ஃபெஞ்சல் புயல்: புதுச்சேரியில் வரலாறு காணாத மழை; நிவாரண பணிகள் குறித்து பொதுமக்கள் கூறுவது என்ன?

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை பெய்துள்ளது.

படக்குறிப்பு, புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை பெய்துள்ளது
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ், புதுச்சேரியிலிருந்து

புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல், சூறாவளிக் காற்றுடன் நேற்று (நவ. 30) இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்ததாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அவ்வப்போது 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது.

“புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை நேற்று பெய்துள்ளது. இதற்கு முன்பு 2004ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி 21 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில் நேற்று 46 சென்டிமீட்டர் பெய்துள்ளது”, என, வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் வரலாறு காணாத மழை ஏற்பட்டுள்ள நிலையில், அரசின் நிவாரண பணிகளில் குறைகள் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

அதேசமயம், அனைத்து துறைகளும் களத்தில் இருப்பதாகவும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மழையால் 4 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், வெங்கடா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 551 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை நான்கு பேர் (கோவிந்த சாலை, லாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள்) உயிரிழந்துள்ளனர், அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பாகூர் பகுதியில் 15 குடிசை வீடுகளும், வில்லியனூர் மற்றும் பாகூர் தொகுதிகளில் தலா ஒரு கல் வீடும் சேதமடைந்துள்ளதாக, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தகவல் தெரிவித்துள்ளார்.

’35 ஆண்டுகளில் பார்க்காத மழை’

படக்குறிப்பு, “35 வருடத்தில் நான் பார்த்திராத மழை” என்று வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வாழும் நந்தினி கூறினார்.

35 ஆண்டுகளாக காமராஜர் பகுதியில் வசித்து வரும் நந்தினி மழை வெள்ளம் பற்றி கூறுகையில், “இதுவரை இங்கு இவ்வாறு மழைநீர் தேங்கி நின்றதில்லை. 35 ஆண்டுகளில் நான் பார்த்திராத மழை,” என்றார்.

“வீட்டிற்குள் மழை நீர் வந்துள்ளது. கட்டுமானத்திற்குத் தேவையான பொருட்களின் கடை வைத்துள்ளோம். அந்த கடைக்குள் நீர் மழை நீர் புகுந்தது. இந்த பொருட்களை இனி பயன்படுத்தவும் முடியாது. குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை” என அவர் கூறினார்.

தன் பாட்டி 60 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்துவருவதாக கூறும் நந்தினி, அவருடைய அனுபவத்திலும் இத்தகைய மழையை பார்த்ததில்லை என்றார்.

“மழை நீர் செல்வதற்கான முன்னேற்பாடுகள் பொதுப்பணித் துறையால் மேற்கொள்ளப்படவில்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.”

“இரவில் வீட்டில் எழுந்து பார்த்தால் முழங்கால் அளவு நீர் புகுந்துவிட்டது” என்கிறார் நந்தினி.

“நேற்று இரவிலிருந்து குடிக்கத் தண்ணீரும் இல்லை. தண்ணீர் வாங்கக் கடைகளும் இல்லை.” என்றார் அவர்.

9 தெருக்களில் மார்பு வரை தண்ணீர் இருந்தது என தண்டபாணி கூறினார்.

படக்குறிப்பு, 9 தெருக்களில் மார்பு வரை தண்ணீர் இருந்தது என தண்டபாணி கூறினார்

அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகவும் அங்குள்ள மக்கள் குறைகளை தெரிவித்தனர். மொபைலில் சார்ஜ் இல்லாததால், யாரையும் தொடர்புகொண்டு உதவி கோர முடியாத நிலையும் ஏற்பட்டதாக நந்தினி தெரிவித்தார்.

கழிவறையிலும் மழைநீர் புகுந்துள்ளதால், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“இப்போது மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது” என அவர் கூறினார்.

இப்படிப்பட்ட மழையை தான் எதிர்பார்க்கவில்லை என்பதால், தான் அதிர்ச்சியில் இருப்பதாக நந்தினி கூறினார்.

“அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை”

நேற்று பெய்த மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார், தமிழ்வாணி

படக்குறிப்பு, நேற்று பெய்த மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார், தமிழ்வாணி

30 வருடமாக சக்தி நகர் பகுதியில் வசித்து வரும் தண்டபாணி பிபிசி தமிழிடம் பேசுகையில், “9 தெருக்களில் மார்பு வரை தண்ணீர் இருந்தது. வீட்டில் இருந்த மின்சாதனங்கள் வெள்ள நீரில் மூழ்கிப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன” என கூறினார்.

“தேங்கியிருந்த மழை நீரால் அரசாங்கம் எங்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை நிலவியது. மழை நீர் வடியத் துவங்கியுள்ளதால், அரசாங்க அதிகாரிகள் உதவ வருவார்கள்,” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், “இறவிலிருந்து தூக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எதுவுமின்றி இருப்பதால் குடும்பத்துடன் தனது மகளின் வீட்டிற்குச் செல்வதாக,” அவர் கூறினார்.

கிருஷ்ணா நகரைச் சேர்ந்த நாராயணசாமி, “பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பால் கிடைக்கவில்லை. மழை நீர் வடிகால் வசதிகள் பெரும்பாலும் இல்லாததால் தேங்கியுள்ள நீர் வடிய ஒருநாள் தேவைப்படும்” என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன

படக்குறிப்பு, படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன

வெள்ளம் சூழப்பட்டுள்ள ரெயின்போ நகர் பகுதியில் வசிக்கும் தமிழ்வாணி பிபிசி தமிழிடம் பேசுகையில், “நேற்று தாக்கிய புயலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். படகு மூலம் வீட்டில் இருந்து மீட்டு நிவாரண முகாமிற்கு அழைத்துச் சென்றனர்,” எனக் கூறினார்.

“ஆனால் இதுவரை எங்களுக்கு நிவாரணங்கள் கொடுக்கப்படவில்லை,” என வருத்தமும் தெரிவித்தார்.

“எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. உறவினர் வீட்டில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பியபோது, வீட்டைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் வீட்டிற்குச் செல்ல முடியவில்லை,” என்று ரெயின்போ நகர் பகுதியில் வசிக்கும் சுப்புலக்ஷ்மி பிபிசி தமிழிடம் கூறினார்.

அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ?

படக்குறிப்பு, “35 வருடத்தில் நான் பார்த்திராத மழை” என்று வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வாழும் நந்தினி கூறினார்

”மாவட்ட நிர்வாகம் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க முகாம்கள் தயாராக உள்ளன. சுமார் 4,000 அரசு ஊழியர்கள் பணியில் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,” என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

“பழுதடைந்த மின் பகிர்மான வலையமைப்பை சரிசெய்து, வீடுகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்கும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. சொத்து மற்றும் பயிர் சேதத்தை அரசு மதிப்பிடும். மழை குறைந்த பிறகு மதிப்பீட்டு செயல்முறை தொடங்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

நேற்று புதுச்சேரி அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று சென்னை காரிசன் பட்டாலியன் இந்திய ராணுவப் படையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரி வந்தனர். பேரிடர் நிவாரண ராணுவ குழுவினர் புதுச்சேரியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப் பணிகளின் நிலை என்ன?

  மீட்புப் பணியில் 4 படகுகள்

படக்குறிப்பு, மீட்புப் பணியில் 4 படகுகள்

இன்று (1.12.2024) புதுச்சேரியின் லாஸ் பேட்டை, கிருஷ்ணா நகர் பிரதான சாலை உட்பட நான்கு சாலைகள் ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் மூழ்கியிருந்தன.

கிருஷ்ணா நகர் சாலையில் ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு படகு மூலம் வீடுகளில் சிக்கிய மக்களை மீட்டு வருகின்றனர். மூன்றுக்கும் மேற்பட்ட படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ அதிகாரி ஜெயகுமார் பிபிசி தமிழிடம் மீட்புப் பணிகள் பற்றி கூறுகையில், “புயலின் தாக்கத்தால் காலை அதிக மழை நீர் தேங்கி இருந்தது, ஆனால் தற்போது குறைந்துள்ளது. மக்கள் தண்ணீர் மற்றும் பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இன்றி சிரமத்தில் இருந்தனர்.”

“தரைதள வீடுகளில் இருந்த வயதானவர்கள் செல்ல வழியின்றி திகைத்திருந்தனர். நாங்கள் அவர்களுக்கு உதவி செய்து, துணை ஆணையர் அலுவலகத்தில் அழைத்துச் சென்றோம். அங்கு அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் அங்கு செய்து கொடுக்கப்படுகின்றன. தற்போது வரை 4 படகுகள் மூலம் 50 முதல் 60 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர்,” என அவர் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு