அதிக குழந்தைகள் பெறுவது பற்றி பேசிய மோகன் பகவத்: மக்கள்தொகை அதிகரித்தால் ஏற்படும் 10 சவால்கள்

இந்திய மக்கள் தொகை

பட மூலாதாரம், ANI

  • எழுதியவர், ராகவேந்திர ராவ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

“கருவுறுதல் விகிதம் குறைவாக உள்ள சமூகம், பூமியிலிருந்து அழிக்கப்படும்,” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார். இந்தியாவில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்த மோகன் பகவத் இவ்வாறு பேசினார்.

நாக்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், “மக்கள்தொகை குறைந்து வருவது கவலைக்குரியது. ஒரு சமூகத்தின் கருவுறுதல் விகதம் 2.1% குறையும்போது, அந்த சமூகம் பூமியிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்படுகிறது என்று நவீன மக்கள்தொகை அறிவியல் கூறுகிறது” என அவர் தெரிவித்திருந்தார்.

மோகன் பகவத் மேலும் கூறுகையில், “எந்தவொரு பாதகமான சூழ்நிலை இல்லாதபோதும் அந்த சமூகம் அழிக்கப்படுகிறது. அதேசமயம், பல மொழிகளும், சமூகங்களும் அழிக்கப்படுகின்றன. அதனால், கருவுறுதல் விகிதம் 2.1% கீழ் குறையக் கூடாது” என்றார்.

மோகன் பகவத் கூறுகையில், “சமூகத்தில் கருவுறுதல் விகிதம் 2.1 சதவிகிதத்திற்கு கீழ் குறையக் கூடாது என இந்தியாவின் மக்கள்தொகை கொள்கை கூறுகிறது. இந்தியாவின் கருவுறுதல் விகிதம் 2 அல்லது 3 என்ற சதவிகிதத்தில் இருக்க வேண்டும். சமூகம் தப்பிப் பிழைக்க இது முக்கியம்.” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

முன்னதாக, இந்தியாவில் மக்கள்தொகை தொடர்பான பிரச்னைகள் பற்றி பிபிசி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விரிவான கட்டுரையை வெளியிட்டது.

அதன்படி, மக்கள்தொகை அதிகரித்து வருவதால் இந்தியா சந்தித்து வரும் 10 முக்கிய சோதனைகள்:

இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளி மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

2023ஆம் ஆண்டு மத்தியில், இந்தியாவின் மக்கள்தொகை 142.86 கோடியை எட்டும். அதேசமயம், சீனாவின் மக்கள்தொகை 142.57 கோடியாக இருக்கும்.

2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. அதனால், இந்தியாவின் மக்கள்தொகை பற்றிய வலுவான தகவல்கள் இல்லை.

ஆனால் 2020-இல், மக்கள்தொகை கணிப்புகள் பற்றிய அறிக்கையைத் தேசிய மக்கள்தொகை ஆணையம் வெளியிட்டது. அந்த அறிக்கையின் படி, இந்தியாவின் மக்கள்தொகை 25 ஆண்டுகளில், அதாவது 2011 மற்றும் 2036 ஆண்டுகளுக்கு இடையில் 152.20 கோடி மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் தொகை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் குறைந்து வரும் பிறப்பு விகதம்

இதனால், இந்தியாவின் மக்கள்தொகை அடர்த்தி, சதுர கி.மீட்டருக்கு 368 -லிருந்து 463-ஆக அதிகரிக்கும்.

ஆனால் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்தியர்களின் ஆயுட்காலம் முன் எப்போதும் விட அதிகரித்துள்ளது. அதேபோல, பிறப்பு விகதமும் குறைந்துள்ளது. இதனால், மக்கள்தொகை அதிகரிப்பு விகதம் குறைந்துள்ளது.

மக்கள்தொகை அதிகரிக்கும் விகிதம் குறைந்த போதிலும், இந்தியாவின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மேலும் சில ஆண்டுகளுக்குத் தொடரும்.

அந்த சமயத்தில் இந்தியா பல சவால்களைச் சந்திக்கும். அந்த சவால்கள் என்னவாக இருக்கும் என்பதற்கான விமர்சனம் இது.

