சம்பல் வன்முறை: உள்ளூர் இந்து-முஸ்லிம் உறவில் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது?
- எழுதியவர், அன்ஷுல் சிங்
- பதவி, உ.பி.யில் உள்ள சம்பலில் இருந்து பிபிசி செய்தியாளர்
மேற்கு உத்தர பிரதேசத்தில் சம்பல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஷாஹி ஜாமா மசூதியில் நவம்பர் 29 அன்று, வெள்ளிக்கிழமைக்கான தொழுகை நடத்தப்பட்டபோது, சுற்று வட்டாரத்தில் அமைதி நிலவியது. அப்பகுதியில் ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன.
நவம்பர் 24 அன்று மசூதியில் இரண்டாம் கட்ட ஆய்வுப் பணிகளின் போது, அப்பகுதியில் வன்முறை ஏற்பட்டது. அதன் பிறகு, நடந்த முதல் வெள்ளிக்கிழமை தொழுகை அது.
அந்த சமயத்தில் நாங்கள் ஓம்கார் மற்றும் ஷானுவை சந்தித்தோம்.
இங்குள்ள ஒரு கடையில் கடந்த 24 ஆண்டுகளாக ஓம்கார் வேலை பார்த்து வருகிறார், ஷானு ஓட்டுநராக பணிபுரிகிறார்.
இருவரும் 16 ஆண்டுகளாக ஒருவரையொருவர் நன்கு அறிந்திருக்கிறார்கள், காலப்போக்கில் அவர்களின் நட்பு ஆழமானது.
`கருப்பு நாள்’
வன்முறை சம்பவம் நடந்த அந்த ஞாயிற்றுக்கிழமையை சம்பல் பகுதியின் ‘கருப்பு நாள்’ என்று ஷானு கருதுகிறார்.
“சம்பலுக்கு அது ஒரு கருப்பு நாள். இதற்கு முன் இந்த பகுதியில் இப்படியொரு சம்பவத்தை நாங்கள் பார்த்ததே இல்லை. ஓம்கார், மஹிபால், பண்டிட் ஜி என நாங்கள் அனைவரும் இயல்பாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் சகோதரர்களைப் போல பழகுகிறோம்.” என்று ஷானு கூறினார்.
இரண்டாவது நாளாக நடந்த ஆய்வுப் பணிகளின் போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர். ஆனால், நான்கு பேர் மட்டுமே உயிரிழந்ததாக போலீசார் உறுதி செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறையை நினைவுகூர்ந்த ஓம்கார் , “எங்கள் மார்க்கெட் பகுதியில் உள்ள அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிவிட்டனர். நான் இந்து என்பதால் அவ்வப்போது வெளியில் எட்டிப்பார்த்தேன். கேமராவில் சிக்காமல் இருக்க முஸ்லிம்கள் வெளியே வரவே இல்லை. முஸ்லிம்கள் அச்சமடைந்தனர். வீடியோவில் சிக்கினால், போலீஸ் கைது செய்துவிடுவார்கள் என்று பயந்தனர்.” என்று கூறினார்.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பதற்றம்
சம்பலின் ஷாஹி ஜாமா மசூதிக்குப் பின்னால் கோட் பஸ்சிம் மொஹல்லா (Kot Paschim Mohalla) என்னும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி உள்ளது.
நவம்பர் 24 ஆம் தேதி, இங்கு போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை மோதல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வாரமாகியும் இன்னும் இந்த தெருவில் பல வீடுகள் பூட்டியே கிடக்கின்றன. கேமரா முன் பேச மக்கள் தயாராக இல்லை.
ஊடகங்களிடம் பேசினால், போலீசார் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை போலீஸ் நிர்வாகம் மறுத்து வருகிறது.
இது தொடர்பாக சம்பல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் பிஷ்னோயிடம் பிபிசி பேசியது.
“யாரையும் துன்புறுத்தவோ, வாழ்க்கையை நாசப்படுத்தவோ காவல்துறைக்கு விருப்பம் இல்லை. ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கிறோம்,’’ என்று கிருஷ்ண குமார் பிஷ்னோய் கூறினார்.
