விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு – என்ன நடந்தது?

இருவேல்பட்டில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு

படக்குறிப்பு, இருவேல்பட்டியில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு

ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் இருவேல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கவில்லை எனக் கூறி, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று (டிச. 03) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்.பியுமான கவுதம சிகாமணி ஆகியோர் மீது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சேற்றை வாரி வீசினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சர் பொன்முடி, அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், குறிப்பிட்ட கட்சியினர் உள்நோக்கத்துடன் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வெள்ளம் குறித்து கேட்டறிந்த பிரதமர்

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்துள்ளார்.

இதுதொடர்பாக, ஸ்டாலின் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில்,

“தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி, புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் பிரதமரிடம் வலியுறுத்தினேன்” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை பிரதமர் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என தான் உறுதியாக நம்புவதாக ஸ்டாலின் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தின் பாதிப்பு நிலவரம் என்ன?

ஃபெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் குடியிருப்பு பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை வெள்ளம் வடியாத நிலை காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

88 நிவாரண மையங்களில் 5,694 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தரைப்பாலங்களில் மூழ்கியதால் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது, விக்கிரவாண்டி, திண்டிவனம், மரக்காணம், திருக்கோவிலூர் உட்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துக் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது.

பல குடியிருப்புகளைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டதால் அங்குள்ள மக்களைப் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர். மாவட்டத்தில் 88 மையங்களில் 5,684 பேர் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.

வெள்ளநீர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்துச் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், 150 கிரமத்திற்குச் செல்லும் பல சாலைகளிலும் நீர் சூழ்ந்ததால், மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானர்.

புயல் பாதிப்பால் விழுப்புரம் மாவட்டத்தில் பலர் வெள்ள நீரில் மூழ்கியது, வெள்ள நீரால் அடித்துச் செல்லப் பட்டது போன்ற பல்வேறு காரணங்களால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கிருஷ்ணகிரியில் என்ன நிலை?

புயல் கரையை கடக்கும் முன்பு சென்னையில் ஆர்ப்பரிக்கும் கடல் அலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புயல் கரையை கடக்கும் முன்பு சென்னையில் ஆர்ப்பரிக்கும் கடல் அலை

ஃபெஞ்சல் புயல் தாக்கத்தின் காரணமாக ஞாயிறு அன்அன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த 24 மணிநேரத்தில் 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கிருஷ்ணகிரி நகரை பொறுத்தவரையில் சுங்கச்சாவடி, சேலம் மேம்பாலம், திருவண்ணாமலை மேம்பாலம், பழைய பேருந்து நிலையம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, கணபதிநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் முழுவதும் மழை நீர் தேங்கி கடல் போல் காட்சி அளித்தது.

கிருஷ்ணகிரி பழையபேட்டை, நேதாஜி சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் தாசில்தார் தலைமையில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், ஊத்தங்கரை, பாம்பாறு அணை நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் மொத்த நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பாம்பாறு அணை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் நான்கு வீடுகள் மழை வெள்ளத்தில் சிக்கி சேதம் அடைந்திருந்தது.

ஊத்தங்கரை பகுதியில் 24 மணிநேரமாக 50.3 சென்டிமீட்டர் கொட்டி தீர்த்த கனமழையால் காமராஜ் நகர், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்களை தீயணைப்பு துறையினர் மீட்டு, மீட்பு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

போச்சம்பள்ளி பகுதியில் கோனானூர் ஏரி நிரம்பி அதிகளவில் தண்ணீர் வெளியேறியதால், போச்சம்பள்ளி நான்கு ரோடு சந்திப்பு, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

சமத்துவபுரத்தில் வசிக்கக்கூடிய மக்கள் அனைவரும் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டு, மீட்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஊத்தங்கரை சுற்றுப்பகுதிகளில் மழை சூழ்ந்த இடங்களில் மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு நேரில் சென்று மீட்புப்பணியை துரிதப்படுத்தி வருகிறார்.

எங்கு அதிக மழை?

சனிக்கிழமை (டிச. 01) காலை 7 மணி நிலவரப்படி, ”கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 6 இடங்களில் மிககனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளன” என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ மழையும் புதுச்சேரியில் 46 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என அவர் கூறியிருந்தார்.

”புதுச்சேரியில் இதுவரை பதிவான மழை அளவு தரவுகளை வைத்து பார்க்கும் போது இதுவே அதிகபட்ச மழையாகும். இதற்கு முன்னர் 2004-ஆம் ஆண்டு புதுச்சேரியில் 21 செ.மீ மழை பதிவாகியிருந்தது. தற்போது 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என பாலச்சந்திரன் கூறினார்.

புதுச்சேரி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, புதுச்சேரியிலுள்ள ரெயின்போ நகர் பகுதியை சூழ்ந்துள்ள வெள்ளம்

புதுவையில் கடும் பாதிப்பு

புதுவையில் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் போன்ற பகுதியில் உள்ள தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக புதுச்சேரியில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் விஜயானந்த் கூறுகிறார்.

” மழையின் தாக்கத்தை நம்மால் பார்க்க முடிகிறது. பல இடங்களில் மரங்கள் விழுந்து கிடந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. உள்வட்ட சாலைகளில் முழுங்கால் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை தொடரும் என்பதால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கடைகளில் வாங்கி வருகின்றனர்” என்றார் பிபிசி தமிழ் செய்தியாளர் விஜயானந்த்.

புதுச்சேரி

படக்குறிப்பு, புதுச்சேரியில் மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீ ர்கள்

”இந்த நகர் உருவாகி 40 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இதுதான் வரலாறு காணாத மழை.இந்த அளவுக்கு மழையை நான் பார்த்ததில்லை. வீடுகளில் தரைத்தளம் மூழ்கியுள்ளது” என்கிறார் ரெயின்போ நகர் பகுதியில் வசிக்கும் நாராயணசாமி.

”வீடு முழுக்க தண்ணீர் சூழ்ந்துள்ளது. பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. வீட்டில் இருந்து தண்ணீர் வெளியேறவில்லை” என்றார்.

மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் ரமேஷ் குமார்,” நாங்கள் படகுகளை கொண்டு வந்துள்ளோம். 20-30 பேரை மீட்டுள்ளோம். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதே எங்களது முதன்மை பணி” என கூறுகிறார்.

புதுச்சேரி

படக்குறிப்பு, புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் இருந்து வெளியேறிறிய மக்கள்

புதுச்சேரியில் 4 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் மழை வெள்ளத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர்.

புதுச்சேரியில் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் ஞாயிறு காலை 8.30 மணி வரை 48.45 செ.மீ மழை பெய்துள்ளது.

ரெய்ன்போ நகர், கிருஷ்ணா நகர், வெங்கடா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 551 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை நான்கு பேர் (கோவிந்த சாலை, லாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள்) உயிரிழந்துள்ளனர், அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

பாகூர் பகுதியில் 15 குடிசை வீடுகளும், வில்லியனூர் மற்றும் பாகூர் தொகுதிகளில் தலா ஒரு கல் வீடு சேதமடைந்துள்ளதாக, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தகவல் தெரிவித்திருந்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.