இரண்டு கோடி ரூபா பெறுமதியான சிலை திருட்டு !

by adminDev2

இரண்டு கோடி ரூபா பெறுமதியான சிலை திருட்டு ! on Monday, December 02, 2024

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நாக தேவதையுடன் கூடிய பழங்கால உலோக புத்தர் சிலையை திருடிய இரண்டு தேரர்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை மாவனெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கரஹம்பிட்டிகொடவில் உள்ள கெத்தாராம எனும் புராதன விகாரையில் வைக்கப்பட்டிருந்த உலோக புத்தர் சிலையையே சந்தேகநபர்கள் இவ்வாறு திருடியுள்ளனர்.

மாவனெல்ல தெவனகல, வரலாற்று சிறப்பு மிக்க ரஜமஹா விகாரைக்கு சொந்தமான கரஹம்பிட்டிகொட கெத்தாராம புராதன விகாரையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான நாகையுடன் கூடிய புராதன உலோக புத்தர் சிலையை சிலர் திருடிச் சென்றுள்ளதாக தெவனகல ரஜமஹா விகாரையின் தலைவர் மாதிரிகிரி புக்னசார தேரர் சமீபத்தில் மாவனெல்ல பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதற்கமைய, சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, திருட்டு தொடர்பான விசாரணைகளை கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​கிம்புல்விலவத்த தொம்பே பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் 28 வயதுடைய தேரர், கண்டி மஹய்யாவ பிரதேசத்தில் உள்ள விகாரையின் தேரர் மற்றும் பேராதனை கன்னோறுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொம்பே விகாரையின் தேரரின் திட்டத்திற்கமைய இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் மாவனெல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்