ராஜூ

படக்குறிப்பு, பழைய குடும்ப புகைப்படத்தில் ராஜூ தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் இருக்கிறார்.
  • எழுதியவர், சுசீலா சிங்
  • பதவி, பிபிசி நிருபர்

டெல்லியை ஒட்டியுள்ள காஸியாபாத்தில் ஷாஹீத் நகர் லேன் பகுதி அமைந்துள்ளது. அங்கிருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்துக்கு மக்கள் தொடர்ந்து வந்து சென்று கொண்டிருந்தனர்.

இரண்டாவது தளத்தில் தான் லீலாவதியின் வீடு அமைந்துள்ளது. அவரின் வீட்டிற்கு தான் மாறிமாறி மக்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர்.

‘முகம் என் ஜாடையை ஒத்திருக்கிறது. உடலில் இருந்த தழும்பும் இருக்கிறது. யாரேனும் தன் வேர்களை மறப்பார்களா என்ன?’… ‘அட, என்னைப் பார்த்தவுடன், நீ கொஞ்சம் குண்டாகிவிட்டாய் என்றான்’

அங்கு கூடியிருந்த பெரும்பாலான பெண்களிடம் லீலாவதி இப்படி பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

லீலாவதியிடம் அவரின் மகனைப் பற்றிக் கேட்டோம், `நாங்கள் பிபிசியில் இருந்து வந்திருக்கோம்’ என்று சொன்னபோது, “அவர் ரொம்ப களைப்பாக இருக்கிறார், நிறைய பேர் வந்து செல்கின்றனர்” என்றார்.

ஆனால், சிறிது நேரம் கழித்து அவர் தன் மகனான பீம் சிங்கை (ராஜூ) அழைத்தார். இருவரின் முகமும் அமைதியாக இருந்தாலும் கண்கள் பனித்தும், சோர்வாகவும் இருந்தது.

காலப்போக்கில் மனிதர்களின் நினைவில் சிறுவயது முகங்களும் தருணங்களும் மறந்து போகும் என்று கூறப்படுவது வழக்கம். ஆனால், ராஜூவிடம் நாங்கள் பேசிய போது, அவருடைய சிறுவயது நினைவுகள் இன்னும் அவரின் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பது போல் தோன்றியது.

இந்த நினைவுகள் தான் அவரை 31 ஆண்டுகளுக்குப் பிறகு தனது வீட்டிற்கு அழைத்து வந்து, குடும்பத்துடன் ஒன்றிணைத்துள்ளது.

அன்று என்ன நடந்தது?

சாஹிபாபாத்

படக்குறிப்பு, சாஹிபாபாத் காவல் நிலையத்தில் தனது மகன் கடத்தப்பட்டதாக புகார் அளித்ததாக ராஜூவின் தாய் கூறினார்.

ராஜூ தொலைந்த நாள் பற்றி பேசிய லீலாவதி, தானியங்களை சுத்தம் செய்வதில் மும்முரமாக இருந்ததால், பள்ளியில் இருந்து தன் குழந்தைகளை அழைத்து வர செல்லவில்லை என்று விவரித்தார்.

“அன்று ராஜூ தனது இரண்டு சகோதரிகளுடன் பள்ளிக்கு சென்றார். வீடு திரும்புகையில், ராஜூவும் அவனது சகோதரி ராஜோவும் மட்டும் வந்தனர். அவர்களுடன் மூத்த சகோதரி சந்தோஷ் வீடு திரும்பவில்லை.”

“ராஜோவுக்கும் ராஜூவுக்கும் குடை பிடிப்பதில் சண்டை வந்தது. ராஜோ, ராஜூவிடம், ‘மழையும் இல்லை, வெயிலும் இல்லை. எனவே, குடையைத் திறக்காதே’ என்று சொல்ல, இதனால் கோபமடைந்த ராஜூ, வீட்டின் கேட்டிற்கு வெளியே அமர்ந்து கொண்டார். வீட்டிற்குள் சென்ற ராஜோ  திரும்பி வந்து  பார்த்தபோது, சிலர் ராஜூவை ஆட்டோவில் ஏற்றிச் செல்வதைக் கண்டார்.” என லீலாவதி அன்றைய தினத்தை விவரித்தார்.