1. இயற்கை வளங்களின் தேவை அதிகரிப்பு

மக்கள்தொகை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்து வருவதால், இயற்கை வளங்கள் மீது மிகப்பெரிய அழுத்தம் உண்டாகும்.

நிலம், தண்ணீர், காடு மற்றும் தாது பொருட்கள் ஆகியவை இந்த இயற்கை வளங்களில் அடங்கும்.

மக்கள்தொகை அதிகரிப்பது இந்த வளங்களை அதிகளவில் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும்.

இதன் விளைவாக, சுற்றுச்சூழல் நிலைமை, விவசாய உற்பத்தி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஆகிய பிரச்னைகள் மோசமாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

2. உள்கட்டமைப்பு வசதிகள்

இந்திய மக்கள் தொகை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது பெண்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும்,” என்கிறார் சங்கமித்ரா.

மக்கள்தொகை அதிகரித்து வருவதால், வீடுகள், போக்குவரத்து, மருத்துவம் மற்றும் கல்வி நிறுவனங்களை அதிகரிக்க வேண்டிய தேவையும் ஏற்படும்.

அதிகரிக்கும் மக்கள்தொகையின் தேவையைப் பூர்த்தி செய்வது கடினமாகும். கடினமான நிலைமைகளில் பெரும்பாலான மக்கள் மோசமான நிலைமைகளில் வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர்.

3. வேலையின்மை

அதிக மக்கள்தொகைக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதும் சவாலாக இருக்கும்.

இன்றும், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை முக்கிய பிரச்னைகளுள் ஒன்றாக உள்ளது. இது, தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள்தொகையால் மேலும் மோசமாகக் கூடும்.

வேலையின்மை அதிகரிப்பது சமத்துவமின்மை மற்றும் வறுமையை அதிகரிக்கும். இது சமூக அமைதியைக் குலைக்கும்.

4. கல்வி மற்றும் திறன் மேம்பாடு

இந்திய மக்கள்தொகை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிகரிக்கும் மக்கள் தொகையால் வேலையின்மையை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் கல்வி மற்றும் திறன் மேம்பாடு சவாலானதாக இருக்கும்.

ஏனென்றால், மக்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கும் திறன் மேம்பாடு செய்யவும், தேவையான கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை, அதிகரித்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.

இதன் நேரடி விளைவாகப் பல நபர்கள் சிறந்த கல்வியை பெற முடியாமல் போகலாம்.

அதேபோல, அவர்களின் திறனுக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் போகலாம்.

5. வறுமை மற்றும் சமத்துவமின்மை

மக்கள்தொகை அதிகரிப்பு வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மக்கள் வருமானத்திலும் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.

ஒட்டுமொத்தமாக, மக்களின் வாழ்க்கைத் தரம், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம்.

6. சுற்றுச்சூழல் சவால்கள்

அதிகரித்து வரும் மக்கள்தொகை சுற்றுச்சூழலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

காடுகளை அழிப்பது, காற்று மாசுபாடு மற்றும் தண்ணீர் மாசுபாடு போன்ற காரணங்களால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மிகவும் சவாலான பிரச்னையாக உள்ளது.

மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும் போதிலும், இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த சூழ்நிலையில், அரசு அதை எதிர்கொள்வதற்கு ஏற்ற திட்டத்தைக் கொண்டு வர வேண்டியுள்ளது.

7. சமூக பிரச்னைகள்

இந்திய மக்கள் தொகை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மக்கள்தொகை அதிகரித்தால் குற்ற செயல்களை கட்டுப்படுத்துவது கடினமாகும்

மக்கள்தொகை அதிகரிப்பதால் ஏற்படும் மற்றொரு பிரச்னை சமூக ரீதியான சவால்கள்.

மக்கள்தொகை அதிகரிப்பது திட்டமிடப்படாத நகரமயமாதல் மற்றும் சமத்துவமின்மையை ஏற்படுத்தும். அந்த சூழ்நிலையில் குற்றச் சம்பவங்களும் அதிகரிக்கும்.

சட்ட ஒழுங்கை நிலை நிறுத்துவது சவாலானது.

