‘இங்கு நிறைய இனவெறி உள்ளது’ – இவர்கள் பிரான்ஸில் பிறந்து ஆப்ரிக்காவில் எதிர்காலத்தைத் தேடுவது ஏன்?

இனவெறி காரணமாக பிரான்ஸில் இருந்து வெளியேறும் கறுப்பின மக்கள்

படக்குறிப்பு, செனகலில் தனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று கருதுவதால் மென்கா கோமிஸ், பிரான்ஸில் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை விட்டு செனகல் செல்ல முடிவு செய்தார்.
  • எழுதியவர், நூர் அபிடா, நதாலி ஜிமினெஸ் & கர்ட்னி பெம்பிரிட்ஜ்
  • பதவி, பிபிசி ஆப்ரிக்கா ஐ

மென்கா கோமிஸ் பிரான்ஸில் பிறந்தவர். ஆனால், தனது பெற்றோர் பிறந்த செனகலில் தான் தன் எதிர்காலம் உள்ளது என்று அவர் முடிவு செய்தார்.

39 வயதான கோமிஸ், இனவெறி, பாகுபாடு மற்றும் தேசியவாதத்தின் அதிகரிப்பை காரணம் காட்டி பிரான்ஸை விட்டு வெளியேறும் பல பிரெஞ்சு ஆப்ரிக்கர்களில் ஒருவர்.

“அமைதியான வெளியேற்றம்” என்று குறிப்பிடப்படும் இந்த நிகழ்வை பிபிசி ஆப்ரிக்கா ஐ (BBC Africa Eye) ஆராய்ந்தது. இது, கோமிஸ் போன்றவர்கள் ஏன் பிரான்ஸ் வாழ்க்கையில் ஏமாற்றமடைகிறார்கள் என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்டது.

கோமிஸ் ஒரு சிறிய பயண நிறுவனத்தை அமைத்திருக்கிறார். இந்நிறுவனம், ஆப்ரிக்காவுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தங்கள் மூதாதையர் இருந்த இடத்துடன் மீண்டும் இணைய விரும்புவோரை இலக்காகக் கொண்டு செயல்படும் அந்த நிறுவனத்தின் ஒரு அலுவலகம் இப்போது செனகலில் உள்ளது.

“நான் பிரான்ஸில் பிறந்தேன். அங்கேயே வளர்ந்தேன். சில யதார்த்தங்களை நாங்கள் அறிவோம். இங்கு நிறைய இனவெறி உள்ளது. எனக்கு ஆறு வயதாக இருந்தபோது பள்ளியில் என்னை ‘என்’ (கருப்பினத்தவர்களை இழிவுபடுத்தும் நோக்கில் பயன்படுத்தும் சொல்) வார்த்தையால் அழைத்தார்கள்,” என்று தெற்கு துறைமுக நகரமான மார்சேயில் பள்ளிக்குச் சென்ற கோமிஸ், பிபிசி உலக சேவையிடம் தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“நான் பிரெஞ்சுக்காரனாக இருக்கலாம். ஆனால், நான் வேறு பகுதியிலிருந்தும் கூட வந்திருக்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

கோமிஸின் தாய் அவர் குழந்தையாக இருந்தபோது பிரான்ஸுக்கு குடிபெயர்ந்தார். குடும்பம் மற்றும் நண்பர்களை விட்டுவிட்டு செனகலுக்கு அவர் செல்வதை அவருடைய அம்மாவால் புரிந்து கொள்ள இயலவில்லை.

“ஆப்ரிக்க கனவுக்காக மட்டும் நான் அங்கே செல்லவில்லை,” என்று விளக்கும் அவர், தனது பெற்றோரின் தாய்நாட்டிற்கான தனது பொறுப்பு மற்றும் நல்ல வாய்ப்பு ஆகியவற்றின் கலவையாக இந்த முடிவு இருக்கிறது என்று கூறுகிறார்.

