மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில், இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார்.
ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க போவதாகப் பத்திரிகைகளுக்கு குறிப்பிட்டிருந்த விடயத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருத வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னநாயக்க,
இராசமாணிக்கம் சாணக்கியன் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பதாகவும் ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை எழுப்ப வேண்டாம் எனவும் கோரினார்.
அதேநேரம் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரிவித்த பிமல் ரத்னாயக்க,
ஜே.வியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா அன்றி ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு ஒழுங்குபடுத்துவதாகவும் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் குறிப்பிட்டார்