8. அதிகரிக்கும் மக்கள்தொகை, அதிகரிக்கும் பிரச்னைகள்

இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் தலைவர் சங்க மித்ரா கூறுகையில், “இந்தியாவில் மக்கள்தொகை அதிகரிப்பது நிச்சயமாக சுற்றுச்சூழல் மற்றும் வளங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால் இது ஒரு பிரச்னையாக இருக்கும்,” என தெரிவித்தார்.

இந்தியாவில், மக்கள்தொகை அதிகரித்து வருவது, பல்வேறு கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. எனவே, ஒரு நாட்டிற்கு எது சிறந்த மக்கள்தொகை என சொல்ல முடியுமா?

“ஒரு நாட்டிற்கென்று சிறந்த மக்கள்தொகை என்று எதுவும் இல்லை. மக்கள்தொகை பற்றி பேசும் போது, நீங்கள் மக்களைப் பற்றி பேசுகிறீர்கள். ஆனால், மக்கள் கணக்கிற்கு எல்லம் அப்பாற்பட்டவர்கள். அதனால் நாம் முதலில் மக்களை மதிக்க வேண்டும், அது மனித உரிமை மீதான அணுகுமுறை” என சங்க மித்ரா கூறினார்.

“மக்கள் என்ன செய்கிறார்கள் என்பது தான் கேள்வியாக இருக்கும், அவர்களுக்கு சமமான வாய்ப்பு இருக்குமா, அவர்களுக்கு கல்வி வாய்ப்பு கிடைக்குமா,” என தெரிவித்தார்.

9. குறைந்து வரும் கருவுறுதல் விகிதம்

இந்திய மக்கள் தொகை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் வயதானவர்கள் விகிதம் இன்னும் சில ஆண்டுகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளது

சங்க மித்ராவை பொருத்தவரை, “கருவுறுதல் விகிதத்தை இந்தியாவின் மக்கள்தொகையோடு இணைத்துப் பேசுவது பெண்கள் மீதான சுமையை அதிகரிக்கும்.”

“மக்கள்தொகை குறைந்து வருவதால், பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். அதுவே, மக்கள் தொகை அதிகரித்தால், குறைவான குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறுவார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில், பெண்களின் தேவை மற்றும் முன்னுரிமை மதிக்கப்படுகிறதா?” என அவர் கேள்வி எழுப்புகிறார்.

“பாலின சமத்துவமின்மை காணப்படும் இந்தியா போன்ற நாட்டில், ஆணாதிக்கம் ஒரு பெரிய பிரச்னையாகும். எத்தனை குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை, பெண்களுக்கு எப்போதாவது வழங்கப்படுகிறதா, கருத்தடை கருவிகள் அவர்களைச் சென்றடைந்துள்ளதா, கிராமப்புற இந்தியாவில் உள்ள பெண்கள் தங்கள் கருவுறுதல் தொடர்பான முடிவுகளை சொந்தமாக எடுக்க முடிகிறதா என்பது குறித்து கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.” என்றார்.

10. வயதான மக்கள் குறித்து எழும் கவலைகள்

இந்தியாவில், சுமார் 40 சதவிகிதம் பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். நாட்டின் மக்கள்தொகையில் பாதி பேர் 25 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள். இந்தியாவில், முதியோர் (65 வயதுக்கு மேற்பட்டவர்கள்) எண்ணிக்கை 7 சதவிகிதம் மட்டுமே.

இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவது குறித்து கவலைகள் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக, அடுத்த சில ஆண்டுகளில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

“ஒரு சராசரி இந்தியருக்கு இன்று 28 வயதாக இருந்தால், அடுத்த 30 ஆண்டுகளில் இது 30 வயதாக அதிகரிக்கும்” என சங்கமித்ரா கூறுகிறார்.

வரும் ஆண்டுகளில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நிதர்சனத்திலிருந்து நாம் தப்பிக்க முடியாது. ஆனால், அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

“சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நாம் முதலீடு செய்ய வேண்டும்”, என்று அவர் கூறுகிறார். ஒருபுறம், வயதான பெண்கள் பாலின சமத்துவமின்மையின் போது சில சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும். இந்த அனைத்து காரணங்களுக்காகவும், முதியவர்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வதற்கான வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் ” என்றார் சங்கமித்ரா.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு