இந்தியா – வங்கதேச உறவில் அதிகரிக்கும் கசப்பு – முடிவுக்கு கொண்டுவர என்ன வழி?

வங்கதேசம்

பட மூலாதாரம், Rehman Asad/NurPhoto via Getty Images

படக்குறிப்பு, டாக்காவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்
  • எழுதியவர், ரகீப் ஹஸ்னத் மற்றும் சௌமித்ரா சுப்ரா
  • பதவி, பிபிசி பங்களா

சமீபத்தில் வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை நிகழ்வும், வங்கதேசத்தைத் தளமாகக் கொண்ட இந்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சின்மோய் கிருஷ்ண தாஸின் கைதும் இந்தியா வங்கதேதேசம் இடையிலான ராஜ்ஜீய உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை தெளிவாகக் காட்டுகிறது.

இந்த விஷயத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளன.

இரு நாடுகளிலுமே இதை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.

கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணை தூதரகத்தின் முன்பு போராட்டம் நடந்தது.

வங்கதேசத்தில் உள்ள  சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை அதிகரித்து வருவதாகவும், அவர்களின் இறை வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சமீபத்தில் நடந்த சம்பவங்களுக்கு பிறகு, வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை உள்நாட்டிலும், ராஜ்ஜீய ரீதியிலும் இந்த அரசால் சரியாக சமாளிக்க முடியுமா என சிறுபான்மையினரும், ஆய்வாளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபையில், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யாக பரப்பப்பட்டது என்றும் சிறுபான்மையினருக்கு எதிராக எந்த குற்றமும் வங்கதேசத்தில் நடைபெறவில்லை என்றும் அந்நாடு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் பிரச்னை தொடர்பான 17வது அமர்வில், “வங்கதேசத்தின் அனைத்து குடிமக்களையும், அதன் சிறுபான்மையினர் உட்பட அனைவரையும் பாதுகாப்பாதே இந்த இடைக்கால அரசின் இலக்கு,” என்று வங்கதேசத்தின் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதியான தாரிக் முகமது இஸ்லாம் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, நாடாளுமன்றத்தில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வங்கதேசத்தின் சிறுபான்மையினரின் மத வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடந்துள்ளது என தெரிவித்தார். இது தொடர்பாக இந்தியாவின் கவலைகள் வங்கதேசத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

வங்கதேச அரசின் ஆலோசகரான ஆசிப் நஸ்ருல், தனது முகநூல் பக்கத்தில் இந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு இந்தியாவிற்கு தனது கண்டனத்தையும் தெரிவித்தார்.

பின்னணி என்ன?

 சின்மோய் கிருஷ்ணதாஸ்

படக்குறிப்பு, சின்மோய் கிருஷ்ண தாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சுதந்திரத்திற்குப் பிறகு வங்கதேசத்தில் சிறுபான்மை சமூகம் பலமுறை தாக்கப்பட்டதாக தனது பெயரை கூற விரும்பாத வங்கதேசத்தின் முக்கிய இந்து பிரமுகர் ஒருவர் பிபிசி பங்களாவிடம் கூறினர்

“இந்த ஆண்டு ஜூலையின் தொடக்கத்திலிருந்தே அங்கொன்றும் இங்கொன்றுமாக பல்வேறு இடங்களில் வன்முறை நடந்து கொண்டிருந்தது. அவை இன்னும் தொடர்கின்றன. இருப்பினும் துர்கா பூஜையின் போது நிலைமை சமாளிக்கப்பட்டது”

”சமீபத்தில் சிட்டகாங்கில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு நிலைமை மோசமாவதை அரசு தடுத்தது. அதாவது, அரசாங்கம் விரும்பினால், இது சாத்தியமாகும். ஆனால் இது எல்லா சந்தர்ப்பங்களிலும் நடப்பதில்லை.“ என்றார் அவர்.

வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டங்களை தொடர்ந்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து இடைக்கால அரசு ஆகஸ்ட் 8-ஆம் தேதி அமைக்கப்பட்டது.

இந்த இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர் மூன்று நாட்களில்தான் சிறுபான்மையினருக்கு எதிராக, நாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது.

அவாமி லீக் கட்சியுடன் தொடர்புடைய சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடந்ததாகவும் சிறுபான்மையினராகக் கருதி யாரும் தாக்கப்படவில்லை எனவும் இடைக்கால அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர் கூறினர்.

இருப்பினும், இந்து பௌத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் குறைந்தது 29 மாவட்டங்களில் சிறுபான்மையினரின் வீடுகள், நிறுவனங்கள், கடைகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டதாகவும் சூறையாடப்பட்டதாகவும் தெரிவித்தது.

பின்னர், பாகுபாட்டுக்கு எதிரான மாணவர் இயக்கம் சார்பில் வன்முறையை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது

ஆகஸ்ட் 13 -ஆம் தேதி இடைக்கால அரசின் தலைவர் பேராசிரியர் முகமது யூனுஸ் தனது இல்லத்தில் சிறுபான்மையினரின் தலைவர்களை சந்தித்து பேசினார்.

இந்து பௌத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சிலின் உறுப்பினரான வழக்கறிஞர் சுப்ரதா சௌத்ரி, மதச் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் தாக்குதலை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்காததால் நிலைமை மோசமானதாக தெரிவித்தார்

“இது கொஞ்சம் கொஞ்சமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. கல்வி நிறுவனங்களில் இருந்து ஆசிரியர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். இந்த அரசாங்கம் தோற்றுவிட்டது. இது நிலையற்றதாக இருக்கின்றது. சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அரசாங்கம் செயல்பட தயக்கம் காட்டுகிறது” என்று பிபிசி பங்களாவிடம் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் நடந்த சனாதன் ஜாக்ரன் மஞ்சின் கண்டன போராட்டத்திற்கு பிறகு நிலைமை மிகவும் சிக்கலானது.

சனாதன் ஜாக்ரன் மஞ்ச் மற்றும் இஸ்கான்

சனாதன் ஜாக்ரன் மஞ்ச்

படக்குறிப்பு, கொல்கத்தாவில் சனாதன் ஜாக்ரன் மஞ்சிற்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தப்பட்டது.

அக்டோபர் 25-ஆம் தேதி சிட்டகாங்கில் சனாதன் ஜாக்ரன் மஞ்ச் அமைப்பினர் பேரணி நடத்தினர். தற்போது தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சின்மோய் கிருஷ்ண தாஸ் இந்த பேரணியின் முக்கிய பேச்சாளராக இருந்தார்.

இந்த பேரணியில் எட்டு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறையில் சம்மந்தப்பட்டவர்களுக்கு உடனடி தண்டனை வழங்க தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்படவேண்டும், நஷ் ஈடு வழங்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு திட்டம் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக உடனடி சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பவை அதில் இடம்பெற்றது.

அந்த பேரணியின் கிருஷ்ண தாஸ், “எங்களை துரத்திவிட்டு அவர்கள் மட்டும் நிம்மதியாக வாழலாம் என்று நினைத்தால், இந்த நாடு ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா போல மாறிவிடும்” என்றார்

“சிறுபான்மையினர் என்ற ஒரே காரணத்தினால் 93 பேர் காவல் துறையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சிட்டகாங் பல்கலைக்கழத்தில் இந்துக்களை அடையாளம் காணுகின்றனர். இடையில் இது நடக்காமல் இருந்தாலும் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதற்கு பிறகும் நாங்கள் அமைதி காக்க மாட்டோம்.” என்றார்.

பேரணி மற்றும் அவரது உரை சமூக ஊடகங்களில் பெரும் அளவில் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ரங்பூரில் பேரணியும் நடந்தது,

இதற்கிடையில் இஸ்கான் (ISKCON) தொடர்பான சர்ச்சை பேசுபொருளாகியது.

நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இஸ்கான் முகநூல் பதிவு தொடர்பாக சிட்டகாங் பகுதியிலுள்ள ஹஸாரியில் 82 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த பகுதியில் இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் பெரிய அளவிலான நடவடிக்கையை மேற்கொண்டனர், இது இங்குள்ள இந்து சமூகத் தலைவர்களை கோபப்படுத்தியது.

சனாதன் ஜாக்ரன் மஞ்ச்

பட மூலாதாரம், Kamal Das

படக்குறிப்பு, சிட்டகாங்கில் சனாதன் ஜாக்ரன் மஞ்ச் பேரணி

முன்னதாக, ‘அமர் தேஷ் பத்ரிகா’ பத்திரிகையின் ஆசிரியர் மஹ்மூத் உர்-ரஹ்மானுக்கு எதிராக இஸ்கான், பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. அவர் ‘தவறான’ கருத்துக்களை பேசியதாக குற்றம் சாட்டியது.

இஸ்கானை, மதம் சார்ந்த இயக்கம் என்றும் இந்தியாவின் ரா அமைப்புடன் தொடர்பில் உள்ளது என்றும் ரஹ்மான் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த இஸ்கான், தன்னை ஒரு அரசியல் அல்லாத அமைதியான மத அமைப்பு என்று தெரிவித்துள்ளது.

சிட்டகாங் மற்றும் ரங்புர் ஆகிய இடங்களில் சனாதன் ஜாக்ரன் மஞ்ச் அமைப்பினர் நடத்திய போராட்டங்களால் சமூக ஊடகங்களில் சின்மோய் தாஸ்தான் இஸ்கானின் தலைவர் என்ற தகவல் பரவியது.

சிலர் இஸ்கான் அமைப்பு தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

ஆனால் சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு, இஸ்கான் உடன் எந்த தொடர்பும் இல்லை என்று இஸ்கான் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள் கிருஷ்ண தாஸை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அடுத்த நாள் நீதிமன்றத்தில் தேச துரோக வழக்கில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடைய ஆதரவாளர்கள் நிறைய பேர் அங்கு கூடியிருந்தனர்.

இதன் காரணமாக அங்கு கலவரம் வெடித்தது. அக்கலவரத்தில் சைப்-உல்-இஸ்லாம் என்ற வழக்கறிஞர் நீதிமன்ற வாசலிலே கொல்லப்பட்டார்.

இந்த கைதுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது அதற்கு வங்கதேசம் பதிலடி கொடுத்தது.

இந்தியா- வங்கதேச உறவு எந்த அளவிற்கு பாதிப்படையும்?

 டாக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் படம்

சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்ட பிறகு இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தன.

அதே போல வங்கதேசத்தில் இஸ்கான் எதிர்ப்பு மற்றும் இந்திய எதிர்ப்பு பிரசாரம் தொடங்கியது.

“சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை நடத்தி வருபவர்களை கண்டுகொள்ளாத அரசு, இந்த தவரை தட்டிக் கேட்ட மத தலைவரை கைது செய்துள்ளது” என்று இந்திய வெளியுறவுத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த வங்கதேசத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம், “ கிருஷ்ண தாஸின் கைதையொட்டி பல்வேறு பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. இந்த மாதிரியான குற்றசாட்டுகள் பொய்யானவை மட்டுமல்ல இரு நாடுகளின் நட்புறவிற்கும் ஆபத்தானதும் கூட. இது வருத்தமளிக்கிறது” என்றது

“நாங்கள் தெளிவாக உள்ளோம். இப்போது செயல்பட்டு வரும் இடைக்கால அரசுதான் சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும், அது அவர்களின் பொறுப்பு,” என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

“வங்கதேசம் மீதான இந்தியாவின் நியாயமற்ற குற்றசாட்டுகள் இன்னும் முடிவடையவில்லை. இந்தியாவிலுள்ள இஸ்லாமிய சிறுபான்மையினர் மீது வன்முறைகள் நடத்தப்படுகிறது. ஆனால் அதை நினைத்து அவர்கள் வெட்கமோ, வேதனையோ படவில்லை. இந்தியாவின் இந்த இரட்டை வேடம் கண்டிக்கத்தக்கது,” என்று வங்கதேச அரசின் ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தெரிவித்தார்.

வங்கதேச அரசாங்கம் நிலைமையை கையாளுமா?

பேரணி

பட மூலாதாரம், NITAI DE

படக்குறிப்பு, இந்தியாவின் திரிபுராவில் சின்மோய் கிருஷ்ண தாசுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியின் புகைப்படம்.

தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் இந்தியா வங்கதேச உறவுகள் பற்றி நடந்த கருத்தரங்கில் பேசிய வங்கதேச வெளியுறவுத் துறையின் ஆலோசகர் ஒருவர், வங்கதேசத்தின் கவலைகளுக்கு இந்தியா முக்கியத்துவம் வழங்கி இருந்தால் இந்த நிலை உருவாகி இருக்காது என்று தெரிவித்தார்.

மேலும் இந்திய ஊடகங்கள் இரு நாடுகளின் உறவை மேம்படுத்த எந்த வகையிலும் உதவவில்லை என்றும் தெரிவித்தார்.

டாக்கா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் அரசியல் ஆய்வாளரான சபீர் அகமது, அரசு சிறுபான்மையினரின் பிரச்னைகளை கேட்டு தீர்த்து வைத்திருக்க வேண்டும் என்கிறார்

“இஸ்கான் (ISKCON) சர்ச்சை தீர்க்கப்படவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசமடையும். மதம் சார்ந்த அமைப்பு மதம் தொடர்பாக மட்டும் செயல்பட்டால் நன்றாக இருக்கும், இதுவே அது அரசியலில் ஈடுபட்டால் அது சந்தேகத்தை எழுப்பும்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி ஒரு இந்துத்துவ கட்சி. அதனால் அது இந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டே இருக்கும் என்று அவர் கூறினார்.

“இந்த பிரச்னையால் இந்தியா மற்றும் வங்கதேசத்தின் உறவில் எந்த சிக்கலும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி விரிசல் ஏற்பட்டால் வங்கதேசம்தான் அதிக பாதிப்புகளை சந்திக்கும். எனவே வங்கதேசத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னெடுப்பில் எந்த போதாமையும் இருக்க கூடாது” என்றார் அவர்.

டாக்கா பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையின் பேராசிரியர் ஹபீசுர் ரஹ்மான் கர்சன், அரசு போதிய நடவடிக்கை எடுக்காததால்தான் சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் கோவில்களில் தாக்குதல் நடைபெறுவதாக தெரிவித்தார்.

“சில குழுவினர் வங்கதேசம் மற்றும் இந்தியா இடையே மத ரீதியான பிரிவினைவாதத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதனால்தான் இந்த விஷயம் இவ்வளவு தூரம் சென்றுள்ளது. அரசாங்கம் முன்கூட்டியே அரசியல் கட்சிகளுடன் இணைந்து கலந்துரையாடியிருக்க வேண்டும்.”

”வங்கதேசத்தில் மத நல்லிணக்கம் இல்லை என்றால், இங்கு அராஜக சூழல் உருவாகலாம்.” என்கிறார் அவர்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.