இருவர் வெட்டிக் கொலை!

by adminDev2

நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓயாமடுவ – நவோதகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பண்டாரகம, பேமதுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (01) பிற்பகல் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்து கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓயாமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஓமந்தை – பரசன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை கெப் வண்டியில் வந்த குழுவினர் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில், வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன், அவர் பயணித்த கெப் வண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்