‘கார்’ ஓட்டக் கற்றுக்கொண்ட எலிகள்; இந்த ஆய்வு முடிவுகள் தரும் மகிழ்ச்சிக்கான ரகசியம் என்ன?
- எழுதியவர், கெல்லி லாம்பெர்ட்
- பதவி, பிபிசி
ஒரு ஆய்வில், எலிகளுக்கு சிறிய கார் போன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தை ஓட்டுவதற்கு விஞ்ஞானிகள் சொல்லிக்கொடுத்தனர், அந்த ஆய்வின் முடிவு அவர்களுக்கு மிகவும் எதிர்பாராததாக இருந்தது. நாம் விரும்பி ஒரு வேலையை செய்யும்போது அதிலுருந்து நமக்கு அதிக மகிழ்ச்சி கிடைப்பதாக, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
எலிகளுக்கான அந்த முதல் வாகனத்தை நாங்கள், தானியங்களை சேமித்துவைக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கண்டெயினர்களில் இருந்து வடிவமைத்தோம்.
பல்வேறு பரிச்சார்த்த முயற்சிகளுக்குப் பிறகு, ஆக்ஸிலரேட்டர் போல இருக்கும் சிறிய கம்பியை பிடித்துக்கொண்டு எலிகள் காரை முன்னோக்கி ஓட்ட முடியும் என்பதை நானும் எனது சக விஞ்ஞானிகளும் கண்டறிந்தோம். சிறிது நேரத்திலேயே அந்த எலிகள், முன்னே வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருளை நோக்கி, காரை துல்லியமாக ஓட்டின.
கூண்டுக்குள் இருந்த எலிகளைவிட பொம்மைகள், சக எலிகளுடன் ஒரு சிறந்த சூழலில் இருந்த எலிகள், வேகமாக காரை ஓட்டக் கற்றுக்கொண்டன. இந்த கண்டுபிடிப்புகள், நியூரோபிளாஸ்டிசிட்டி எனப்படும் சவாலான சூழ்நிலைகள், மூளை வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கு உதவுகிறது எனும் யோசனையை ஆதரிப்பதாக உள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்ட பிறகு, எலிகள் வாகனம் ஓட்டுவது குறித்த செய்திகள் ஊடகங்களில் வேகமாக பரவின. ரோபாட்டிக்ஸ் பேராசிரியர் ஜான் மெக்மனுஸ் மற்றும் அவரது மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட, எலியால் இயக்கப்படும் புதிய, மேம்படுத்தப்பட்ட வாகனங்கள் அல்லது ROVகளுடன் எனது ஆய்வகத்தில் இந்தத் திட்டம் தொடர்கிறது.
டெஸ்லாவின் சைபர்ட்ரக் காரைப் போலவே, இந்த ROV வாகனங்களில் எலிகளால் சேதமடையாமல் பாதுகாப்பாக இருக்கும் வயர்களும், சக்கரங்களும், லீவர்களும் இருக்கின்றன.
ஒரு நரம்பியல் ஆய்வாளராக, ஆய்வுக்கான விலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களிலேயே வைத்து சோதனை நடத்த வேண்டும் என்பதையே நான் எப்போதும் ஆதரித்து வருகிறேன். ஆனால் இப்போது அழுக்கு, பாறைகள் என சுற்றித் திரிந்த எலிகளை கார் ஓட்ட வைத்தது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.
சொல்லப்போனால், நமது முன்னோர்களுக்கும் கார் ஓட்ட தெரியாது. ஆனாலும் அவர்களிடம் புதிய திறன்களை கற்றுக்கொள்ளும் அளவிற்கு மூளை இருந்தது. அவர்கள் அதைவைத்து நெருப்பு, மொழி, ஆயுதங்கள், விவசாயம், சக்கரம் போன்றவற்றை கண்டுபிடித்தனர். காலப்போக்கில் அவர்கள் கார்களையும் உருவாக்கினர்.