“தங்க வேட்டைக்காலத்தின் போது இருந்த அமெரிக்காவைப் போல இப்போது ஆப்ரிக்கா உள்ளது. ஆப்ரிக்கா, எதிர்காலத்தின் கண்டம் என்று நான் நினைக்கிறேன். கட்டமைப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ள இடம் அது.”

செனகல் முஸ்லிம்கள் பிரதானமாக வாழும் நாடு. ஒரு காலத்தில் அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தின் முக்கிய மையமாக இருந்த முன்னாள் பிரெஞ்சு காலனியான செனகலுக்கும், பிரான்ஸுக்கும் இடையிலான உறவுகள் நீண்டது மற்றும் சிக்கலானது.

கோமிஸின் கனவு இப்படியாக இருக்க, செனகலில் இருந்து உயிரைப் பணயம் வைத்து கடல் வழியே ஐரோப்பாவை அடைய பல ஆபத்தான பயணங்களை ஆப்ரிக்கர்கள் மேற்கொள்கின்றனர். அவர்களில் சிலரை ‘பிபிசி ஆப்ரிக்கா ஐ’யின் ஆய்வுக்குழு சந்தித்தது. அவர்களில் பலர் பிரான்ஸை சென்றடைகின்றனர்.

எத்தனை நபர்கள் இவ்வாறு ஆப்ரிக்காவுக்கு திரும்புகின்றனர்?

கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான மக்கள் புகலிடம் கோரியதாக, அகதிகள் மற்றும் நாடற்ற நபர்களின் பாதுகாப்புக்கான பிரெஞ்சு அலுவலகம் (OFPRA) தெரிவித்தது.

மொத்தத்தில் சுமார் 1,42,500 பேர் புகலிடம் கோரி விண்ணப்பித்தனர். இதில் மூன்றில் ஒரு பங்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இனம், மதம் மற்றும் சமயம் பற்றிய தரவுகளை சேகரிப்பதை பிரெஞ்சு சட்டம் தடைசெய்வதால், எத்தனை பேர் ஆப்ரிக்காவிற்கு திரும்பிச்செல்வதை தேர்வு செய்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், முஸ்லிம் பின்னணியில் இருந்துவரும் உயர்கல்வி கற்ற பிரெஞ்சு குடிமக்கள், பெரும்பாலும் புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் பலர் ஆப்ரிக்காவுக்கு திரும்பிச்செல்கின்றனர் என்றும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பிரான்ஸில் குடியேற்றம் தொடர்பான அணுகுமுறைகள் கடுமையாகி வருவதாகவும், வலதுசாரி கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் நாங்கள் சந்தித்தவர்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் பதவியேற்ற பிரதமர் மிஷேல் பார்னியர் மற்றும் உள்துறை அமைச்சர் புருனோ ரிடெல்லோ, உள்நாட்டு மற்றும் ஐரோப்பிய மட்டத்தில், சட்டத்தில் மாற்றங்களை முன்வைப்பதன் மூலம் சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை ஒடுக்குவதாக உறுதியளித்துள்ளனர்.

இனவெறி காரணமாக பிரான்ஸில் இருந்து வெளியேறும் கறுப்பின மக்கள்

படக்குறிப்பு, மென்கா கோமிஸுடன் இணைந்து தொழில் முனையும் சலாமதா கோந்தே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செனகல் சென்றார்

பாதுகாப்பின்மையை உணரும் மக்கள்

ஃபான்டா குய்ரஸி தனது வாழ்நாள் முழுவதும் பிரான்ஸில் கழித்தவர். பாரிஸின் புறநகர் பகுதியான விலேமோம்பில் என்ற இடத்தில் தனது சொந்த நர்சிங் சேவை மையத்தை நடத்தி வருகிறார்.

ஆனால், இப்போது அவர் தனது தாயின் பிறந்த நாடான செனகலுக்கு திரும்பிச்செல்ல திட்டமிட்டுள்ளார். “துரதிர்ஷ்டவசமாக கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் பிரான்ஸில் பாதுகாப்பாக இல்லை என்பதை உணர்கிறோம். வெளியே சொல்வதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுதான் உண்மை” என்று 34 வயதான ஃபான்டா பிபிசியிடம் கூறினார்.

“தனியாக மகனை வளர்க்கும் தாய் நான். 15 வயது பதின்பருவ மகனை வைத்திருப்பதால் எப்போதும் ஒரு சிறிய கவலை மனதில் இருக்கும்.”

சமீபத்தில் தன்னுடைய நண்பர்களுடன் சாலையில் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது காவல்துறையினரின் சோதனைக்கு அவருடைய மகன் ஆளாக்கப்பட்டது ஃபான்டாவின் பயத்தை அதிகரித்துள்ளது.

“ஒரு தாய்க்கு இது மிகவும் வேதனையளிக்கக் கூடியது. நாம் டிவியில் நடப்பதைப் பார்க்கிறோம். மற்றவர்களுக்கும் நடப்பதை பார்க்கிறோம்.”

கடந்த ஆண்டு ஜூன் மாதம், அல்ஜீரிய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயதான நஹெல் மர்ஸூக் என்ற பிரான்ஸ் குடிமகன் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததை அடுத்து பிரான்ஸ் முழுவதும் கலவரங்கள் வெடித்தன.

இந்த வழக்கு இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தக்கலவரம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் தொடர்பாக, பிரான்ஸில் பல ஆண்டுகளாக கனன்று கொண்டிருந்த கோபத்தை அது பிரதிபலித்தது.

இனவெறி காரணமாக பிரான்ஸில் இருந்து வெளியேறும் கறுப்பின மக்கள்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, பிரான்ஸில் கடந்த ஆண்டு அல்ஜீரிய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீசாரால் சுடப்பட்டதையடுத்து, அங்கு கலவரம் வெடித்தது

இனப்பாகுபாட்டால் பாதிக்கும் மக்கள்

பிரான்ஸில் கறுப்பின மக்களிடம் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், கேள்விக்கு பதிலளித்தவர்களில் 91% பேர் இனப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதைக் காட்டுகிறது.

கலவரங்களை அடுத்து, “தன் சட்ட அமலாக்க முகமைகள் மூலம், இனப் பாகுபாடு பிரச்னைகளை” தீர்க்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் (OHCHR) பிரான்ஸை கேட்டுக்கொண்டார்.

பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் இந்த விமர்சனத்தை நிராகரித்தது. “பிரான்ஸில் காவல்துறை இனவெறி அல்லது பாகுபாடு போன்றவற்றை பின்பற்றுகிறது என்ற குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. பிரான்ஸும் அதன் காவல்துறையும் இனவெறி மற்றும் அனைத்து வகையான பாகுபாடுகளுக்கும் எதிராக உறுதியுடன் போராடுகின்றன,” என்று அமைச்சகம் தெரிவித்தது.

இருப்பினும், கடந்த ஆண்டு இனவெறி குற்றங்கள் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளன. இனம், மதம் அல்லது சமய அடிப்படையில் 15,000க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பிரெஞ்சு உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இனவெறி காரணமாக பிரான்ஸில் இருந்து வெளியேறும் கறுப்பின மக்கள்

படக்குறிப்பு, மதச்சார்பற்ற பிரான்ஸில் ஹிஜாப் அணிவது மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது

காங்கோ வம்சாவளியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையான ஆட்ரி மோன்செம்பாவுக்கு, இத்தகைய சமூக மாற்றங்கள் “மிகவும் கவலையளிக்கின்றன”.

பாரிஸின் புறநகரில் பல கலாசார பின்னணியில் இருந்து வந்த மக்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுடன் அவரின் தினசரி பயணத்தில் ஒரு நாள் காலை நாங்கள் அவருடன் இணைந்தோம்.

தனது இளம் மகளுடன் அவர் பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்கிறார். ஆனால் தான் பணிபுரியும் பள்ளியை நெருங்கியதும் தன் தலையை மூடியிருந்த துணியை (ஹிஜாப்) மெதுவாக அகற்றி தனது கோட்டிற்கு உள்ளே தள்ளுகிறார்.

மதச்சார்பற்ற பிரான்ஸில் ஹிஜாப் அணிவது மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து அரசு பள்ளிகளிலும் அது தடை செய்யப்பட்டது. மோன்செம்பா பிரான்ஸை விட்டு வெளியேறி செனகலுக்கு செல்ல விரும்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.

“பிரான்ஸ் எனக்கு ஏற்ற இடம் அல்ல என்று நான் கூறவில்லை. என் மதம் மற்றும் என் மதிப்புகளை மதிக்கும் சூழலில் நான் வாழ விரும்புகிறேன் . என் ஹிஜாபை கழற்றாமல் வேலைக்குச் செல்ல விரும்புகிறேன்,” என்கிறார் 35 வயதான அவர்.

பிரான்ஸை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் குடியேறிய 1,000க்கும் மேற்பட்ட பிரெஞ்சு முஸ்லிம்களிடம் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு, ’இது வளர்ந்து வரும் போக்கு’ என்பதைக் காட்டுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு நிகழ்ந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்பு உச்சக்கட்டத்தை அடைந்தது. அந்தத்தாக்குதலில் இஸ்லாமிய ஆயுதமேந்தியவர்கள் பாரீஸின் பல்வேறு பகுதிகளில் 130 பேரைக் கொன்றனர்.

மதச்சார்பின்மை மற்றும் வேலை பாகுபாடு பற்றிய தார்மீக பீதிகள் ’இந்த அமைதியான வெளியேற்றத்தின் மையமாக உள்ளன’, என்று ’பிரான்ஸ், யூ லவ் இட் பட் யூ லீவ் இட்’ என்ற அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான ஆலிவியர் எஸ்டீவ்ஸ் பிபிசியிடம் கூறினார்.

“பிரான்ஸில் இருந்து நிகழும் இந்த வெளியேற்றம், உயர் பணித்திறன் மற்றும் கல்வித்தகுதி கொண்டோர் வாய்ப்புக்காக வேறொரு நாட்டுக்கு இடம்பெயர்வதை குறிக்கிறது. ஏனென்றால், முக்கியமாக உயர் கல்வி கற்ற பிரெஞ்சு முஸ்லிம்களே வெளியேற முடிவு செய்கிறார்கள்,” என்று அவர் கூறுகிறார்.

மாறுபட்ட கருத்தைக் கொண்ட குடும்ப உறுப்பினர்கள்

34 வயதான ஃபத்தெளமாதா செல்லாவின் பெற்றோர் செனகலை சேர்ந்தவர்கள்.

“என் தந்தை ஆப்ரிக்காவை விட்டு இங்கு வந்தபோது, ஆப்ரிக்காவில் உள்ள தன் குடும்பத்திற்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைத் தர விரும்பினார். ‘நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்’ என்று அவர் எப்போதும் எங்களிடம் கூறுவார்,” என்று அவர் தெரிவித்தார்.

சுற்றுலா மென்பொருள் மேம்பாட்டாளரான அவர், அடுத்த மாதம் செனகலுக்கு செல்லவிருக்கிறார். மேற்கு ஆப்ரிக்காவில் வணிகத்தை நிறுவுவதன் மூலம் தனது பாரம்பரியத்தை தான் மறந்துவிடவில்லை என்பதைக் காட்ட விரும்புகிறார்.

ஆயினும் அவரைப்போலவே பாரிஸில் பிறந்த அவரது சகோதரர் அப்துலுக்கு இந்த முடிவு சரி என்று தோன்றவில்லை.

“என் சகோதரி குறித்துக் கவலையாக இருக்கிறது. எல்லாம் சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆனால், மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற அவசியத்தை நான் உணரவில்லை,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

“என் கலாசாரமும் என் குடும்பமும் இங்கே உள்ளன. ஆப்ரிக்கா எங்கள் முன்னோர்களின் கண்டம். அது உண்மையில் எங்களுடையது அல்ல. ஏனென்றால் நாங்கள் அங்கு இருந்ததே இல்லை.”

பிளாக் பாந்தர் திரைப்படங்கள் மற்றும் காமிக் புத்தகங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய சமூகத்தை குறிப்பிடும்விதமாக அவர் “எந்தவொரு மூதாதைய கலாசாரத்தையோ அல்லது கற்பனையான வகாண்டாவையோ பார்க்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை,” என்று கூறினார்.

இனவெறி காரணமாக பிரான்ஸில் இருந்து வெளியேறும் கறுப்பின மக்கள்

படக்குறிப்பு, தன் சகோதரி ஃபத்தெளமாதாவின் செனகலுக்கு செல்லும் முடிவைப் பற்றி அப்துல் செல்லா கவலைப்படுகிறார்.

செனகலில் பிரெஞ்ச் ஆப்ரிக்கர்கள் சந்திக்கும் பிரச்னை என்ன?

கோமிஸுடன் சேர்ந்து பயண நிறுவனத்தை நிறுவிய சலாமதா கோந்தேவை, டாக்கரில் நாங்கள் சந்தித்தோம். செனகலில் குடியேற விரும்பும் அவரைப் போன்ற பிரெஞ்சு ஆப்ரிக்கர்களுக்கு அங்கே என்ன காத்திருக்கிறது என்பதைக் கண்டறிவதே எங்கள் நோக்கம்.

தலைநகர் பாரிஸில் வங்கிப் பணியில் அதிகம் சம்பாதித்து வந்த அவர் அங்கிருந்து செனகலுக்கு சென்றார்.

“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் செனகலுக்கு வந்தபோது, மக்கள் என்னை ‘பிரெஞ்சுக்காரி’ என்று அழைத்ததைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்,” என்று 35 வயதான சலாமதா கோந்தே கூறினார்.

”ஆமாம், உண்மையில் நான் பிரான்ஸில் பிறந்தேன். ஆனால் நான் உங்களைப் போன்ற செனகல் நாட்டுக்காரர்தான் என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டேன். அடடே, நான் பிரான்ஸில் நிராகரிக்கப்பட்டேன், இப்போது இங்கேயும் நிராகரிக்கப்படுகிறேன் என்ற உணர்வே முதலில் ஏற்பட்டது.”

ஆனால் அவரது அறிவுரை என்னவென்றால் “நீங்கள் பணிவுடன் இங்கு வர வேண்டும். அதைத்தான் நான் செய்தேன்.”

ஒரு தொழிலதிபராக தனது அனுபவத்தைப் பற்றிக்குறிப்பிட்ட அவர் அது “மிகவும் கடினமாக இருந்தது” என்கிறார்.

“செனகல் ஆண்கள், பெண்களை வெறுப்பவர்கள் என்று நான் எல்லோரிடமும் அடிக்கடி கூறுவேன். அதை அவர்கள் ஏற்கமாட்டார்கள் என்றாலும் அதுதான் உண்மை என்று நான் நினைக்கிறேன்.”

“ஒரு பெண் ஒரு நிறுவனத்தை தலைமையேற்று நடத்த முடியும் என்பதை ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு சிரமமாக உள்ளது, சிலருக்கு உத்தரவிடும் வேலையை ஒரு பெண் செய்வதை அவர்கள் விரும்புவதில்லை. தாமதமாக வரும் ஓட்டுநரிடம் ”நீங்கள் தாமதமாக வருவது சரியல்ல,” என்று சொன்னால் அது அவர்களுக்கு பிடிப்பதில்லை.”

“பெண்களாகிய நாம் இன்னும் கொஞ்சம் நிரூபிக்க வேண்டியுள்ளது என்று நான் நினைக்கிறேன்.”

இருப்பினும் கோமிஸ் தனது செனகல் குடியுரிமைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

பயண நிறுவனம் நன்றாக நடக்கிறது. செனகலுக்கான டேட்டிங் செயலியை உருவாக்கும் தனது அடுத்த முயற்சிக்கான வேலை ஏற்கனவே நடந்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு