பெல்ஜியம்: உலகிலேயே முதன்முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் ஓய்வூதியம்

உலகிலேயே முதல்முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு

படக்குறிப்பு, “இந்தச் சட்டம் தனது வாழ்க்கையை மேம்படுத்தும்” என மெல் என்ற பெண் பகிர்ந்து கொண்டார்
  • எழுதியவர், சோஃபியா பெட்டிஸா
  • பதவி, பாலினம் மற்றும் அடையாளம் செய்தியாளர், பிபிசி உலக சேவை

(குறிப்பு : இக்கட்டுரையில் பாலியல் உள்ளடக்கங்கள் கொண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன)

பெல்ஜியத்தில் பாலியல் தொழிலாளியான சோஃபி, ”ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தபோதும் நான் பணியற்ற வேண்டி இருந்தது” என்கிறார். பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டியிருந்ததாக சோஃபி கூறினார்.

சோஃபி, தனது ஐந்து குழந்தைகளுக்கும் வேலைக்கும் இடையில் போராடி வருகிறார்.

சிசேரியன் மூலம் ஐந்தாவது குழந்தையைப் பெற்ற பிறகு, சோஃபிக்கு ஆறு வாரங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவரால் ஓய்வு எடுக்க முடியவில்லை. உடனடியாக வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் இருந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

உலகிலேயே முதன்முறை

தனக்கு பணம் தேவைப்பட்டதால் வேலையை விட முடியவில்லை என்று சோஃபி விளக்கினார்.

ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு கிடைத்திருந்தால், அவருடைய வாழ்க்கை மிகவும் எளிதாக இருந்திருக்கும் என்று அவர் கூறினார்.

உலகத்திலேயே முதல் முறையாக பெல்ஜியத்தில்தான் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் மூலம், பாலியல் தொழிலாளர்களும் மற்ற தொழிலாளர்களைப் போன்ற உரிமைகளைப் பெறுவார்கள்.

இந்தச் சட்டம் பாலியல் தொழிலாளர்களுக்கு வேலை ஒப்பந்தம் , மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பு ஆகியவற்றை வழங்குகிறது.

இதன் மூலம் பாலியல் தொழிலும் மற்ற வேலைகளைப் போலவே கருதப்படும்.

“மற்றவர்களைப் போலவே நாங்களும் மதிக்கப்படுவோம்” என்று புதிய சட்டத்தின் முக்கியத்துவத்தை சோஃபி எடுத்துக்காட்டினார்.

பாலியல் தொழிலாளர்களின் சர்வதேச ஒன்றியத்தின் தரவுகளின்படி, உலகம் முழுவதும் சுமார் 52 மில்லியன் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். பெல்ஜியத்தில், பாலியல் தொழில் 2022 ஆம் ஆண்டு குற்றமற்றது என அங்கீகரிக்கப்பட்டது.

மேலும், துருக்கி மற்றும் பெரு போன்ற நாடுகளிலும் பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது.

இருப்பினும், உலகிலேயே முதன்முறையாக, பாலியல் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு உரிமைகள் மற்றும் ஒப்பந்தங்களை பெல்ஜியம் வழங்கியுள்ளது.

“இதுவரை உலகில் எங்கும் பார்க்காத நடவடிக்கை. ஒவ்வொரு நாடும் பெல்ஜியத்தை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆராய்ச்சியாளர் எரின் கில்பிரைட் கூறினார்.

உலகிலேயே முதல்முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு

பட மூலாதாரம், UTSOPI

படக்குறிப்பு, கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு பாலியல் தொழிலாளர்களுக்கான தொழிலாளர் உரிமைகளை ஆதரிக்கும் போராட்டங்கள் அதிகரித்தன

ஆனாலும் கடத்தல், சுரண்டல் மற்றும் சீண்டல் ஆகியவற்றை இந்த சட்டம் தடுக்காது என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

“இது ஆபத்தானது, ஏனெனில் எப்போதுமே வன்முறையான ஒரு தொழிலை இச்சட்டம் இயல்பாக்குகிறது” என்று பெல்ஜியத்தில் தெருக்களில் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு உதவும் ‘இசாலா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் தன்னார்வலராக உள்ள ஜூலியா க்ரூமியர் தெரிவிக்கின்றார்.

பல பாலியல் தொழிலாளிகளுக்கு, ‘வேலை’ அடிப்படைத் தேவையாக உள்ளது. மேலும், இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரவேண்டும் என்று தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒரு வாடிக்கையாளருக்கு ஆணுறை இல்லாமல் வாய்வழி உடலுறவு கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது மெல் என்பவர் திகிலடைந்தார். பாலியல் தொழில் நடத்தப்படும் விடுதியைச் சுற்றி பாலியல் நோய்த்தொற்று (STI) பரவுவதை அறிந்தும், தனக்கு வேறு வழியில்லை என்று உணர்ந்தார் மெல்.

அந்தச் சூழ்நிலையில், நோயைப் பரப்புவது அல்லது பணம் சம்பாதிப்பது மட்டுமே அவருக்கு இருக்கும் வாய்ப்பு என்று மெல் உணர்ந்துள்ளார்.

அவருக்கு பணம் தேவைப்பட்டதால், 23 வயதில் பாலியல் தொழிலாகியாகி, எதிர்பார்த்ததை விட விரைவாக சம்பாதிக்க ஆரம்பித்தார்.

தனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்திருப்பதாக அவர் நினைத்தார். ஆனால், பாலியல் நோய்த்தொற்று (STI) தொடர்பான அச்சம்பவம் அவரை மீண்டும் யதார்த்தத்திற்கு கொண்டு வந்தது.

பாலியல் தொழிலாளிகளுக்கான உரிமைகள்

புதிய சட்டத்தின் கீழ், மெல் தனக்கு விருப்பமில்லாத எந்தவொரு வாடிக்கையாளரையும் அல்லது பாலியல் செயலையும் மறுக்கும் உரிமையைப் பெறுவார்.

அதாவது அந்தச் சூழ்நிலையை வேறுவிதமாகக் கையாண்டு அவரால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

புதிய சட்டத்தின் மூலம், ”பணியமர்த்தியவரிடம் ‘நீங்கள் இந்த விதிமுறைகளை மீறுகிறீர்கள், இப்படித்தான் நீங்கள் என்னை நடத்த வேண்டும்’ என்று கூற முடியும். சட்டப்படி நான் பாதுகாக்கப்பட்டிருப்பேன்.” என்கிறார் அவர்.

உலகிலேயே முதல்முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு

படக்குறிப்பு, விக்டோரியா பாலியல் தொழிலை ஒரு சமூக சேவையாக கருதுகிறார்

கோவிட் பெருந்தொற்று காலத்தில், பாலியல் தொழிலாளர்களுக்கு அரசின் ஆதரவு இல்லாததால், 2022-ஆம் ஆண்டில் பல மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்றன. அதன் விளைவாக, பெல்ஜியம் அரசு இந்த சட்டத்தை இயற்றியுள்ளது.

பெல்ஜியம் பாலியல் தொழிலாளர் சங்கத்தின் (UTSOPI) தலைவரான விக்டோரியா, பாலியல் தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்காக போராடிய முக்கிய நபர்களில் ஒருவர். அவர் 12 வருடங்கள் பாலியல் தொழிலாளியாகப் பணிபுரிந்துள்ளார்.

அதனால் இதனை தனது தனிப்பட்ட போராட்டமாக அவர் காண்கிறார்.

விக்டோரியா பாலியல் தொழிலை ஒரு சமூக சேவையாக பார்க்கிறார். பாலியல் தொழில் தான் செய்யும் செயல்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே என அவர் விளக்குகிறார்.

“இது அவர்கள் மீது கவனம் செலுத்துவதாகும். அவர்களின் கதைகளைக் கேட்பது, அவர்களுடன் கேக் சாப்பிடுவது, வால்ட்ஸ் இசைக்கு நடனமாடுவது, என அனைத்தையும் உள்ளடக்கியது. பாலியல் தொழிலின் முக்கிய அம்சம் தனிமையைப் போக்குவதாகும்”என்கிறார் அவர்

எதிர்கொள்ளும் சவால்கள்

ஆனால், 2022 க்கு முன்னர் விக்டோரியாவின் சட்டவிரோதமான பாலியல் தொழில் குறிப்பிடத்தக்க சவால்களை எழுப்பின.

அவர் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பணிபுரிந்தார். தனது வாடிக்கையாளர்களை விட்டுவிடவும் அவருக்கு வழியில்லை. மேலும் அவரைப் பணியமர்த்திய ஏஜென்சி அவரது வருவாயில் பாதியை குறைத்தது.

விக்டோரியா ஒரு வாடிக்கையாளரால் தான் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக கூறுகிறார்.

புகாரளிப்பதற்காக அவர் ஒரு காவல் நிலையத்திற்குச் சென்றபோது, அங்கு ஒரு பெண் அதிகாரி தன்னிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாகக் கூறுகின்றார்.

“பாலியல் தொழிலாளர்களை பாலியல் வன்புணர்வு செய்ய முடியாது” என்று அவர் என்னிடம் சொன்னார்.நான் பாலியல் தொழிலாளியாக இருப்பது என்னுடைய தவறு என்று அவர் என்னை உணரவைத்தார்” என, விக்டோரியா தெரிவித்தார்.

அழுது கொண்டே காவல் நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

நாங்கள் நேர்காணல் செய்த ஒவ்வொரு பாலியல் தொழிலாளியும் ஒரு கட்டத்தில், தங்கள் விருப்பத்திற்கு எதிராக ஏதாவது செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டதாக பகிர்ந்து கொண்டனர்.

இந்த அனுபவங்களின் அடிப்படையில், புதிய சட்டம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று விக்டோரியா உறுதியாக நம்புகிறார்.

“எந்த சட்டமும் இல்லாமல் ஒரு வேலை சட்டவிரோதமானதாக இருந்தால், உங்களுக்கு உதவ எந்த நெறிமுறைகளும் இருக்காது. ஆனால், இப்போது இச்சட்டம், எங்களைப் பாதுகாக்க உதவும்” என அவர் விளக்குகிறார்.

என்னென்ன பாதுகாப்புகள்?

புதிய சட்டத்தின் கீழ், பாலியல் தொழிலைக் கட்டுப்படுத்துபவர்கள் அல்லது முதலாளிகள் சட்டப்பூர்வமாக செயல்பட அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால், அவர்கள் கண்டிப்பாக விதிகளைப் பின்பற்ற வேண்டும். கடுமையான கிரிமினல் தண்டனை பெற்ற எவரும் பாலியல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்தத் தொழிலில் உள்ள பல முதலாளிகள் குற்றப் பதிவுகளைக் கொண்டிருப்பதால் பல நிறுவனங்கள் மூடப்படலாம் என்று நம்புகிறார். கிரிஸ் ரீக்மான்ஸ். தனது மனைவி அலெக்ஸாண்ட்ராவுடன் சேர்ந்து பாலியல் மசாஜ் பார்லர் நடத்தி வருகிறார் அவர்.

உலகிலேயே முதல்முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு

படக்குறிப்பு, மசாஜ் பார்லர்  நடத்தும் அலெக்ஸாண்ட்ராவும் கிரிஸும் தங்கள் ஊழியர்களை நன்றாக நடத்துவதாகத் தெரிவிக்கிறார்கள்

திங்கட்கிழமை காலையில், கிரிஸ் மற்றும் அலெக்ஸாண்ட்ராவின் மசாஜ் பார்லர் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது.

மசாஜ் படுக்கைகள், புதிய துண்டுகள், வெந்நீர் தொட்டிகள் மற்றும் ஒரு நீச்சல் குளம் ஆகியவற்றை கொண்ட அறைகளுடன் மிக நுணுக்கமாக மசாஜ் பார்லர் வடிவமைக்கப்பட்டிருந்தது.

கிரிஸும் அலெக்ஸாண்ட்ராவும் 15 பாலியல் தொழிலாளர்களைப் பணியமர்த்தியுள்ளார்கள். மேலும், அவர்களை மரியாதையுடன் நடத்துவதிலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், அவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுப்பதிலும் பெருமை கொள்கிறார்கள்.

அவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு நல்ல தொழில்முறை மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் உறுதியாக உள்ளனர்.

”மோசமான முதலாளிகளை அகற்றவும், நேர்மையான, பொறுப்பானவர்கள் இத்தொழிலில் இருக்கவும், புதிய சட்டம் உதவும்” என்று கிரிஸ் கூறுகிறார்.

”பாலியல் தொழிலாளிகளை முதலாளிகள் எவ்வளவு நன்றாக நடத்துகிறார்களோ, அந்த அளவுக்கு தொழிலும் சிறப்பாக இருக்கும் ” என்று அவர் நம்புகிறார்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த எரின் கில்பிரைட் இதேபோன்ற கருத்தைப் பகிர்ந்துகொள்கிறார். முதலாளிகள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், பாலியல் தொழிலாளர்கள் மீது அவர்களுக்கு இருக்கும் அதிகாரத்தை குறையலாம்.

உலகிலேயே முதல்முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு

படக்குறிப்பு, பாலியல் தொழிலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து சட்டம் இயற்றுவதன் மூலம் மட்டுமே பெண்களுக்கு உதவ முடியும் என்கிறார் மெல்

“பழமையான சுரண்டல் தொழில்”

பெரும்பாலான பெண்கள், பாலியல் தொழிலை விட்டு வெளியேறி சாதாரண வேலையைத் தேட விரும்புகிறார்கள். அவர்களுக்குத் தேவை, தொழிலாளர் உரிமைகள் அல்ல என்கிறார் பாலியல் தொழிலாளர்களுக்கு உதவும் தன்னார்வலரான ஜூலியா க்ரூமியர்

”உறையும் குளிரில் வெளியில் காத்திருந்து, அந்நியர்களுடன் உடலுறவு கொள்வது அவர்களுக்குத் தேவை இல்லை.” என்கிறார் அவர்

பெல்ஜியத்தின் புதிய சட்டத்தின் கீழ், பாலியல் தொழில் நடக்கும் ஒவ்வொரு அறையிலும் எச்சரிக்கை பட்டன் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த பட்டன் பாலியல் தொழிலாளியை அவர்கள் குறிப்பிடும் நபருடன் இணைக்கும். அவசரநிலை அல்லது அச்சுறுத்தல்களின் போது பாதுகாப்பு வழிமுறையை இச்சட்டம் வழங்குகிறது.

“பாலியல் தொழிலை உண்மையிலேயே பாதுகாப்பானதாக மாற்ற எந்த வழியும் இல்லை” என்று ஜூலியா க்ரூமியர் கூறுகிறார்.

“வேறு எந்த வேலையில் உங்களுக்கு இந்த அவசர பட்டன் தேவை? பாலியல் தொழில், உலகின் மிகப் பழமையான தொழில் இல்லை. உலகின் மிகப் பழமையான சுரண்டல் தொழில்” என்று அவர் குறிப்பிடுகின்றார்.

பாலியல் தொழிலை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பது பற்றிய விவாதம் உலகம் முழுவதும் இன்னும் பிரச்னையாக உள்ளது.

பாலியல் தொழிலை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதன் மூலம் மட்டுமே பெண்களுக்கு உதவ முடியும் என்கிறார் மெல்.

“பெல்ஜியம் இதுவரை முன்னேறியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனக்கு இப்போது பாதுகாப்பான எதிர்காலம் உள்ளது.” என்று அவர் கூறுகிறார்.

(தனிப்பட்ட பாதுகாப்புக்காக சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு