ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தது – வரலாறு காணாத அதிகபட்ச மழை எங்கு பெய்தது? இன்று என்ன நிலவரம்?
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நேற்று இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைபட்ட நேரத்தில் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அவ்வபோது 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது.
புயல் மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயல், 6 மணிநேரத்தில் மெதுவாக நகர்ந்து வந்து கரையை கடந்துள்ளது.
”ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்க துவங்கி, இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கரையை கடந்துள்ளது. இது தொடர்ந்து புதுச்சேரிக்கு அருகே நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் இது மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது. கடந்த 3 மணி நேரத்தில் பெரும்பாலும் நகராமல் இருந்தது.
தற்போதைய நிலவரப்படி இது மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையக்கூடும்” என சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் இன்று காலை 7 மணியளவில் தெரிவித்துள்ளார்.
எங்கு அதிக மழை?
இன்று காலை 7 மணி நிலவரப்படி, ”கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 6 இடங்களில் மிககனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளன” என பாலச்சந்திரன் தெரிவிரித்துள்ளார்.
அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ மழையும் புதுச்சேரியில் 46 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என அவர் கூறியுள்ளார்.
”புதுச்சேரியில் இதுவரை பதிவான மழை அளவு தரவுகளை வைத்து பார்க்கும் போது இதுவே அதிகபட்ச மழையாகும். இதற்கு முன்னர் 2004-ஆம் ஆண்டு புதுச்சேரியில் 21 செ.மீ மழை பதிவாகியிருந்தது. தற்போது 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
புயல் மற்றும் மழை காரணமாக பொதுமக்கள் நேற்று இரவு முதல் நாளை காலை வரை வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தி இருந்தது.
”மாவட்ட நிர்வாகம் புயலை தாக்கத்தை எதிர்கொள்ள தேவையை நடவடிக்கையை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க முகாம்கள் உள்ளன. இதற்காக சுமார் 4000 அரசு ஊழியர்க்ள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இன்று என்ன நிலை?
இன்றும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழைக்கான ரெட் அலர்ட்-ஐ வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மேலும் டிசம்பர் 3-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
சென்னை விமானத்தில் மீண்டும் சேவை
மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையம் நேற்று மூடப்பட்டது.
226 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்றும் சென்னையில் தரையிறக்கப்படவிருந்த 20 விமானங்கள் வேறு ஊர்களில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன என்றும் என்று தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
புயல் கரையை கடந்ததை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 1 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் விமான சேவை மீண்டும் துவங்கியது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.