எலிகளுக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுப்பதனால் அதற்கு எந்த பயனும் இல்லை என்றாலும், அவை எவ்வாறு புதிய திறன்களைப் பெறுகின்றன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள இது ஒரு சுவாரஸ்யமான வழியாக இருக்கும் என்று நாங்கள் நம்பினோம்.
எதிர்பாராதவிதமாக, கார் ஓட்ட கற்றுக்கொள்ள எலிகள், தீவிர ஆர்வம் காட்டியதை நாங்கள் கண்டறிந்தோம். அவை அடிக்கடி காரில் ஏறி, அந்த கார் பாதையில் செல்வதற்கு முன்பே லீவரை அழுத்தின, அது ஏன்?
அறிமுக உளவியல் பாடப்புத்தகங்களில் இருந்த கருத்துகள் எங்கள் ஆராய்ச்சி குழுவிற்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கியது. நாங்கள் எலிகளுக்கு படிப்படியாக கார் ஓட்ட கற்றுக்கொடுத்தோம், அதற்கு வெகுமதியாக, ஃப்ரூட் லூப்ஸ் என்னும் உணவுப்பொருளை வழங்கினோம். இது, விலங்குகளின் நல்ல நடத்தைக்காக வெகுமதி அளித்து கற்பிக்கும் ஒரு வழிமுறையில் அடங்கும்.
ஆரம்பத்தில் அந்த எலிகள் காரில் ஏறுவது, லீவரை அழுத்துவது போன்ற அடிப்படை செயல்பாடுகளை கற்றுக்கொண்டன. தொடர்ந்து பயிற்சி அளித்ததன் மூலம் இந்த எலிகள் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு காரை ஓட்டிச் செல்வது போன்ற கடினமான செயல்களையும் செய்யத்தொடங்கின.
கடந்த 2020 ஆம் ஆண்டு கோவிட்-19 தொற்றுநோய் காலத்தின்போது, ஒரு நாள் நான் ஆய்வகத்திற்குள் நுழைந்தபோது, வித்தியாசமான ஒன்றை கவனித்தேன். கார் ஓட்ட பயிற்சி பெற்ற மூன்று எலிகள் என்னைப் பார்த்தவுடன் கூண்டுக்குள்ளே துள்ளி குதிக்கத்தொடங்கின. என்னுடைய வளர்ப்பு நாய்களிடம் ‘வாக்கிங் செல்லலாமா?’ என கேட்கும்போது எப்படி அவை மகிழ்ச்சியில் துள்ளி குதிக்குமோ அப்படி இருந்தது அந்த காட்சி.
“எப்போதுமே எலிகள் இதுபோல செய்யுமா அல்லது இப்போதுதான் நான் இதை கவனிக்கிறேனா? அதற்கு பிடித்த உணவுக்காக ஆசைப்பட்டு இவ்வாறு செய்கிறதா அல்லது உண்மையில் கார் ஓட்ட அவை ஆசைப்படுகிறதா?”, என்ற கேள்விகள் எழுந்தன. எது எப்படியிருந்தாலும், அவை உற்சாகமாக, எதையோ எதிர்பார்த்து இருப்பதாகத் தோன்றியது.
நேர்மறையான அனுபவங்கள் மனிதர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன. ஆனால், எலிகளுக்கும் இதுபோல நடக்குமா? மகிழ்ச்சி மற்றும் நேர்மறையான உணர்ச்சிகள் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று நரம்பியல் ஆய்வுகள் அதிகளவில் பரிந்துரைக்கின்றன.
இதனை கருத்தில் கொண்டு நானும், எனது ஆராய்ச்சிக் குழுவும், பல நாட்களாக மன அழுத்தம் எவ்வாறு மூளையை பாதிக்கிறது மற்றும் மகிழ்ச்சியான நிகழ்வுகளும், அதற்கான எதிர்பார்ப்புகளும் நமது நரம்பியல் செயல்பாடுகளில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் கவனம் செலுத்திவந்தோம்.
எனது சக ஆராய்ச்சியாளரான கிட்டி ஹார்ட்விக்சனுடன் இணைந்து, நான் ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பாக, அதற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க ஒரு புதிய நெறிமுறையை வடிவமைத்தேன்.
அதன்படி எலிகள், தனக்கு வெகுமதியாக வழங்கப்படும் பிடித்தமான உணவை உண்ண 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. மேலும், அவர்கள் விளையாடும் பகுதிக்கு நுழைவதற்கு முன்பு அவை சில நிமிடங்கள் கூண்டிலும் காத்திருக்க வேண்டியிருந்தது. எலிகள் சூரியகாந்தி விதைகளை சாப்பிடுவதற்கு முன் அதன் தோலை எலிகளே உரிப்பது போன்ற சவால்களையும் நாங்கள் சேர்த்தோம்.
சுமார் ஒரு மாத காலத்திற்கு பயிற்சி அளித்த பின்னர், மகிழ்ச்சிகரமான அனுபவங்களுக்காகக் காத்திருப்பது அந்த எலிகளின் செயல்பாடுகளை எவ்வாறு பாதித்தது என்பதை தெரிந்துகொள்ள, எலிகள் வெவ்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.
ஆரம்பத்தில் தங்களுக்கு பிடித்த உணவுகளை வெகுமதியாக பெற காத்திருந்த எலிகள் அதிக நம்பிக்கையுடன் இருந்ததாக முடிவுகள் காட்டுகின்றன. இந்த எலிகள் அறிவாற்றல் சார்ந்த பணிகளில் சிறப்பாக செயல்பட்டன. மேலும், பிரச்னையை தீர்க்கும் உத்திகளை துணிச்சலாக கையாண்டன. எதிர்பார்ப்புகள் எவ்வாறு நடத்தைகளில் தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதை இது மேலும் நிரூபிக்கிறது.
இதைத்தவிர, மாணவர் ஒருவர் எலிகளுள் விசித்திரமான ஒன்றை கவனித்தார். இந்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளில் ஒன்று, குடையின் கைப்பிடியைப் போல அதன் வாலை நேராகவும், முனையில் மட்டும் ஒரு வளைவுடனும் வைத்திருந்தது. பல ஆண்டுகளாக எலிகளுடன் பணிபுரிந்து வந்ததில் நான் இதுபோல பார்த்ததே இல்லை.
மகிழ்ச்சியான அனுபவங்களை எதிர்பார்க்க பயிற்சியளிக்கப்பட்ட எலிகள், பயிற்சி பெறாத எலிகளை விட தங்கள் வால்களை உயர்த்தி வைத்திருப்பதைக் கண்டறிந்தோம். ஆனால், இதன் அர்த்தம் என்ன?
இதுகுறித்து, நான் சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டேன். சக நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் இது ஒரு மென்மையான வடிவிலான ஸ்ட்ராப் டெயில் என்று அடையாளம் கண்டனர், இது பொதுவாக ஓபியாய்டு மார்பின் கொடுக்கப்பட்ட எலிகளில் காணப்படுகிறது. இந்த S-வடிவ வளைவு டோபமைனுடன் தொடர்புடையது. டோபமைன் குறையும்போது, வால் உயரத்தின் அளவு குறைந்துவிடுகிறது.
எலிகளின் வால் எவ்வாறு இருக்கிறது என்பதை கவனிப்பது எலிகளின் உணர்ச்சி வெளிப்பாட்டைப் பற்றிய ஒரு புதிய புரிதலை கொடுக்கிறது. மேலும், உணர்ச்சிகள் உடல் முழுவதும் வெளிப்படுத்தப்படுகின்றன என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
எலிகள் கார் ஒட்ட விரும்புகிறதா என்று எங்களால் நேரடியாக அவற்றிடம் கேட்க முடியாது என்றாலும், வாகனம் ஓட்டுவதற்கு அவற்றின் உந்துதலை மதிப்பிட சோதனையை நாங்கள் வகுத்துள்ளோம்.
இந்த முறையில், எலிகளுக்கு தங்களது வெகுமதியான ஃப்ரூட் லூப் வரை காரை மட்டுமே ஓட்டுவதற்கான விருப்பத்தைக் கொடுக்காமல், அவை நடந்து செல்லலாம் என்ற மற்றொரு தேர்வும் வழங்கப்பட்டது.
ஆச்சர்யம் என்னவென்றால், மூன்று எலிகளில் இரண்டு, நடந்து செல்வது வேகமாக இருந்தாலும், வெகுமதியான ஃப்ரூட் லூப் வரை காரை ஓட்டத் தேர்ந்தெடுத்தன. இதன் மூலம் எலிகள் பயணம் மற்றும் இலக்கு என இரண்டையும் அனுபவிக்க நினைக்கின்றன என்று தெரியவந்தது.
நரம்பியல் ஆய்வாளர் ஜாக் பாங்க்செப், எலிகளை கூசுவதன் மூலம், அவை மகிழ்ச்சியை உணர முடியும் என்பதை நிரூபித்தார்.
மேலும் ஆராய்ச்சியில், விலங்குகள் தங்களுக்கு விருப்பமான சூழலில் இருக்கும்போது, அவற்றின் நியூக்ளியஸ் அக்கம்பென்ஸில் (இன்பம், மகிழ்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மூளையின் ஒருபகுதி) உள்ள இன்பத்தை உணரும் பகுதி பெரிதாகிறது. இதுவே, எலிகள் மிகவும் அழுத்தமான சூழ்நிலைகளில் வாழும்போது, அவற்றின் நியூக்ளியஸ் அக்கம்பென்ஸில் உள்ள அச்சத்தை உருவாக்கும் பகுதி விரிவடைகின்றன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நரம்பியல் ஆய்வாளர் கர்ட் ரிச்சர்ட் எலிகளுக்கு நம்பிக்கை இருப்பதாகவும் வாதிட்டார். இன்று அனுமதிக்கப்படாத ஒரு ஆய்வில், எலிகள் நீரால் நிரப்பப்பட்ட கண்ணாடி சிலிண்டர்களில் நீந்தின, இறுதியில் காப்பாற்றப்படாவிட்டால் அவை மூழ்கின.
ஆனால், ஆய்வகத்தில் மனிதர்களால் அடிக்கடி கையாளப்படும் எலிகள் மணிக்கணக்கில் பல நாட்கள் வரை நீந்தின. இதுவே மற்ற எலிகள் சில நிமிடங்களுக்குப் பிறகு கைவிட்டன. இருப்பினும், இந்த எலிகள் குறிப்பிட்ட சமயத்திற்குள் காப்பாற்றப்பட்டால், அவை உயிர்வாழும் காலம் கணிசமாக நீடித்தது. அப்படி காப்பாற்றப்பட்டது எலிகளுக்கு நம்பிக்கையைத் தந்தது மற்றும் அவற்றை நீரில் போராட தூண்டியது என்று தோன்றியது.
எலிகள் கார் ஓட்டும் இந்த சோதனை, நரம்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் புதிய மற்றும் எதிர்பாராத வழிகளை வகுத்தது. பயம் மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தபோதிலும், நேர்மறையான அனுபவங்களும் மூளையை குறிப்பிடத்தக்க வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது தெரியவந்துள்ளது.
நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொள்வது, மகிழ்ச்சியான அனுபவங்களை எதிர்பார்ப்பது, வாழ்க்கையின் வெகுமதிகளைத் தொடர்ந்து தேடுவது போன்றவற்றை மனிதர்கள் உட்பட விலங்குகளும் அனுபவிக்கின்றன. எல்லாமே உடனடியாக நடக்க வேண்டும் என்று விரும்பும் தற்போதைய உலகில், இந்த எலிகள் திட்டமிடுவதும் விஷயங்களை எதிர்நோக்குவதும் நம் மூளைக்கு சிறந்ததாக இருக்கும் என்பதை நமக்குக் காட்டுகின்றன. எனது ஆய்வகத்தில் உள்ள எலிகள் எனக்கு ஒரு மதிப்புமிக்க பாடத்தைக் கற்பித்துள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.