“என் மகள் என்னிடம் ஓடி வந்து, யாரோ ராஜூவை அழைத்துச் சென்றதாக சொன்னாள். என் தலையில் முக்காடு கூட அணியவில்லை. அப்படியே வெளியே ஓடினேன். என் மகள் ராஜோ என்ன செய்வதென தெரியாமல் பதற்றத்தில் நின்று கொண்டிருந்தாள். நான் அவளையும் இழந்து விடக் கூடாது என்பதற்காக அவளை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தேன். என் மகள் ராஜோவுக்கு அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை”

தன் மகன் கடத்தப்பட்டது பற்றி லீலாவதி தனது கணவர் துலாராமின் அலுவலகத்திற்கு போன் செய்து தகவல் தெரிவித்ததாக கூறுகிறார். இதையடுத்து, சாஹிபாபாத் காவல் நிலையத்தில் ராஜூ கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

ராஜூ ராஜஸ்தானை அடைந்தது எப்படி?

அன்றைய தினம் , அவரை ஒரு லாரியில் ஏற்றி ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றதாக ராஜூ கூறுகிறார்.

அவரை அழைத்துச் சென்றவர்கள் மணல் மட்டுமே இருக்கும் ஏதோ ஒரு பகுதியில் தன்னை விட்டுவிட்டதாகக் கூறுகிறார்.

“ஒரு குடிசையும் நிறைய செம்மறி ஆடுகளும் இருந்தன, அந்தக் குடும்பத்தில் நான்கு ஆண்களும் மூன்று பெண்களும் இருந்தனர்.” என்று விவரித்தார் ராஜூ.

அங்கு சென்றதும், செம்மறி ஆடுகளை மேய்க்குமாறு ராஜூவிடம் கூறப்பட்டது.

“எனக்கு பல முறை டீ கொடுக்கப்பட்டது, ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே எனக்கு ரொட்டி மற்றும் பருப்பு கிடைத்தது. அவர்கள் என் கால்களைக் கட்டி வைத்திருந்தார்கள்.” என்கிறார் ராஜூ.

​​”ஒருநாள் அங்கிருந்த ஒரு ஆட்டுக்கு உடம்பு சரியில்லை, அது எழுந்து நிற்க முடியாமல் இருந்தது, நான் அதை மெதுவாக அடித்தேன், ஆனால் ஆடு இறந்துவிட்டது. அதன் பிறகு, என்னை மோசமாக அடித்துத் துன்புறுத்தினார்கள், என் கை உடைந்தது. எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. என் இரண்டு பற்கள் உடைந்தன” என்று நினைவுக்கூர்ந்தார் ராஜூ.

இதனிடையே, காஸியாபாத்தில் உள்ள குடும்பத்தினர் தங்கள் மகன் ஒருநாள் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

“எங்கள் மகன் வருவான் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. எங்களுடைய இறப்புக்குப் பிறகு கூட வருவான் என்று நம்பினோம். ராஜூ திரும்பி வருவான் என்று என் கணவர் எப்போதும் கூறிக்கொண்டே இருப்பார்” என்கிறார் லீலாவதி.

வீடு திரும்பும் முயற்சி

எப்படியாவது வீடு திரும்ப வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்ததாக ராஜூ கூறுகிறார்.

ராஜூ கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்ட இடத்தில் இருந்து அவற்றை கொண்டு செல்ல சில லாரிகள் வருவதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்ததாகக் கூறுகிறார். டிரக் ஓட்டுநர்களிடம் உதவி கேட்க முற்பட்டார்.

ஆனால், பல முயற்சிகள் தோல்வியுற்றதாகவும், இப்படியே 31 ஆண்டுகள் கழிந்ததாகவும் கூறுகிறார் ராஜூ. இறுதியில் ஒரு சர்தார்ஜி தனக்கு உதவ முன்வந்ததாக அவர் கூறுகிறார்.

“அந்த மாமா என்னிடம் உன் கால்கள் ஏன் கட்டப்பட்டுள்ளது என்று கேட்டார். எனது முழு கதையையும் அவரிடம் கூறி, என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டேன். நான் உனக்கு உதவுகிறேன் என்று அவர் சொன்னார்” என்று ராஜூ விவரித்தார்.

” அவர் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்திருந்தார். அவர், செம்மறி ஆடுகளை லாரியில் ஏற்றிச் செல்லும் போது, என்னை தனது லாரிக்கு அருகில் வரச் சொன்னார். ”

“என்னை டெல்லிக்கு அழைத்து வந்தார். பல நாட்கள் என்னை தன்னுடன் வைத்திருந்தார். அதிகமாக வளர்ந்திருந்த என் தலைமுடியையும் தாடியையும் ட்ரிம் செய்தார். என் கிழிந்த உடைகளை மாற்றி, புதிய ஆடைகள் அணிய சொன்னார். என் வீடு எங்கே என்று கேட்டார்.”

“நான் அவரிடம் நொய்டா, காஸியாபாத் என்று சொன்னேன். அவர்கள் எனது முழுக் கதையையும் ஒரு காகிதத்தில் எழுதி, கொஞ்சம் பணம் கொடுத்து, என்னை ரயிலில் ஏற்றி விட்டுச் சென்றனர். நான் காஸியாபாத் வந்தடைந்தேன்.” என்று ராஜூ நடந்ததை விவரித்தார்.

“ரயிலில் இருந்து இறங்கிய பிறகும் நடந்து கொண்டே இருந்தேன். எப்படி வீட்டுக்கு செல்வது என்று தெரியவில்லை. என்னிடம் இருந்த பணத்தை எப்படி எண்ணுவது என்று தெரியவில்லை. ஒரு  டீ விற்பவரிடம் என் பணத்தை இழந்தேன். வெறும் வயிற்றில் நடந்து கொண்டே இருந்தேன், மக்களிடம் உதவி கேட்டேன்.  கோடா காவல்நிலையத்தை அடைந்தேன். இங்கே போலீஸ் எனக்கு உதவியது.” என்றார்.

மூன்று அங்க அடையாளங்களால் உறுதி செய்தது எப்படி?

ராஜூ பிபிசியிடம் தனக்கு நேர்ந்த துயரத்தை விவரிக்கிறார்

படக்குறிப்பு, ராஜூ பிபிசியிடம் தனக்கு நேர்ந்த துயரத்தை விவரித்தார்

ராஜூவை அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்க போலீசார் உள்ளூர் ஊடகங்களையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்தியதாக, காஸியாபாத் காவல் கண்காணிப்பாளர் ரஜ்னீஷ் உபாத்யாய் கூறுகிறார்.

செய்தித்தாள்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் ராஜூவின் கதை பகிரப்பட்டது.

இதனால், தங்கள் உறவினர்களைத் தேடிய பல குடும்பங்கள் போலீஸை அணுகினர்.

நாளிதழில் இதுபோன்ற செய்தி வெளியாகி உள்ளதாகவும், அந்த நபரை அடையாளம் காணச் செல்ல வேண்டும் என்றும், தனது சகோதரியின் மகன் தன்னிடம் தகவல் கூறியதாக லீலாவதி கூறுகிறார்.

“இதுபோன்ற செய்திகளை கேள்விப்பட்டு பலமுறை காவல் நிலையம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளேன். நான் மீண்டும் அங்கு செல்ல விரும்பவில்லை. ஆனால், எனது சகோதரியின் மகனின் வற்புறுத்தலின் பேரில் நான் காவல் நிலையம் சென்றேன். காவல் நிலையத்தில் ஏராளமான பெண்கள் இருந்தனர்.”

“ராஜூ என்னைப் பார்த்ததும் அம்மா என்று சொல்லிக் கட்டிக் கொண்டான். என்னைப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினான். போலீசார் என்னிடம் `நீங்கள் அவருடைய தாயா?’ என்று கேட்டனர். நான் அவர் உடலில் இருந்த அங்க அடையாளங்களை பார்க்க வேண்டும் என்று சொன்னேன். இல்லையெனில் நம்ப மாட்டேன் என்றேன்” என்று லீலாவதி கூறினார்.

லீலாவதி ராஜூவின் உடலில் மூன்று அங்க அடையாளங்களைச் சரிபார்த்தார். அவரது மார்பில் ஒரு மச்சம், அவரது நெற்றியில் ஒரு தழும்பு மற்றும் அவரது காதில் ஒரு துளையிட்டதற்கான குறி. தன்னுடன் எடுத்துச் சென்ற குடும்பப் புகைப்படத்தைக் காட்டினார்.

“நான் புகைப்படத்தைக் காண்பித்தவுடனே அவன் அக்காவை அடையாளம் கண்டுகொண்டான், சகோதரிகளின் பெயர்களைச் சொல்லி, சம்பவத்தன்று நடந்ததையெல்லாம் சொன்னான். அவரது நினைவாற்றல் மிகவும் நன்றாக உள்ளது. தெருவில் ஒரு கோவில் இருப்பதாகவும், அங்கு ஒரு பெண் கடை இருப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார்.” என்று லீலாவதி சிரித்துக்கொண்டே இதை சொன்னார்.

“குடும்பத்தினர் சொன்ன சம்பவங்களையும், ராஜூவின் கூற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். 1993ல் துலா ராம் கொடுத்த கடத்தல் புகாரையும் விசாரித்தோம். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிப்போம்,’’ என்று காவல்துறை கண்காணிப்பாளர் ரஜ்னீஷ் உபாத்யாய் கூறினார்.

மகனைப் பற்றிய தந்தையின் கனவு

 துலாராம்

படக்குறிப்பு, ராஜூவின் தந்தை துலாராம்

தந்தை துலாராம் ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது வீட்டின் கீழ் தளத்தில் மாவு ஆலை நடத்தி வருகிறார்.

“இப்போது எனது ஒரே கனவு, என் மகன் படிக்க வேண்டும் என்பதுதான். ஓரளவுக்கு படிக்கத் தெரிந்துவிட்டால், அவருக்கு திருமணம் செய்து வைப்போம். ராஜூவுக்கு எதுவுமே தெரியவில்லை, அவருக்கு தெரிந்ததெல்லாம் ரொட்டியும் பருப்பும் தான். ஏனெனில், அவருக்கு அங்கு அதுமட்டும் தான் கிடைத்ததுள்ளது” என்கிறார் துலாராம்.

“நான் என் மகனுக்கு வெண்ணெய் ஊட்டினேன், அது என்னவென்று கேட்கிறார். இன்னும் பலவீனமாகத்தான் இருக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக மாவு அரைக்கும் வேலையைச் செய்ய வைப்பேன். படிப்பு இல்லாமல் அவனுக்கு எப்படி வேலை கிடைக்கும்?” என்று துலாராம் வருந்துகிறார்.

இதற்கிடையில், தாய் லீலாவதி, கடந்த கால விஷயங்களைப் பற்றி இதற்கு மேல் பேச விரும்பவில்லை என்று கூறுகிறார்.

“ராஜூ அங்கு நடந்த விஷயங்களைச் சொல்லும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது, அவர் நம்முடன் இருந்திருந்தால், அவர் நல்ல இடத்தில் இருந்திருப்பார், அவரை இப்படிச் செய்தவர்களை நான் என்ன சொல்வது? ராஜூவை அன்றைய தினம் என் முன்னால் தொட்டிருந்தால், நான் அவர்களை விட்டு வைத்திருக்க மாட்டேன்”

“நான் ராஜஸ்தானில் இருந்த இடத்தில், என் அக்காவின் மகள் வயதில் ஒரு சிறுமி இருந்தார். அவர் தான் எனக்கு நிறைய உதவி செய்தார், இப்போது அவரை போலவே என் அக்கா மகளிடன் நான் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்கிறேன்.” என்கிறார் ராஜூ.

ராஜூ தான் வேலை செய்ய விரும்புவதாகவும், போலீஸ்காரர்களும் அவருக்கு உதவுவதாகச் சொன்னதாகவும் சொல்கிறார்.

ராஜூவிடம் அவரை கடத்தி சென்றவர்களை பற்றி கேட்ட போதும் “என்னை அவர்கள் கட்டி வைத்ததை நினைத்து கோபம் வருகிறது, ஆனால் கடவுள் பார்த்துக்கொள்வார்” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு