சம்பல் மசூதியில் ‘சட்டவிரோத கட்டுமானம்’: நீதிமன்றத்தில் ஏஎஸ்ஐ கூறியது என்ன? – விரிவான தகவல்கள்

சம்பல் வன்முறை: உத்தர பிரதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சம்பல் மசூதியில் கணக்கெடுப்பின் போது ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
  • எழுதியவர், அன்ஷூல் சிங்
  • பதவி, பிபிசி ஹிந்தி

உத்தர பிரதேசத்தில் சம்பல் நகரில் அமைந்துள்ள ஷாஹி ஜாமா மசூதி தொடர்பாக, இந்தியத் தொல்லியல் துறை (ஏ.எஸ்.ஐ), மாவட்ட நீதிமன்றத்தில் தனது பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

இந்தியத் தொல்லியல் துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு குமார் சர்மா பிபிசியிடம் இதனை உறுதி செய்துள்ளார்.

மசூதியில் சட்டவிரோதமாக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் வழக்கமான ஆய்வுகளின்போது அங்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்தன என்றும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம், தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த பதில் பிரமாணப் பத்திரத்தைப் பற்றி தங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியாது என்றும், ஊடகங்கள் மூலமாகவே இது குறித்துத் தெரியவந்ததாகவும் மசூதி தரப்பு கூறுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“இதுகுறித்து தொல்லியல் துறை என்ன கூற வேண்டுமோ, அதை பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது” என்று ஏ.எஸ்.ஐ.யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த 1526ஆம் ஆண்டு அங்கிருந்த ஒரு கோவிலை இடித்தே இந்த மசூதி கட்டப்பட்டதாக, மஹந்த் ரிஷிராஜ் கிரி உட்பட எட்டு பேர் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். இதையடுத்தே, ஏ.எஸ்.ஐ. இந்த பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.

சம்பல் வன்முறை: உத்தர பிரதேசம்

படக்குறிப்பு, பிரதான நுழைவுவாயிலின் படிக்கட்டுகளில் உள்ள கைப்பிடிகள் பொருத்தப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்று ஏஎஸ்ஐ கூறுகிறது

“மசூதியில் பல சட்டவிரோத கட்டுமானங்கள்”

நவம்பர் 29 ஆம் தேதி, ஏ.எஸ்.ஐ சார்பாக நீதிமன்றத்தில் பதில் புகார் அளித்ததாக, ஏ.எஸ்.ஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு குமார் சர்மா கூறினார்.

“மசூதியை ஆய்வு செய்தபோது ஏ.எஸ்.ஐ எதிர்கொண்ட அனைத்து பிரச்னைகளையும் எங்களது புகாரில் குறிப்பிட்டுள்ளோம். உள்ளூர்வாசிகளும் மசூதி நிர்வாகமும் ஏ.எஸ்.ஐ ஆய்வுக்குழு, மசூதிக்குள் நுழைவதைத் தடுக்க முயற்சித்தனர். எங்களது புகாரில் மசூதியின் பழைய புகைப்படங்கள் மற்றும் புதிய புகைப்படங்களையும் ஆதாரமாக இணைத்துள்ளோம்”, என்று பிபிசியிடம் பேசிய விஷ்ணு சர்மா கூறினார்.

“ஷாஹி ஜாமா மசூதி 1920 ஆம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அங்கு பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன” என்று ஏ.எஸ்.ஐ தெரிவித்துள்ளது.

தற்போது, ஷாஹி ஜாமா மசூதி கமிட்டி மசூதியை நிர்வகித்து வருகிறது.

“ஏ.எஸ்.ஐ குறிப்பிட்டுள்ள தகவல்களில் பாதிக்கும் மேற்பட்டவை தவறானவை. இதில், ஏதேனும் உண்மை இருந்தால், அது ஏ.எஸ்.ஐ.க்கும் மசூதி நிர்வாகக் குழுவுக்கும் இடையிலான விவகாரம் ஆகும். இதுபோன்ற விவகாரங்களை இந்த விசாரணைக்குக் கொண்டு வருவது எதற்காக?”, என்று ஷாஹி ஜாமா மசூதி கமிட்டி தரப்பின் வழக்கறிஞர் காசிம் ஜமால் கூறுகிறார்.

மசூதியில் பல ‘சட்டவிரோத கட்டுமானங்கள்’ நடந்துள்ளதாகவும், இதற்கு மசூதி நிர்வாகமே பொறுப்பு என்றும் ஏ.எஸ்.ஐ தனது பிரமாணப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

மசூதியின் படிக்கட்டுகளின் இருபுறமும் இருக்கும் ஸ்டீல் கைப்பிடிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டவை என்று 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை ஒன்று பதிவு செய்யப்பட்டதாகவும் ஏ.எஸ்.ஐ குறிப்பிட்டிருக்கிறது.

இது தவிர, மேலும் சில சட்டவிரோத கட்டுமானங்கள் மசூதியில் செய்யப்பட்டிருப்பதாக ஏ.எஸ்.ஐ தெரிவித்துள்ளது-

  • மசூதியின் மையத்தில் ஒரு நீர்த்தேக்கம் இருந்தது, அதை வழிபாட்டாளர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது, கற்கள் போன்றவற்றை வைத்து அது புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • பிரதான நுழைவுவாயிலில் இருந்து மசூதிக்குச் செல்லும் வழி, செம்மண்கற்கள், பளிங்கு மற்றும் கிரானைட் ஆகியவை கொண்டு பூசப்பட்டுள்ளது, இதனால் பழைய வழி மறைக்கப்பட்டுள்ளது.
  • கட்டுமானத்திற்காக மசூதியில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது, இது மசூதியின் உண்மை தன்மையை அழித்துள்ளது.
  • மசூதியின் பின்புறம் கட்டப்பட்டுள்ள அறைகள், மசூதி நிர்வாகத்தால் கடைகளாக வாடகைக்கு விடப்பட்டு வருகின்றன.

“படிக்கட்டில் உள்ள கைப்பிடிகள், கட்டுமானங்களுடன் தொடர்புடையது அல்ல. இது பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே. ஏ.எஸ்.ஐ-க்கு ஏதேனும் சட்டவிரோத கட்டுமானம் நடப்பதாகத் தெரிந்தால், அவர்கள் புகார் அளித்திருக்க வேண்டும். அவர்கள் புகார் அளித்திருந்தால், அதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்”, என்று சட்டவிரோத கட்டுமானம் குறித்த கேள்விக்கு, காசிம் ஜமால் தெரிவித்துள்ளார்.

மசூதி கட்டமைப்பில் அதன் நிர்வாகத்தினால் அனுமதியின்றி மாற்றங்கள் செய்யப்படுவது சட்டவிரோதமானது என்றும், அதைத் தடுக்க வேண்டும் என்றும் ஏ.எஸ்.ஐ கவலை தெரிவித்ததாக விஷ்ணு சர்மா கூறினார்.

ஜாமா மசூதி

படக்குறிப்பு, கட்டுமானத்திற்காக மசூதியில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது, இது மசூதியின் உண்மை தன்மையை அழித்துள்ளது என்றும் ஏ.எஸ்.ஐ கூறியுள்ளது.

‘மசூதியில் சோதனையை நிறுத்த முயற்சி’

ஏ.எஸ்.ஐ அதிகாரிகளை “நீண்ட காலமாக” மசூதிக்குள் நுழைவதை மசூதி நிர்வாக உறுப்பினர்கள் தடுத்து வருவதால், மசூதியின் தற்போதைய நிலை குறித்து எதுவும் தெரியவில்லை என்று, ஏ.எஸ்.ஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

“ஏ.எஸ்.ஐ-க்கு இது மிகவும் கடினமான சூழ்நிலை. ஏ.எஸ்.ஐ அதிகாரிகள் கூட ஆய்வு செய்வதற்காக மசூதிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், அவ்வப்போது மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மசூதியில் ஆய்வு செய்யப்பட்டு வந்தது. ஏ.எஸ்.ஐ குழுவின் மிக சமீபத்திய ஆய்வு 2024 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி அன்று நடந்தது. அப்போதும் அந்த ஏ.எஸ்.ஐ குழு பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருந்தது”, என்று ஏ.எஸ்.ஐ தெரிவித்தது.

ஏ.எஸ்.ஐ குழு நடத்திய சமீபத்திய ஆய்வுகள் (நவம்பர் 19 மற்றும் நவம்பர் 24) மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடந்தன என்பதை தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியம். இதைத்தவிர ஏ.எஸ்.ஐ குழு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் வழக்கமான கணக்கெடுப்புகளையும் அல்லது ஆய்வுகளையும் செய்து வருகிறது.

“ஜூன் மாதத்தில் ஆய்வுக் குழு வருவதற்கு முன்பே ஏராளமான உள்ளூர்வாசிகள் மசூதியின் முன் கூடியிருந்தனர். அதில், ஷாஹி ஜாமா மசூதி கமிட்டியின் தலைவர் ஜாபர் அலி உட்பட மற்ற உறுப்பினர்களும் இருந்தனர். இந்த குழுவினர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட போது, மசூதி நிர்வாக உறுப்பினர்கள் தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வந்தனர்”, என்றும் ஏ.எஸ்.ஐ குறிப்பிட்டது.

இருப்பினும், ஏ.எஸ்.ஐ.யின் இந்த குற்றச்சாட்டுகளை மசூதி நிர்வாகக் குழுவின் வழக்கறிஞர் மறுத்துள்ளார்.

“இது குறித்து மசூதி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘அப்படி எதுவும் இல்லை’ என்றே அவர்கள் தெரிவித்தனர். ஏ.எஸ்.ஐ ஆய்வுக்குழு அடிக்கடி இங்கு வந்து ஆய்வு செய்து செல்கின்றனர். ஆனால், இப்போது இவர்கள் எந்த அடிப்படையில் இதைச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை”, என்று காசிம் ஜமால் கூறுகிறார்.

மசூதி வளாகத்தில் தொல்பொருள் எச்சங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் (1958) விதிகள் தொடர்ந்து மீறப்படுவதாக ஏ.எஸ்.ஐ தெரிவித்துள்ளது.

மசூதி தரப்பு வழக்கறிஞர் காசிம் ஜமால்

படக்குறிப்பு, மசூதி தரப்பு வழக்கறிஞர் காசிம் ஜமால்

சம்பல் வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

ஷாஹி ஜாமா மசூதியில் ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக நடந்த வன்முறை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழு ஞாயிற்றுக்கிழமை சம்பல் நகரை அடைந்தது.

மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு மசூதி மற்றும் வன்முறை நடந்த இடங்களை பார்வையிட்டது, இந்த நேரத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த குழுவில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமார் அரோரா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அமித் மோகன் பிரசாத் மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அரவிந்த் குமார் ஜெயின் ஆகியோர் இடம்பெற்றனர்.

விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு 2 மாத கால அவகாசம் அளித்திருந்தது.

தற்போது, டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை, வெளி நபர்கள் அந்த மாவட்டத்திற்குள் நுழைய, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

முன்னதாக சனிக்கிழமையன்று, 15 பேர் கொண்ட சமாஜ்வாதி கட்சி குழு ஒன்றை அம்மாவட்ட நிர்வாகம் சம்பலுக்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்தியது.

கடந்த நவம்பர் 19 ஆம் தேதி அன்று, சம்பலில் உள்ள கைலா தேவி கோவிலின் தலைமை அர்ச்சகர் மஹந்த் ரிஷிராஜ் மகராஜ் மற்றும் மற்றும் அவருடன் சிலர் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

கடந்த 19ஆம் தேதி மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது, நீதிமன்ற உத்தரவின் பேரில் அன்றைய தினம் மசூதி வளாகத்தின் முதல் ஆய்வும் நடத்தப்பட்டது.

இருப்பினும், அப்போது எந்த ஒரு வன்முறையும் நடைபெறவில்லை.

நவம்பர் 24 அன்று நடந்த இரண்டாம் கட்ட ஆய்வின் போது, அங்கிருந்த கும்பலுக்கும் காவல்துறைக்கும் கைகலப்பு ஏற்பட்டு, அது பல மணிநேரம் நீடித்தது.

இந்த வன்முறையில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். ஆனால், நான்கு பேர் மட்டுமே இறந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, நவம்பர் 29 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து, மசூதி குழுவின் மனு (மனு தாக்கல் செய்தால்) உயர்நீதிமன்றத்தில் பட்டியலிடப்படும் வரை கீழமை நீதிமன்றம் வழக்கை விசாரிக்காது என்று கூறியது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.