குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை: மழைக்கால சரும பிரச்னைகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை: மழைக்கால சரும பிரச்னைகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், நித்யா பாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்

ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை (நவ. 30) புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இந்த புயலையொட்டி, சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மழைக்காலங்களில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவை ஏற்படாமல் தடுக்கும் வகையில், உடல்நிலைக்கு கூடுதல் கவனம் அளிக்க வேண்டும். அத்துடன், மழைக்காலத்தில் சருமத்தையும் கவனித்துக்கொள்வது முக்கியம்.

தொடர்ச்சியாக ஈரப்பதம் கொண்ட, நீர் அதிகமாக இருக்கும் சூழலில் நாம் நம்மை வெளிப்படுத்திக் கொள்வதால், சேற்றுப் புண் உள்ளிட்ட சரும நோய்களுக்கு ஆளாகும் சூழலும் அதிகரித்து வருகிறது.

பருவமழையின் போது ஏற்படும் சருமப் பிரச்னைகள் என்னென்ன? இதில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி? தோல் மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மழைக்காலங்களில் ஏற்படும் சருமப் பிரச்னைகள் என்ன?

மழைக்காலங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் ஈரமான சூழலில் இருப்பதால், அவர்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்னையாக இருப்பது பூஞ்சைத் தொற்று என்று கூறுகிறார், சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தோல் மருத்துவர் எஸ்.பி. விஷ்ராந்த்.

“மழை தொடர்ச்சியாக பெய்யும் சூழலில், பொதுமக்கள் அதிக நேரம் ஈரத்தில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். துவைத்த துணிகள் ஈரமாக இருப்பது முதற்கொண்டு, தரைகளில் ஈரம் இருப்பது போன்ற சூழல் எளிமையாக பூஞ்சைத் தொற்றுக்கு வழிவகுக்கும். பிறப்புறுப்புகள், கால் விரல் இடுக்குகள், அக்குள்களில் இந்த தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்,” என்று கூறுகிறார்.

மார்பகங்கள், பிறப்புறுப்புகள், அக்குள்கள், கால் விரல் இடுக்குகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம் என்று கூறுகிறார் அவர். மேலும் நன்கு உலர்த்திய துணியை உடுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

கால் விரல் இடுக்குகளில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றை தவிர்க்க, மருந்தகங்களில் கிடைக்கும் டஸ்டிங் மருந்துப் பொடியை (Dusting Powder) பயன்படுத்த வேண்டும் என்று கூறினார் அவர். மருத்துவ ஆலோசனை இதில் அவசியமா என்று கேள்வி எழுப்பியதற்கு, தொற்று தீவிரமாக இல்லாத சூழலில், மருத்துவரின் ஆலோசனை ஏதும் இன்றி இந்த மருந்துகளை மருந்தகங்களில் பெற்றுக் கொள்ள இயலும் என்று கூறுகிறார் அவர்.

மழைக் காலங்களில் ஏற்படும் சருமப் பிரச்னைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மழைக்காலங்களில் கால் விரல் இடுக்குகளை ஈரம் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும்

வறண்ட சருமம்

மழைக்காலங்களில் ஏற்படும் மற்றொரு சருமப் பிரச்னை வறண்ட சருமம். ஆஸ்துமா போன்ற இணை நோய் இருப்பவர்களுக்கு சருமம் இந்த காலங்களில் அதிகமாக வறண்டுவிடும்.

இதனைத் தவிர்க்க எண்ணெயை அடிப்படையாக கொண்ட சோப்புகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர் விஷ்ராந்த்.

“மழைக்காலம் என்பதால் குளிரைக் கட்டுக்குள் வைக்க சுடுநீரில் குளிப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால், அப்படி சூடான நீரில் குளிப்பது சருமத்தை மேலும் வறண்டதாக மாற்றிவிடும். எனவே, மிதமான சுடுநீரில் குளிக்க வேண்டும். மாய்ஸ்சரைசரை (சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க பயன்படுத்தப்படுவது) பயன்படுத்த வேண்டும்.

குளிர்ச்சியான சூழல் நிலவும் போது தாகம் எடுக்காது. அதனால் அதிகமாக தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள். ஆனால், வழக்கம் போல் உடலுக்குத் தேவையான நீர் ஆகாரத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்று ஆலோசனை தருகிறார் அவர்.

மழைக் காலங்களில் ஏற்படும் சருமப் பிரச்னைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய் உள்ளவர்களின் சருமம் மழைக்காலங்களில் வறண்டுவிடும்

வெங்குரு

வெங்குரு எனப்படும் சன்பர்ன் (Sunburn) இந்த காலங்களில் அதிகமாக ஏற்படும் என்கின்றனர் தோல் மருத்துவர்கள்.

“சென்னை போன்ற நகரங்களில் மாலையில் மழை பெய்து, அடுத்த நாள் காலையில் அதிக வெயில் அடிக்கும். இது போன்ற சூழலுக்கு நம்முடைய சருமம் பழகிக் கொள்ள நாட்கள் ஆகலாம்” என்கிறார் விஷ்ராந்த்.

கோடையில் இருப்பது போல் வெயிலின் தாக்கம் மோசமாக இருக்காது என்பதால், நாம் சன்ஸ்கிரீன் ஏதுமின்றி வெளியில் செல்வதை வழக்கமாக வைத்திருப்போம். அதிகமாக வெயிலில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் போது வெங்குருக்கள் ஏற்பட்டு முகம் சிவந்து போய்விடும் என்கிறார் அவர்.

“கோடைக் காலங்களில் பயன்படுத்துவது போன்று மழை மற்றும் குளிர்காலங்களிலும் சன்ஸ்க்ரீன் பூசுவதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும்,” என்று விவரிக்கிறார் விஷ்ராந்த்.

மழைக் காலங்களில் ஏற்படும் சருமப் பிரச்னைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோடைக் காலங்களில் பயன்படுத்துவது போன்று மழைக்காலங்களிலும் சன்ஸ்க்ரீன் பூசுவதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும்

பொடுகுத் தொல்லை

சென்னையைச் சேர்ந்த தோல் மருத்துவர் புவனாஸ்ரீயும் சன்ஸ்க்ரீன் போட்டுக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

“மேகங்களுக்குப் பின்னால் சூரியன் இருப்பதால் சூரிய வெளிச்சத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அறவே தவறு என்று கூறும் அவர், சூரியனின் கதிர்வீச்சுகள் எங்கிருந்தாலும் ஆபத்தை அளிப்பவையே. தென்னிந்தியர்களாகிய நமக்கு இந்தக் கதிர்வீச்சுகள் மிக விரைவாக தோலில் நிறமாற்றத்தைத் தூண்டும் (pigmentation),” என்று கூறுகிறார்.

இவை மட்டுமின்றி மழைக்காலங்களில் கேசப்பராமிப்பும் மிக முக்கியமானவை என தெரிவிக்கிறார் அவர்.

“மழைக்காலங்களில் பொடுகு தலைமுடிகளில் அதிகமாக ஏற்படும். தேங்காய் எண்ணெயை அதிகமாக தேய்ப்பது இந்த மழைக்காலத்தில் பொடுகை தீவிரப்படுத்தலாம். எனவே, வாரம் குறைந்தது மூன்று முறை தலைக்குக் குளிப்பது கட்டாயம்,” என்று கூறுகிறார் மருத்துவர் புவனாஸ்ரீ.

குழந்தைகளை தாக்கும் கை பாத வாய் நோய்

மழைக் காலங்களில் ஏற்படும் சருமப் பிரச்னைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போதுமான பொது சுகாதார முறைகளை வீடுகளில் பின்பற்றுவதன் மூலமாக இந்த நோய் பரவுவதை தடுக்க இயலும்

மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று கேள்வி எழுப்பிய போது, கை பாத வாய் நோய் என்ற நோய்த்தொற்று ஏற்படுவதை மேற்கோள்காட்டுகிறார் விஷ்ராந்த்.

Hand Foot Mouth Disease (HFMD) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நோய் தொற்று மழைக்காலங்களில் அதிகமாக பரவும் தன்மை கொண்டவை.

போதுமான பொது சுகாதார முறைகளை வீடுகளில் பின்பற்றுவதன் மூலமாக இந்த நோய் பரவுவதை தடுக்க இயலும்.

பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பின், மற்ற குழந்தைகளுடன் விளையாடிவிட்டு வரும் போது கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.

மழைக்காலங்களில் நோய்த்தொற்றை எதிர்கொள்ள நல்ல ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை பின்தொடர வேண்டும் என்றும் கூறுகிறார் அவர். இது குறித்து மேலும் விளக்கும் போது, விஷ்ராந்த், “காய்கறிகள், பழங்கள் மற்றும் சாலட்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று, இனிப்பு கலந்த உணவுகள், நிறமூட்டப்பட்ட உணவுகளை இந்த காலத்தில் தவிர்ப்பது நல்லது,” என்று கூறுகிறார்.

சின்னம்மை

மழைக் காலங்களில் ஏற்படும் சருமப் பிரச்னைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குழந்தைகளுக்கு மழைக்காலங்களிலும் சின்னம்மை ஏற்படும் என்று எச்சரிக்கிறார் விஷ்ராந்த்

கோடைக் காலங்களில் தான் சின்னம்மை அதிகமாக ஏற்படும். ஆனால், குழந்தைகளுக்கு மழைக்காலங்களிலும் சின்னம்மை ஏற்படும் என்று எச்சரிக்கிறார் விஷ்ராந்த்.

காய்ச்சல், இருமல், உடல் சூடாக இருப்பது, உடலில் கொப்புளங்கள் உருவாவதை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதில், எந்த பிரச்னையை குழந்தைகள் சந்திக்க நேரிட்டாலும் கால தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுக வேண்டும் என்று கூறுகிறார் விஷ்ராந்த்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு