தலைவர் பிறந்தநாள்:உள்ளே தள்ள சதி!

by guasw2

தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட சம்பவம் தொடர்பில் வழக்கினை தாக்கல் செய்யவும் கைதுகளை முன்னெடுக்கவும் இலங்கை காவல்துறை முற்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளன்று  முன்னிட்டு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் ,தலைவரின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணியில் கேக் வெட்டி , மரநடுகை மேற்கொள்ளப்பட்டு, பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

அதன் போது நிகழ்விடத்தில்,தலைவரின் புகைப்படத்துடனான பதாகை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அவ்வேளை அங்கு வருகை தந்திருந்த இலங்கை காவல்துறையினர்; தலைவரின் படத்தை அகற்றி விட்டு நிகழ்வை நடத்த அறிவுறுத்தினர்.

அதனை அடுத்து, ஏற்பாட்டாளர்கள் தலைவரின் படத்தை மறைத்து விட்டு நிகழ்வை முன்னெடுத்து இருந்தனர்.

இந்நிலையில் பிறந்தநாள் நிகழ்வு தொடர்பில் சிவாஜிலிங்கம் வீட்டிற்கு சென்று காவல்துறையினர் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

அதேவேளை ,பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்ட ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளதாகவும், பெறப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

முன்னதாக முகநூல் பதிவுகள் தொடர்பில் கைதான மானிப்பாயினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளது தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் 4ம் திகதி புதன்கிழமை வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்