காஷ் படேல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த இவரை எஃப்பிஐ இயக்குநராக டிரம்ப் நியமிக்க விரும்புவது ஏன்?
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ்யப் என்கிற காஷ் படேலை அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்பிஐ-யின் இயக்குனராக நியமிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்திலுள்ள தனது அதிகாரப்பூர்வ கணக்கில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
மேலும் இது பற்றி டிரம்ப், “காஷ்யப் படேல் எஃப்பிஐ- யின் அடுத்த இயக்குநராக நியமிக்கப்படுவார் என்பதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன். காஷ் ஒரு சிறந்த வழக்கறிஞர், புலனாய்வாளர் மற்றும் ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ (America First) என்பதை முக்கியமாக கருதும் ஒரு போராளி. அவர் தனது வாழ்க்கை முழுவதும் ஊழலை வெளிக்கொண்டுவதற்கும், நீதி மற்றும் அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்காகவும் அயராது பாடுபட்டுள்ளார்”, என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு, அரசாங்கத்தின் திறன் சார்ந்த துறையில் (DOGE) ஈலோன் மஸ்க்குடன் இணைந்து செயல்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியை டொனால்ட் டிரம்ப் நியமித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் வ்ரே என்பவரை எஃப்பிஐ-யின் இயக்குனராக 10 ஆண்டு காலத்திற்கு டிரம்ப் நியமித்தார்.
ஆனால், டிரம்பின் ரகசிய பதிவுகளை கையாள்வது குறித்த அமெரிக்க அரசு விசாரணைக்கு எஃப்பிஐ உதவியது. அப்போது கிறிஸ்டோபர் வ்ரேவுக்கு டிரம்ப் ஆதரவு வழங்குவது நின்றது. தற்போது அவருக்கு பதிலாக காஷ் படேல் நியமனம் செய்யப்படவிருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து எஃப்பிஐ அமைப்பு, “ஒவ்வொரு நாளும், அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாக்க எஃப்பிஐ ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இயக்குநர் வ்ரேயின் கவனம், எஃப்பிஐ-யின் ஊழியர்கள் மீது இருக்கும். அங்கு பணிபுரியும் நபர்கள் மீதும், அவர்கள் பணிபுரியும் நபர்களுக்காகவும்”, என்று தெரிவித்துள்ளது.
காஷ் படேல் பணியமர்த்தப்பட, தற்போதைய எஃப்பிஐ இயக்குனர் கிறிஸ்டோபர் வ்ரே ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இதுகுறித்து, டிரம்ப் தனது பதிவில் இதுகுறித்து எதையும் குறிப்பிடவில்லை.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பு அரசாங்கத்திற்கான அதிகாரப்பூர்வ நியமனங்களை அவர் செய்யத் தொடங்கினார். காஷ் படேலின் நியமனமும் இதில் ஒன்றாகும்.
அமெரிக்காவில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுமார் 4,000 அரசியல் நியமனங்களை செய்யவேண்டியிருக்கும், இதற்கு பல மாதங்கள் வரை ஆகும்.
வரும் 2025 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 20 ஆம் தேதி அன்று, டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்பார், அதன் பிறகு அவர் அதிகாரப்பூர்வமாக அதிபருக்கான அதிகாரங்களைப் பெற முடியும்.
டிரம்ப், தனது முதல் அதிகாரப்பூர்வ நியமானமாக சூசன் சம்மரால் வைல்ஸ்-ஐ தனது தலைமை அதிகாரியாக நியமிக்கவிருப்பதாக தெரிவித்தார். அதிபர் தேர்தலில் டிரம்பின் பிரசாரத்தின் இணைத்தலைவாராக சூசன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமெரிக்க எல்லைகளுக்கான பொறுப்புக்கு டாம் ஹோமனையும், ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதராக ஆலிஸ் ஸ்டெபானிக்கையும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக லீ செல்டினையும் நியமிக்க இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
கடந்த மாதம் தேசிய புலனாய்வு இயக்குநராக துள்சி கப்பார்டையும் டிரம்ப் தனது குழுவில் சேர்த்தார்.
யார் இந்த காஷ் படேல்?
44 வயதான காஷ் படேல், டொனால்ட் டிரம்பின் மிகவும் விசுவாசமான நபர்களுள் ஒருவராக கருதப்படுகிறார்.
டிரம்பின் வெற்றிக்குப் பிறகு, அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏவின் தலைவராக காஷ் படேல் நியமிக்கப்படலாம் என்று ஊகங்கள் இருந்தன. ஆனால், ஜான் ராட்க்ளிஃப் என்பவரை சிஐஏ அமைப்பின் தலைவராக நியமிக்கவிருப்பதாக டிரம்ப் அறிவித்தார். தற்போது காஷ் படேலை எஃப்பிஐ-யின் இயக்குநராக்கப் போவதாக அவர் முடிவு செய்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டோபர் மில்லரின் தலைமை அதிகாரியாக காஷ் படேல் பணியாற்றியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
அதற்கு முன்பு, காஷ் படேல் அமெரிக்க அதிபரின் துணை உதவியாளராகவும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பயங்கரவாத எதிர்ப்பு துறையின் மூத்த இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
டிரம்ப் ஆட்சிக் காலத்தில், பல்வேறு முக்கிய நடவடிக்கைகளில் காஷ் படேல் முக்கியமான பங்கு வகித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
காஷ் படேல் பதவியில் இருக்கும்போதுதான், ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல்-பாக்தாதி, அல்-காய்தாவின் காசிம் அல்-ரிமி ஆகியோர் கொல்லப்பட்டனர் மற்றும் அமெரிக்க பணயக்கைதிகள் பாதுகாப்பாக நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநரின் முதன்மை துணை அதிகாரியாகவும் காஷ் படேல் இருந்துள்ளார். இந்த பதவி வகித்தபோது, அவர் 17 உளவு முகமைகளின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்து, அதை பற்றி அதிபருக்கு தினசரி தகவல்களை தெரிவித்து வந்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் சேருவதற்கு முன்பு, புலனாய்வுக்கான நிரந்தர தேர்வுக் குழுவின் மூத்த ஆலோசகராக காஷ் படேல் பணியாற்றினார். இந்த பணியின்போதுதான், 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது செல்வாக்கு செலுத்தியதாகக் கூறப்படும் ரஷ்ய பிரசாரத்தின் விசாரணைக்கு தலைமை தாங்கினார்.
இதைத்தவிர காஷ் படேல் உளவுத்துறை அமைப்பு மற்றும் அமெரிக்க சிறப்பு நடவடிக்கை படைகளுக்கான முக்கியமான திட்டங்களையும் மேற்பார்வையிட்டுள்ளார்.
உலகெங்கிலும் உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புகளுக்காக பில்லியன் கணக்கான டாலர்களுக்கு நிதியளிக்கும் சட்டங்களை உருவாக்கவும் அவர் உதவியுள்ளார்.
புலனாய்வுக்கான நிரந்தர தேர்வுக் குழுவில் பணியாற்றுவதற்கு முன்பு, காஷ் படேல் அமெரிக்க நீதித்துறையில் பயங்கரவாதம் குறித்த வழக்குகளைக் கையாளும் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் ஒரு வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், அப்போது, கொலை, போதைப்பொருள் சார்ந்த குற்றங்கள் முதல் சிக்கலான நிதிக் குற்றங்கள் வரை பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார்.
காஷ் படேலின் வாழ்க்கை
காஷ் படேல், இந்திய குடியேறியின் மகன். அவர் ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்ததாகவும், அவரது தந்தை அமெரிக்க விமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்ததாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
காஷ் படேல் நியூயார்க் நகரை பூர்வீகமாக கொண்டவர் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அவர் ரிச்மண்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இதற்குப் பிறகு, அவர் நியூயார்க்கிற்கே திரும்பி சென்று அங்கு சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார்.
பிரிட்டனில் உள்ள லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் சர்வதேச சட்டத்தில் சான்றிதழும் பெற்றுள்ளார். அவருக்கு ஐஸ் ஹாக்கி விளையாடுவது மிகவும் பிடிக்கும்.
காஷ் படேல், `திரிசூல்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2023 ஆம் ஆண்டில், ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் டிரம்பிற்கு ஆலோசனை வழங்க இந்நிறுவனம் சுமார் ஒரு கோடி ரூபாயை கட்டணமாகப் பெற்றது.
டிரம்ப் நிறுவிய ‘அமெரிக்காவை பாதுகாப்போம்’ (Save America) திட்டத்திற்கு காஷ் படேலின் திரிசூல் நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது. இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்நிறுவனம் 1 கோடி ரூபாய்க்கு மேல் கட்டணமாக பெற்றுள்ளது.
தான் அமெரிக்காவின் குயின்ஸ் மற்றும் லாங் ஐலாண்ட் பகுதிகளில் வளர்ந்ததாக ‘கவர்ன்மென்ட் கேங்ஸ்டர்’ (Government Gangster) என்ற தனது புத்தகத்தில், காஷ் படேல் குறிப்பிட்டுள்ளார்.
தனது பெற்றோர்கள் செல்வந்தர்கள் அல்ல என்றும் அவர்கள் இந்தியாவில் இருந்து இங்கு குடியேறியவர்கள் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
“பல பெற்றோர்களைப் போலவே, எனது தாயும் தந்தையும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதிலும், எனது மதம் மற்றும் பாரம்பரியத்தைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் என்னை ஊக்குவித்தனர். அதனால்தான் எனக்கு இந்தியாவுடன் மிகவும் ஆழமான உறவு உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
காஷ் அறக்கட்டளை
காஷ் படேல் காஷ் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ராணுவ வீரர்களுக்கும், சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் நிதியளிக்கின்றது.
இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் அமெரிக்க குழந்தைகளுக்கு உதவித்தொகை மற்றும் அரசாங்கத்தில் நடக்கும் தவறுகளை வெளிக்கொண்டு வருபவர்களுக்கு உதவ, பணத்தை செலவிடுகிறது.
இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவியது என்று காஷ் படேல் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கக் கோரி டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.
தேர்தல் முடிவுகள் சான்றளிக்கப்பட்ட செனட் அவையையும் அக்கூட்டம் அடைந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.