கோவை உணவு திருவிழாவில் என்ன பிரச்னை? – மக்களுக்கு உணவு கிடைக்காதது ஏன்?

கோயம்புத்துார் விழா

பட மூலாதாரம், TNCA

படக்குறிப்பு, ”டிக்கெட்டுகளை அளவுக்கு அதிகமாக விற்றுள்ளனர் அவர்களால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை” என்கிறார் உணவுத்திருவிழாவிற்கு சென்ற ஒருவர்
  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
  • பதவி, பிபிசி தமிழ்

கோவையில் நடத்தப்பட்ட ஒர் உணவுத் திருவிழாவில் தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொகைக்கு ஏற்ப உணவு கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுபற்றி சமூக ஊடகங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

கோவையில் கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து ‘கோயம்புத்தூர் விழா’ என்ற பெயரில் பல விதமான நிகழ்ச்சிகள், நகரின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படுகின்றன. இந்த விழா, ஜனவரி மாதத்தில் ஒரு வாரத்துக்கு நடத்தப்படும். இதைத் தவிர்த்து, நவம்பர் 24-ஆம் தேதியன்று, ‘கோயம்புத்தூர் தினம்’ கொண்டாடப்படுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கொடிசியா மைதானத்தில் உணவுத் திருவிழா

இந்த ஆண்டில், 220வது கோயம்புத்தூர் தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர் விழாவையும் நவம்பர் மாதத்திலேயே இணைத்துக் கொண்டாடுமாறு, மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதால் இரண்டையும் இணைத்து நடத்தியுள்ளனர்.

விழாவைக் கோவையிலுள்ள கொடிசியா, ராக், உயிர், ரோட்டரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து நடத்தியதாக விழா ஏற்பாட்டாளர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

இதையொட்டி கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும் கலை நிகழ்ச்சிகள், ஊர்வலம், கண்காட்சிகள், இரண்டு அடுக்கு பஸ் வலம் என 100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, விழாவின் இறுதி நாட்களான நவம்பர் 30 சனிக்கிழமை மற்றும் டிசம்பர் 1 ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் கொடிசியா மைதானத்தில் உணவுத் திருவிழா நடத்தப்பட்டது.

கோயம்புத்தூர் விழாவில் கடந்த சில ஆண்டுகளாக இந்த உணவுத் திருவிழா நடத்தப்பட்டுள்ளது.

இதுவரை கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம்தான் கோயம்புத்தூரின் சுவை (Taste of Coimbatore) என்ற பெயரில் இந்த உணவுத் திருவிழாவை நடத்தி வந்தது.

முதல் முறையாக இந்த ஆண்டில், தமிழ்நாடு கேட்டரர்ஸ் அசோசியேஷன் இந்த உணவுத் திருவிழாவை ‘ரசிக்கலாம் ருசிக்கலாம்’ (Kongu Wedding Food Festival and Exhibition) என்ற தலைப்பில் நடத்தியது.

400க்கும் அதிகமான உணவு வகை என விளம்பரம்!

கோயம்புத்துார் விழா

பட மூலாதாரம், TNCA

படக்குறிப்பு, உணவுத் திருவிழாவில் பங்கேற்றவர்கள் பெரும்பாலான உணவு வகை கிடைக்கவில்லை என கூறினர்

பெரியவர்களுக்கு ரூ.799, சிறியவர்களுக்கு, ரூ.499 என்று நிர்ணயிக்கப்பட்டு, 400க்கும் அதிகமான உணவு வகைகள் இந்த டிக்கெட்டுக்கு வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.

டிக்கெட்களை புக் செய்த பல்லாயிரக்கணக்கான மக்கள், கொடிசியா மைதானத்தில் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்ற உணவு திருவிழவிற்கு வருகை புரிந்தனர்

ஆனால், மக்களுக்கு உணவு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்படவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது

மக்களுக்கு உணவை வாங்குவதே பெரும் சிரமமாகிவிட்டது. பலருக்கு அவை கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டது.

இதனால் ரூ.799 செலுத்தி, பலவித உணவு வகைகளை ருசிக்கும் எண்ணத்தோடு வந்தவர்கள் பலரும், அங்கேயே வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தனர்.

சிலரால் கவுன்டர்களுக்கு அருகிலேயே செல்ல முடியாத நிலையில், கடும் அதிருப்தி அடைந்து, அங்கிருந்தே தங்கள் கருத்தைக் காணொளியாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவு செய்தனர்.

முதல் நாள் உணவுத் திருவிழாவில் பங்கேற்ற பலரிடமும் பிபிசி தமிழ் பேசியது. அவர்களில் பலரும் பெரும்பாலான உணவு வகை கிடைக்கவில்லை என்று கூறினர்.

‘தவறான திட்டம்’

கோயம்புத்துார் விழா

பட மூலாதாரம், TNCA

கோவையைச் சேர்ந்த ஐயப்பன் பிபிசி தமிழிடம், ” டிக்கெட்டுகளை அளவுக்கு அதிகமாக விற்றுள்ளனர் அவர்களால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. செக்யூரிட்டிகளின் எண்ணிக்கை மிகக்குறைவு’’ என்றார்.

”இப்படி 400 விதமான உணவு வகைகள் என்று முடிவு செய்தது தவறான திட்டம். ஒரு நபரால் எப்படி இத்தனை வெரைட்டிகளை ருசிக்க முடியும். அது மட்டுமின்றி, புக்கிங் செய்த டிக்கெட்களின் அளவுக்கு உணவு வகைகளை தயார் செய்திருந்தார்களா என்பதும் தெரியவில்லை. பலரும் தட்டுகளை ஏந்தி பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து விட்டு, வெறுத்துப் போய் திரும்பிவிட்டனர்.’’ என்றார் செந்தில்குமார் என்பவர்.

இதே போல பலரும் பல விதமான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர்.

மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த அதிருப்தி, கோயம்புத்துார் விழாவின் கரும்புள்ளி என்றும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிலர், விழா ஏற்பாட்டாளர்களை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

‘சில விஷயங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாகிவிட்டது’

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோயம்புத்துார் விழா 2024 தலைவர் அருண், ‘‘வழக்கமாக ஓட்டல்கள் சங்கம் இந்த உணவுத்திருவிழாவை நடத்தும்போது, ஒரு நுழைவுக்கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும். உள்ளுக்குள்ளே பல்வேறு ஓட்டல்களின் ஸ்டால்களும் இருக்கும். மக்கள் விரும்பிய உணவை வாங்கிச் சாப்பிடுவார்கள். இந்த ஆண்டில் கேட்டரர்ஸ் அசோசியேஷன்தான் உணவுத் திருவிழாவை நடத்தியது. ஒரு திருமணத்தில் விருந்து கொடுப்பது போல, கோவை மக்களுக்கு ஒரு மெகா விருந்து வைக்க நினைத்தார்கள். அதில்தான் சில விஷயங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாகிவிட்டது.’’ என்றார்.

பலருக்கு உணவு கிடைக்காததற்குக் காரணத்தை விளக்கிய அவர், ‘‘மாலை 6 மணிக்கு உள்ளே வந்த பலரும், அங்கேயே கலை நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு அமர்ந்து விட்டனர். மீண்டும் மீண்டும் சாப்பிட வந்ததால், குடும்பத்துடன் சற்று தாமதமாக வந்த பலரும் கவுன்டர்களை அணுகவே முடியாத நிலை ஏற்பட்டது. கூட்டம் நகரவே இல்லை. கூட்டத்தைக் கணிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியவில்லை.’’ என்றார்.

வருத்தம் தெரிவித்த கேட்டரர்ஸ் அசோசியேஷன்!

கோயம்புத்துார் விழா

பட மூலாதாரம், TNCA

படக்குறிப்பு, ‘திருமணத்தில் வைப்பது போல, கோவை மக்களுக்கு ஒரு மெகா விருந்து வைக்க நினைத்தார்கள். அதில்தான் சில விஷயங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாகிவிட்டது’ என்றார் கோயம்புத்துார் விழா தலைவர் அருண்.

முதல் நாளில் நடந்த குளறுபடிகளாலும், கடும் விமர்சனங்களாலும் தமிழ்நாடு கேட்டரர்ஸ் அசோசியேஷன் சார்பில் ஒரு செய்தி அறிக்கை கடந்த டிசம்பர் 1 காலை வெளியிடப்பட்டது.

அதில், ‘‘கொடிசியா மைதானத்தில் திறந்தவெளியில்தான் உணவுத் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மழை வரும் என்பதால் அங்கு போடப்பட்டிருந்த பந்தலுக்குள் பொது மக்கள் அனுமதிக்கப்பட்டனர். பொது மக்களின் வருகை அதிகமாக இருந்ததால் இதுபோன்ற தவறு ஏற்பட்டு விட்டது. பொது மக்களுக்கு ஏற்பட்ட இந்த சிரமம் வருத்தத்துக்குரியது. இன்று (இரண்டாம் நாளில்) நடைபெறும் விழாவில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.’’ என்று கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாடு கேட்டரர்ஸ் அசோசியேஷன் மாநிலத் தலைவர் மாதம்பட்டி நாகராஜ் பிபிசி தமிழிடம், ‘‘பெரிதாக எந்த குளறுபடியும் நடக்கவில்லை. மிக பிரமாண்டமாக விழாவை நடத்தி முடித்துள்ளோம். முதல் நாளில், 10 ஆயிரம் பேர் புக்கிங் செய்து வந்தனர். ஆனால் நுழைவாயிலில் கொடுத்த பட்டையை (Tag) கலர் ஜெராக்ஸ் எடுத்து 10 ஆயிரம் பேர் டிக்கெட் எடுக்காமலே உள்ளே வந்து விட்டனர். அதனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு கூட்டம் வந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை. கலர் ஜெராக்ஸ் எடுத்தது பற்றி போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளோம்’’ என்றார்.

முதல் நாளில் விஐபிக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி முடிந்தபின், கதவைத் திறந்ததால் ஒரே நேரத்தில் மக்கள் திரளாக வந்து விட்டதாகத் தெரிவித்த மாதம்பட்டி நாகராஜ், ‘‘ முதல் நாளில் 10 ஆயிரம் பேர் புக்கிங் செய்திருந்தபோது 15 ஆயிரம் பேருக்கு உணவு தயாரித்து இருந்தோம். அதனால் உணவு பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.’’ என்றார்.

உணவு கிடைக்காதவர்களுக்கு தொகை கிடைக்குமா?

இதுவரை இந்த உணவுத் திருவிழாவை நடத்தி வந்த கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கத்தின் செயலாளர் ஹரிபவன் பாலச்சந்தர் பிபிசி தமிழிடம், ‘‘நாங்கள் நடத்தியபோது, ஒரு நுழைவுக் கட்டணம் வைப்போம். 100 ரூபாய்க்கு கட்டணம் வைத்தால் அதில் 60 ரூபாய்க்கு ஏதாவது உணவு வாங்கிக் கொள்ளலாம். கடந்த ஜனவரியில் நடத்தியபோது, 150 ரூபாய் டிக்கெட் வைத்தோம். அப்போது உணவின் அளவை சற்று குறைத்து, விலையை 40 சதவீதம் குறைத்து விட்டோம். அதனால் மக்கள் பலவிதமான வெரைட்டிகளை வாங்கிச் சாப்பிட முடிந்தது. அதிகபட்சமாக நாங்களும் 25 ஆயிரம் டிக்கெட்களை விற்றிருக்கிறோம்.’’ என்றார்.

இதுகுறித்து நுகர்வோர் வழக்குகளை அதிகளவில் நடத்திவரும் வழக்கறிஞர் கெளதமனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ‘‘விளம்பரத்தில் 400க்கும் அதிகமான உணவு வகைகளை ருசிக்கலாம் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பியே, அவ்வளவு தொகை கொடுத்து அங்கே பல ஆயிரம் பேர் சென்றுள்ளனர். அப்படி தொகை கொடுத்துச் சென்ற ஒவ்வொருவரும் ஒரு நுகர்வோர்தான். அவர்கள் விளம்பரத்தில் கூறியபடி, உணவு கொடுக்கவில்லை என்றால் அது சேவைக்குறைபாடுதான். அதற்கு ஒவ்வொருவரும் தனித்தனியாக நுகர்வோர் கோர்ட்டில் முறையிட்டு இழப்பீடு கேட்க முடியும். டிக்கெட் ஆதாரம் இருந்தால்போதும்!’’ என்றார்.

முதல் நாளில் உணவு கிடைக்காதவர்களுக்கு, அவர்களுக்கான டிக்கெட் தொகையை திரும்பத்தர வாய்ப்புள்ளதா என்று கோயம்புத்துார் விழா தலைவர் அருண் மற்றும் கேட்டரர்ஸ் அசோசியேஷன் மாநிலத் தலைவர் மாதம்பட்டி நாகராஜ் ஆகியோரிடம் கேட்டபோது, இருவருமே ”இதுபற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றனர்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.