சம்பலைச் சேர்ந்த சிலர், அவர்களின் அடையாளங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்ற நிபந்தனையுடன் எங்களிடம் பேசினர்.
“காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து இங்குள்ள மக்கள் பலர் வீடுகளை பூட்டிவிட்டு வெளியேறியுள்ளனர். நிலைமை சீராகும் வரை அவர்கள் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை” என்று ஒருவர் கூறினார்.
ஆனால், தங்களின் உடைமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு இவர்கள் எங்கே போனார்கள்?
இதுகுறித்து அப்பகுதி மக்கள், “சிலர் டெல்லிக்கும், சிலர் உத்தராகண்டிற்கும், சிலர் தொலைதூரத்தில் உள்ள உறவினரின் வீடுகளுக்கும் சென்றனர்” என்றனர்.
இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளின் நிலை என்ன?
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியுடன் ஒப்பிடும்போது இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியின் காட்சிகள் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது.
மசூதிக்கு எதிரே கோட் பூர்வி மொஹல்லா என்னும் பகுதி உள்ளது, அங்கு இந்து மக்கள் வசிக்கின்றனர். முஸ்லிம் மக்கள் வசிக்கும் சுற்றுப்புறங்களுடன் ஒப்பிடும்போது, இங்கு எல்லாமே இயல்பாக உள்ளது. மக்கள் நடமாட்டம் இயல்பாக உள்ளது.
இங்குள்ள கடைகள் திறக்கப்பட்டுள்ளன, எந்த வீடும் பூட்டிய நிலையில் இல்லை.
இங்குள்ளவர்கள் கேமராவை கண்டு பயப்படாமல் பேச தயாராக உள்ளனர்.
உள்ளூரில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் ஷாஹி மசூதியை ஹரிஹர் கோவில் என்று நம்புகின்றனர். மேலும், 73 வயதான பிரேம் சங்கரும் இதனை நம்புகிறார்.
“என் சிறுவயதிலிருந்தே இந்த பள்ளிவாசலைப் பார்க்கிறேன். ஆனால், தொல்பொருள் துறை மற்றும் வரலாற்று புத்தகங்களில் மசூதியின் கதை வேறாக உள்ளது. இதனை அனைவரும் கோவில் என்றே அழைக்கின்றனர். இது ஹரிஹர் கோவில். எந்த இந்துவிடம் கேட்டாலும் இதைத்தான் சொல்வார்கள்” என்று பிரேம்சங்கர் பிபிசியிடம் கூறினார்.
உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவு பற்றி பேசிய அவர், நீதிமன்றம் நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார்.
இந்து-முஸ்லிம் உறவில் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது?
முஸ்லிம் வட்டாரத்தில் வன்முறை நடந்த அந்த தினத்தில், இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்றும், இதற்காக காவல்துறை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து வருவதாகவும் சிலர் கூறினர்.
அனில் கோட் என்பவர் கிழக்கு பகுதியில் உள்ள இனிப்பு கடையில் வேலை செய்து வருகிறார்.
இச்சம்பவம் இந்து-முஸ்லிம் உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
இந்தக் கேள்விக்கு பதிலளித்த அனில், “அந்த (முஸ்லிம்) பகுதியிலிருந்து யாரும் இந்த (இந்து) பகுதிக்கு வருவதில்லை. முன்பு நாங்கள் அங்கு இயல்பாக சென்று வந்தோம். ஆனால், இப்போது அங்குள்ள சூழ்நிலையைப் பார்த்து பதட்டமாக இருக்கிறது, நாங்கள் பேசிக் கொள்ளும் முறையும் மாறிவிட்டது.” என்றார்.
இதற்கிடையில், சம்பல் எஸ்பி கிருஷ்ண குமார் பிஷ்னோய் கூறுகையில், இரு சமூகத்தினரும் எந்த பதற்றமும் இல்லாமல் அமைதியாக வாழ்கின்றனர் என்றார்.
எங்கே தவறு நடந்தது?
அர்ஷத் அலீம் கான் மசூதிக்கு அடுத்துள்ள சந்தையில் ‘பிளைவுட் மற்றும் ஹார்டுவேர்’ கடை நடத்தி வருகிறார். வன்முறை சம்பவத்திற்குப் பிறகு கடை திறக்கப்பட்டுள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள் வரவில்லை என்கிறார் அவர்.
“மக்கள் தங்கள் கடைகளைத் திறக்க அரசு உதவுகிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் வரவில்லை’’ என்று அர்ஷத் கூறுகிறார்.
“இது போன்ற சூழல் சம்பலில் இதுவரை ஏற்பட்டதில்லை என்பதால், மக்கள் மனதில் அச்சம் ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடமும் அச்சம் ஏற்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வாடிக்கையாளர்கள் வருவதே இல்லை, ஏனெனில் அனைவரும் இங்கு வரவே பயப்படுகிறார்கள்.” என்கிறார் அர்ஷத்.
ஹாஜி குர்ஷித் சம்பல் சந்தையில் பெயிண்டிங் பொருட்களை விற்பனை செய்கிறார்.
“இங்கு வணிகச்சூழல் மிகவும் மோசமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வாடிக்கையாளர் யாரும் வரவில்லை. நிலைமை சீரடைய குறைந்தது ஒரு மாதம் அல்லது இருபது நாட்கள் ஆகும்” என்றார் ஹாஜி.
விஷயங்கள் எப்படி இவ்வளவு மோசமாகின?
ரஷீத் மிர்சா கடந்த 25 வருடங்களாக சம்பலில் பத்திரிகையாளராக உள்ளார். ஆய்வுப் பணிகள் விஷயத்தில் அவசரம் காட்டப்பட்டதே வன்முறைக்கு பெரிய காரணம் என்று அவர் நம்புகிறார்.
“நீதிமன்றம் ஒரு வார கால அவகாசம் கொடுத்திருந்தாலும், அவசரமாக சர்வே பணிகள் செய்யப்பட்டது. அதிகாரிகள் அவசரப்படுவதற்குப் பதிலாக, முஸ்லிம் அறிஞர்களை வைத்து ஓரிரு நாட்கள் உரை நிகழ்த்தச் சொல்லியிருக்கலாம். சூழலை புரிய வைத்திருக்கலாம். இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைத்துக் தரப்பினரையும் அழைத்து அமைதிக் குழுக் கூட்டத்தை நடத்தியிருந்தால், பெரிய அளவில் இந்நிலை மோசமடைவதைத் தடுத்திருக்கலாம்” என்றார் ரஷீத் மிர்சா.
வன்முறை நடந்து ஒருவாரம் ஆன நிலையில், அப்பகுதியில் அமைதி நிலவுவதாக காவல்துறை கூறுகிறது.
எஸ்பி கிருஷ்ண குமார் பிஷ்னோய், “அன்றைய சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிகள், கடைகள் மூடப்பட்டன. தற்போது மீண்டும் திறக்கப்படுகின்றன. இணைய சேவைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் 300க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்டுள்ளோம், அவர்கள் கைது செய்யப்படுவார்கள். ” என்றார்.
வெளியாட்கள் நுழைய தடை
பதட்டத்திற்கு மத்தியில், சம்பல் மாவட்ட நிர்வாகம் டிசம்பர் 10ம் தேதி வரை வெளியாட்கள் நுழைய தடை விதித்துள்ளது. மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்காக வெளியிடப்பட்ட உத்தரவில், “சம்பல் மாவட்ட எல்லைக்குள் 2024 டிசம்பர் 10ம் தேதி வரை வெளியாட்களோ, பிற சமூக அமைப்புகளோ, மக்கள் பிரதிநிதிகளோ, சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனுமதியின்றி நுழையக் கூடாது” என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் பிரதிநிதிகள் இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு முன்னதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
“சம்பலுக்கு செல்லும் கட்சித் தலைவர்கள் குழுவை தலைமைத் தாங்கும் எதிர்க்கட்சித் தலைவர் மாதா பிரசாத் பாண்டே, லக்னௌவில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘உள்துறை செயலாளர் சஞ்சய் பிரசாத் தன்னை அழைத்து சம்பலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக’ குறிப்பிட்டார்,” என்று பிடிஐ செய்தி முகமையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சம்பல் எம்பி ஜியா-உர்-ரஹ்மான் பார்க் சம்பலுக்குச் செல்லும்போது தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறினார்.
இது பாஜக அரசின் தோல்வி என சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
அகிலேஷ் யாதவ் சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில், “கலவரம் நடக்க வேண்டும் என்று கனவு கண்டு மக்களை தூண்டியவர்களுக்கு அரசாங்கம் ஏற்கனவே அத்தகைய தடையை விதித்திருந்தால், அப்போது சம்பலில் உள்ள நல்லிணக்கம் மற்றும் அமைதியின் சூழல் சிதைந்திருக்காது” என்று பதிவிட்டுள்ளார்.
அகிலேஷ் யாதவின் கருத்துக்கு பாஜக தலைவரும் உ.பி.யின் துணை முதலமைச்சருமான பிரஜேஷ் பதக் பதிலளித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சியினர் சம்பலை ‘அரசியல் சுற்றுலா’ என்று கருதுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
“சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது சொந்த விவகாரங்களை கவனிக்க வேண்டும். சமாஜ்வாதி கட்சியால் பாதுகாக்கப்பட்ட குற்றவாளிகளால் ஏற்பட்ட விளைவுதான் சம்பல் சம்பவம்.” என்று பிரஜேஷ் பதக் குறிப்பிட்டார்.
சம்பல் சம்பவத்தின் பின்னணி
சம்பலின் வரலாற்றுபூர்வமான ஜாமா மசூதி இந்திய தொல்லியல் துறையின் (ASI) கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக கருதப்படுகிறது.
சம்பலின் ஷாஹி ஜாமா மசூதி தொடர்பான இந்த தகராறு நவம்பர் 19ஆம் தேதி தொடங்கியது.
சம்பலில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கைலா தேவி கோவிலின் தலைமை அர்ச்சகர் ரிஷிராஜ் மகராஜ் மற்றும் அவருடன் சிலர் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மசூதி உண்மையில் ஒரு ஹரிஹர் கோவில் என்று அவர்கள் கூறினர்.
பிபிசியிடம் பேசிய மஹந்த் ரிஷிராஜ் கிரி, மசூதி ஒரு பழமையான கோவில் என்று கூறி, “இது ஹரிஹர் கோவில், நாங்கள் அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் அளித்துள்ளோம்” என்றார்.
கடந்த 19ஆம் தேதி மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் அன்றைய தினம் பள்ளிவாசல் வளாகத்தின் முதல் ஆய்வும் நடத்தப்பட்டது.
நவம்பர் 19 அன்று நடந்த இந்த ஆய்வுப் பணியின் போது, அங்கு கூட்டம் கூடியது, ஆனால் பதற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்ட ஆய்வுப் பணியின் போது அங்கு கூட்டம் கூடியது. சற்று நேரத்தில் கூட்டத்தில் இருந்த மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு நிலைமை மோசமடைந்தது. கல் வீச்சு பல மணி நேரம் தொடர்ந்தது.
நவம்பர் 24 அன்று நடந்த இரண்டாவது கணக்கெடுப்பின் போது, கும்பலும் காவல்துறையும் நேருக்கு நேர் வந்து பல மணி நேரம் வன்முறை மோதல்கள் நடந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை, நவம்பர் 29 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து, மசூதி குழுவின் மனு (மனு தாக்கல் செய்தால்) உயர்நீதிமன்றத்தில் பட்டியலிடப்படும் வரை கீழமை நீதிமன்றம் (சிவில் நீதிமன்றம்) வழக்கை விசாரிக்காது என்று கூறியது.
இதற்கிடையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதிகளில் நிலைமை மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறது, ஆனால் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சிறிது காலம் ஆகும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு