07 கோடி கொள்ளை – விசாரணையில் வெளியாகிய பல தவகல்கள் !

by adminDev2

on Monday, December 02, 2024

ஆயுதமேந்திய சிலர் அண்மையில் கொள்ளையடித்துச் சென்ற சுமார் 07 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கற்கள், தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை லக்கல பொலிஸாரால் இன்று (01 மீட்கப்பட்டுள்ளன.

இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 9 பேர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

அதன்படி இவர்களால் கொள்ளையிடப்பட்ட இரண்டு மாணிக்கக்கற்கள் 78 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், கொள்ளைக்கு பயன்படுத்திய வேனும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

அத்துடன், 7 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், கொள்ளையிடப்பட்ட மாணிக்கக்கல் ஒன்று 7 துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதவிர கொள்ளையிடப்பட்ட 23 லட்சம் பணமும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர்கள் மேலும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

பொத்துஹெர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கொள்ளையிடப்பட்ட 60-70 கிலோ எடையுள்ள செப்பு தங்கம் கலந்ததாக சந்தேகிக்கப்படும் புத்தர் சிலையொன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளையர்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல குற்ற வழக்குகள் இருப்பதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

லக்கல பொலிஸாரின் விசாரணைகளுக்கு அமைய பிக்கு ஒருவர் உட்பட 12 பேரால் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவர்களில் 11 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பிக்கு இந்த கொள்ளை சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர் என்றும், கைது செய்யப்பட்டவர்களில் அவரது சகோதரர் ஒருவரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மாவத்தகம, பொல்பித்திகம, தம்புள்ளை, குருநாகல், வில்கமுவ மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நாவுல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நவம்பர் 10 ஆம் திகதி இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்