ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையின் காரணமாக, வ.உ.சி நகர் பகுதியில் உள்ள அண்ணாமலையார் மலையில் நேற்றிரவு (டிச. 01) மண் சரிவு மற்றும் பாறை சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 11வது தெருவின் குடியிருப்புப் குதியில் மலையிலிருந்து உருண்டு வந்த சுமார் 40 டன் எடை கொண்ட பாறை விழுந்ததில், இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.
மேலும், எச்சரிக்கையாக அருகில் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு வீட்டின் மீது விழுந்து இடிபாடுகளில் ஒரு சிறுமி உட்பட 7 பேர் சிக்கியுள்ளனர் என, உள்ளூர் மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர். மண் சரிவு ஏற்பட்டு 20 மணிநேரத்தைக் கடந்து, இன்னும் அவர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், “மண் சரிவால் மண்ணில் புதைந்துள்ள வீட்டுக்குள் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது பிள்ளைகள் 2 பேர் மற்றும் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் சிக்கியுள்ளனர்,” என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
என்ன நடந்தது?
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் இரண்டு நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக, மாவட்டத்தில் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துகொண்டது.
நேற்று பெய்த தொடர் கனமழையால் நேற்று மாலை ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, திருவண்ணாமலை மலையில் இருந்து ராட்சதப் பாறை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகர் மக்களின் வீடுகளின் மீது சரிந்தது.
இந்த சத்தம் கேட்டவுடன் அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
முன்னதாக, சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், நேற்றிரவு மண் சரிவு ஏற்பட்ட சிறுது நேரத்தில் மோப்ப நாய்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு, இரவு மழை பெய்தது மற்றும் இருள் சூழ்ந்த காரணத்தால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், காலையில் மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், அப்பகுதிக்கு உள்ளே யாரையும் தற்போது அனுமதிப்பதில்லை.
மண் சரிவில் சிக்கியவர்களில் நிலை என்ன?
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியை ஆய்வு செய்தார்.
அதன் பிறகு பேசிய அமைச்சர், “ஒரு பெரியவர், ஒரு தாய், 4 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை இந்த மண் சரிவில் புதைந்த வீட்டில் சிக்கியுள்ளனர். மண் சரிவில் சிக்கியவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.” என்றார்.
இந்த இடிபாடுகளை நீக்க தலைமைச் செயலாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், “பெரிய பாறை ஒன்று உள்ளது. அது சரிந்தால் நிலைமை மேலும் மோசமாகி விடும். அதனை உடைக்க நெடுஞ்சாலைத் துறையிலிருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வந்தவுடன் மண்ணின் உறுதித் தன்மையைப் பொருத்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்,” என்றார்.
“சிக்கலான நிலப்பரப்பாக இருப்பதால், ஜேசிபி போன்ற இயந்திரங்களைப் பயன்படுத்த முடியவில்லை. பணியாளர்கள் மூலம் தான் இங்கு சரிந்துள்ள மண்ணை அகற்றுவது மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று அமைச்சர் கூறினார்.
மண் சரிவை நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன?
நேற்று மண் சரிவை நேரில் பார்த்த நபர் தனியார் தொலைக்காட்சியிடம், “எப்போதும் போல மலையிலிருந்து தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. திடீரென மண்ணும் நீரோடு சேர்த்து அடித்துக்கொண்டு வந்தது. நாய்கள் குலைத்துக்கொண்டு ஓடின, முடிந்த வரை அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு உதவிகள் செய்தோம். அப்போது மேலே உள்ள வீடுகள் மண் சரிவில் சிக்கின,” என்றார்.
“சத்தம் கேட்டு நானும் எனது குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியேறி கீழே சென்றோம். அப்போது, எனது உறவினர் ஒருவர் மண் சரிவால் வீட்டிற்குள் சிக்கினார். அவரை ஓட்டைப்பிரித்து நாங்கள் மீட்டோம்,” என மண் சரிவை நேரில் பார்த்த மற்றொரு நபர் கூறினார்.
மண் சரிவில் சிக்கியவர்களின் உறவினர்கள் நேற்று (1.12.2024) தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்தனர். அதில், மண் சரிவில் சிக்கியுள்ள சிறுமியின் தந்தை மஞ்சுநாதன் பேசுகையில், “மாலை 4 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டதில், நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி, அருகில் இருக்கும் உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்தோம். அப்போது பாறை சரிந்ததில் என் மகள் மற்றும் 6 நபர்கள் வீட்டிற்குள் சிக்கினர். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை வைத்தார்.
மற்றொரு சிறுமியின் தந்தையான ஸ்ரேயஸ், “மாலை 4 மணி அளவில், பாறை சரிந்து வந்தது. அதில் உறவினர் வீட்டில் இருந்த என் மகள் உட்பட 7 நபர்கள் சிக்கியுள்ளனர். நாங்கள் அங்கு சென்று பார்த்தோம். எந்த சத்தமும் கேட்கவில்லை,” என்றார்.
எத்தனை நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர்?
சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் காவல்துறையினர் நேற்றிரவு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்குப் பின் பேசிய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், “தற்போது வரை 50 முதல் 80 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 நபர்கள் தங்கியிருந்த வீடு, மண்ணில் முற்றிலுமாக புதைந்துள்ளதாக அங்கிருக்கும் மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர். அந்த வீட்டிற்குச் செல்லும் பாதைகளும் மண்ணில் புதைந்துள்ளது.”
“தொடர்ந்து மழை நீர் மலையிருந்து வருவதால், மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது,” என பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
சத்தம் கேட்டு மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி, அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு உதவி செய்துள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு