வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட பேருந்து சேவையை ஆரம்பிக்குமாறு ஆளுநரிடம் யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
யாழ் வணிகர் கழகம் தலைவர் இ.ஜெயசேகரன் தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர்.
அதன் போதே குறித்த கோரிக்கையை முன் வைத்தனர். யாழ் வணிகர் கழகப் பிரதிநிதிகள் கோரிக்கையை அடுத்து, அவற்றை ஆரம்பிப்பதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆபத்தானதாக உள்ளது என்று சுட்டிக்காட்டிய வணிகர் கழகத்தினர் தீவகப் பகுதிகளின் பொருட்கள் போக்குவரத்து landing craft mechanism பயன்படுத்துவதன் அவசியத்தையும் முன்வைத்தனர். இவற்றுக்கு சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் பதிலளித்தார்.
அதேவேளை வடக்கில் நிலவும் மணல் பிரச்சினைக்கு தெற்கிலிருந்து இங்கு மணலைக் கொண்டு வரும் யோசனையும், கடலிலிருந்து மணலைப் பெற்றுக் கொள்ளும் திட்டத்தையும் வணிகர் கழகத்தினர் முன்வைத்தனர். அவற்றை ஆராய்வதாக ஆளுநர் குறிப்பிட்டார்.