ஃபெஞ்சல் புயல்: தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன?

காணொளிக் குறிப்பு, ஃபெஞ்சல் புயல்: தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன?

ஃபெஞ்சல் புயல்: தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன?

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வலுவிழக்கும் என முதலில் கணிக்கப்பட்ட நிலையில், கணிப்பை தாண்டி உருவெடுத்த ஃபெஞ்சல் புயல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நவம்பர் 29 அன்று புயலாக வலுப்பெற்றதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புயல் கரையை கடந்த தினமான சனிக்கிழமை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உட்பட ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுவிக்கப்பட்டது.

அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய புயல் 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கரையை கடந்ததாக, தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.

சனிக்கிழமை காலை முதல் மெரினா, காசிமேடு, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தினர்.

பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

சென்னை மற்றும் மற்ற கடலோர மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

நிவாரண முகாம்கள் அமைப்பு, தயார் நிலையில் மீட்பு குழுக்கள், அம்மா உணவகத்தில் சனிக்கிழமை ஒருநாள் இலவச உணவு உட்பட அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தொடர்ந்து மழை பெய்தபடி இருந்ததால் சனிக்கிழமை மாலை சென்னையின் பல இடங்களில் நீர் தேங்கத் தொடங்கியது. சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சனிக்கிழமை இரவு 10.30 முதல் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகவும் அவ்வப்போது 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது தற்போது மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்துவிட்ட நிலையில் விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சியில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை படகு மூலம் அதிகாரிகள் மீட்டு வருகின்றனர்.

புயலுக்குப் பிறகு புதுச்சேரியின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதை ட்ரோன் காட்சிகளில் நம்மால் பார்க்க முடிந்தது. கிருஷ்ணா நகர் பகுதியில் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டது. அதே நேரம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களது பகுதிக்கு எந்தவிதமான உதவியும் வரவில்லை என குற்றம்சாட்டினர்.

அரசு உரிய மீட்பு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி தெரிவித்தார்.

புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுக்களை அனுப்பி வைக்கும்படி மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்க உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.