் சரிவை நேரில் பார்த்த மற்றொரு நபர் கூறினார்.
மண் சரிவில் சிக்கியவர்களின் உறவினர்கள் ஞாயிறு அன்று (1.12.2024) தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்தனர். அதில், மண் சரிவில் சிக்கியுள்ள சிறுமியின் தந்தை மஞ்சுநாதன் பேசுகையில், “மாலை 4 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டதில், நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி, அருகில் இருக்கும் உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்தோம். அப்போது பாறை சரிந்ததில் என் மகள் மற்றும் 6 நபர்கள் வீட்டிற்குள் சிக்கினர். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை வைத்தார்.
மற்றொரு சிறுமியின் தந்தையான ஸ்ரேயஸ், “மாலை 4 மணி அளவில், பாறை சரிந்து வந்தது. அதில் உறவினர் வீட்டில் இருந்த என் மகள் உட்பட 7 நபர்கள் சிக்கியுள்ளனர். நாங்கள் அங்கு சென்று பார்த்தோம். எந்த சத்தமும் கேட்கவில்லை,” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு