- எழுதியவர், பெத்தன் பெல்
- பதவி, பிபிசி செய்திகள்
1971-ஆம் ஆண்டின் இலையுதிர் காலம் அது. வரலாற்றில் பிரமிப்பை ஏற்படுத்திய ஒரு வங்கிக் கொள்ளையை அரங்கேற்றியிருந்தனர் அந்த ஒரு குழுவினர்.
திறமையான, அமைதியான, குற்ற தொடர்புகள் கொண்ட அந்த குழுவினர், ஷெர்லாக் ஹோம்ஸ் கதையால் ஈர்க்கப்பட்டு ஒரு வார இறுதியில் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினர்.
வங்கியில் பணத்தை பத்திரமாக வைத்திருக்கும் வங்கியின் பணப்பெட்டக அறைக்கு துளையிட்டு சென்ற அவர்கள், அங்கே பணம் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களை சேமித்து வைத்திருந்த நூற்றுக்கணக்கான பெட்டிகளில் இருந்து பணத்தை எடுக்க ஆரம்பித்தனர். அதே நேரத்தில் அவர்கள் பயன்படுத்திய வாக்கி-டாக்கியின் அலைவரிசை மூலமாக, பெட்டக அறையில் அவர்கள் நடத்திய உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்தார் ஒரு நபர்.
பணப்பெட்டக அறையின் மற்றொரு புறம் காவல்துறையினர் காவலுக்கு நிற்க, இவர்களோ கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர். யாருக்கும் உள்ளே சென்று என்ன நடக்கிறது என்று பார்க்க கூட தோன்றவில்லை.
லண்டனில் உள்ள பேக்கர் தெருவில் அமைந்திருக்கும் தங்களின் கிளையை தற்காலிகமாக மூடுவதாக லாய்ட்ஸ் வங்கி அறிவிக்க, நாட்டின் மிகவும் பாதுகாப்பான ஒரு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு வங்கியில் கொள்ளை நடந்தது எப்படி? இன்றும் அந்த வழக்கு முழுமையாக துப்பு துலங்காத வழக்காக இருப்பது எப்படி?
1971-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு வெள்ளிக்கிழமை அன்று, கையில் ரொட்டித்துண்டுகளையும், ஒரு ஃப்ளாஸ்கில் தேநீரையும் எடுத்துக் கொண்டு பேக்கர் தெருவில் அமைந்திருக்கும் தோல் பொருட்கள் கிடைக்கும் எஸ்.ஏ.சி. என்ற கடைக்கு சென்றனர்.
அந்த ஆண்டின் மே மாதம் பெஞ்சமின் வொல்ஃப் என்ற 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், இந்த கடையை குத்தகைக்கு எடுத்திருந்தார்.
லாய்ட்ஸ் வங்கிக்கு இரண்டு கதவுகள் தள்ளி இந்த கடை இருந்ததாலும், அந்த கடையின் அடித்தளம், வங்கியின் பெட்டக அறை இருந்த அளவிற்கு ஆழமானதாக இருந்ததாலும் இந்த கடையை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டினார் பெஞ்சமின்.
அதற்கு முன்பாக, 1970-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்வந்தர் ஒருவர் பேக்கர் தெருவில் அமைந்திருக்கும் அந்த வங்கியில் வங்கிக் கணக்கு ஒன்றை துவங்கி அதில் 500 பவுண்டுகளை (இன்றைய மதிப்பு 6 ஆயிரம் பவுண்டுகள்) செலுத்தினார்.
பிறகு அங்கே உள்ள பெட்டகத்தில் ஒரு ‘டெபாசிட் பெட்டியை’ வாடகைக்கு எடுத்தார்.
அந்த வங்கிக்கு வரும் இதர பணக்கார வாடிக்கையாளர்கள் போன்றே இவரும் அடிக்கடி பெட்டகத்தில் உள்ள தன்னுடைய டெபாசிட் பெட்டியை அணுக முயற்சி செய்திருக்கிறார்.
மற்றவர்களைப் போல் அல்லாமல், தான் எடுத்துச் சென்ற குடை ஒன்றை வைத்து அந்த பெட்டக அறையின் நீள, அகலம் என்ன என்று கணக்கிட்டிருக்கிறார் அந்த நபர்.
கொள்ளை சம்பவத்தில் மற்றவர்களும் அவர்களின் பங்களிப்பை வெவ்வேறு காலகட்டங்களில் வழங்கியுள்ளனர்.
அந்த கோடை காலத்தில் அந்த பகுதியில் சாலை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. அதனால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக அந்த சாலையில் இருந்த கடைகளின் அதிர்வு எச்சரிக்கை மணிகள் தொடர்ந்து எச்சரிக்கை சமிக்ஞையை தர, பலரும் அந்த மணிகளின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்திவைத்தனர்.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்?
ஆரம்பத்தில், பிரிங்க்ஸ் – மாட் மற்றும் ஹாட்டன் கார்டன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ப்ரையன் ரீடர் இந்த கொள்ளை சம்பவத்தையும் திட்டமிட்டிருக்கலாம் என்று நினைக்கப்பட்டது. ஆனால் இது காலம் வரை இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் யார் என்ற முழு விபரமும் கிடைக்கப்பெறவில்லை.
84 வயதில், 22 மில்லியன் பவுண்டு மதிப்பிலான சொத்துகளை பல்வேறு கொள்ளை சம்பவத்தால் ஈட்டி உயிரிழந்த ரீடர் இந்த வங்கிக் கொள்ளையில் தான் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார்.
பெஞ்சமின், ரீடரால் ஈர்க்கப்பட்ட அந்தோணி காவின் என்பவர் உள்பட நான்கு நபர்கள் இந்த கொள்ளை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு 1973-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த கொள்ளையில் ஈடுபட்ட பெண் உட்பட இதர நான்கு பேர் யார் கையிலும் சிக்காமல் தப்பிச் சென்றனர்.
வதந்திகளும் வெளிவராத பல தகவல்களும்
கொள்ளை அடித்தவர்கள் மட்டுமின்றி, இந்த வங்கியில் இருந்து எவ்வளவு கொள்ளை அடிக்கப்பட்டது என்பது போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
அரை மில்லியன் பவுண்டு முதல் 3 மில்லியன் பவுண்டு வரை கொள்ளை அடிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நாளில் அதன் மதிப்பானது 6 மில்லியன் பவுண்டு முதல் 40 மில்லியன் பவுண்டு வரையில் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தில் மிகவும் குறைவான பணமே மீட்கப்பட்டது. மொத்த பணமும் என்ன ஆனது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்த வழக்கு தொடர்பான தரவுகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் தேசிய ஆவண பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. 2071-ஆம் ஆண்டு வரை இந்த தகவல்களை யாராலும் அணுக இயலாதபடி அதிகாரப்பூர்வமாக ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட டெபாசிட் பெட்டிகளில் ஒன்றில் அன்றைய இளவரசி மார்கரேட்டின் அந்தரங்க புகைப்படங்களும் இருந்தன என்பது உண்மைதானா?
ஷெர்லாக் ஹோம்ஸின் தி ரெட் ஹெட்டட் லீக் (The Red-Headed League) என்ற புத்தகத்தை படித்துவிட்டு இந்த திட்டத்தோடு வந்ததாக காவின் மீது குற்றச்சாட்டு இருந்தது.
இந்த கதையின் நாயகன், பெட்டக அறையில் கொள்ளையர்கள் வருவதற்காக காத்திருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.
பெஞ்சமின், காவின், ரெஜினால்ட் டக்கர், தாமஸ் ஸ்டீபன் ஆகிய நால்வரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். ரெஜினால்ட் டக்கர் தான் வங்கியின் பெட்டக அறைக்கு சென்று குடையின் மூலம் மொத்த இடத்தையும் அளந்து வந்தவர்.
பாபி மில்ஸ், மிக்கே கெர்வாய்ஸ் போன்றோரும் இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக கருதப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவத்திற்கு பிறகு இருவரும் எங்கே சென்றார்கள் என்பது இன்றும் மர்மமாக இருக்கிறது.
ஸ்டீபன் இந்த கொள்ளைக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார். வெடி மருந்து, ஆக்ஸிஜன் மூலமாக இரும்பை உருக்கி அறுக்கும் கருவி போன்றவற்றையும் அவர் இந்த கொள்ளை சம்பவத்திற்காக பயன்படுத்தியுள்ளனர்.
பல மாதங்களாக இந்த பகுதியில் 40 அடி சுரங்கத்தை தோண்ட தங்களின் நேரத்தை செலவிட்டுள்ளனர். சுரங்கத்தை தோண்டி எடுக்கப்பட்ட மண், கல்லை ப்ளாஸ்டிக் பெட்டிகளில் போட்டு இரவில் யாரும் பார்க்காத சமயத்தில் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
வெளியே இருப்பவர்கள் யார் என்று கண்காணித்திருக்கிறார் மில்ஸ். அந்த நேரத்தில் இதர நபர்கள் பெட்டக அறைக்குள் நுழைந்துவிட்டனர்.
ஜாக்கும், இரும்பை உருக்கி அறுக்கும் கருவியும் வேலை செய்யவில்லை. கெலிக்னைட் என்ற வெடிபொருளை பயன்படுத்தி பெட்டக அறைக்குள் நுழைந்திருக்கின்றனர்.
போக்குவரத்து நெரிசலால் வெடிபொருளின் சத்தம் பெரிய அளவில் உணரப்படவில்லை என்பதால் அவர்கள் எளிதில் அந்த பெட்டக அறைக்குள் நுழைந்துவிட்டனர்.
கொள்ளை சம்பவ உரையாடல்களை நேரலையில் கேட்ட நபர்
கொள்ளையில் இவர்கள் ஈடுபட்டிருக்க, லக்ஸெம்பர்க் ரேடியோ கேட்க விரும்பிய நபர் இந்த கொள்ளை சம்பவத்தின் போது நிகழ்ந்த அனைத்துவிதமான உரையாடல்களையும் தன்னுடைய ரேடியோவில் கேட்டுக் கொண்டிருந்தார். அவருடைய பெயர் ராபர்ட் ரோலாண்ட்ஸ்.
அவருடைய ஹாம் ரேடியோவில், பெட்டக அறையில் கொள்ளையர்கள் பேசிய அனைத்தையும் நேரலையில், அவர்களின் வாக்கி டாக்கி அலைவரிசை வழியாக கேட்டுக் கொண்டிருந்தார்.
வெடிபொருட்களால் பெட்டக அறை முழுவதும் புகை பரவியதால் ஓய்வு எடுக்கலாமா, வேண்டாமா என்பதையும் கொள்ளையர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தை அவர் கேட்டிருக்கிறார். கொள்ளையர்களில் ஒருவர் தனக்கு தேநீரும், சாண்ட்விச்சும் வேண்டும் என்று கேட்டதையும் தன்னுடைய ரேடியோவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
பல ஆயிரங்கள் அவர்களிடம் இருப்பதாகவும், வேறென்ன தேவைக்காக மீண்டும் அங்கே செல்ல வேண்டும் என்றும் பேசியதையும் ராபர்ட் கேட்டிருக்கிறார். ஆனால் அவரோ இந்த கொள்ளை சுருட்டுக்கடையில் நடப்பதாகவும், எவ்வளவு சுருட்டுகளை அவர்கள் கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்று பேசுவதாகவும் நினைத்துக் கொண்டார்.
இதனை உள்ளூர் காவல்துறையின் கவனத்திற்கு அவர் கொண்டு செல்ல, அவர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை. பிறகு ராபர்ட் ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் ஆர்வம் காட்ட துவங்கினார்கள்.
வாக்கி-டாக்கியின் சமிக்ஞை எங்கிருந்து வருகிறது என்பதை கண்காணிக்க அவர்கள் ‘டிடெக்சன் வாகனத்தை’ பயன்படுத்த முடிவு செய்தார்கள். ஆனால் ஞாயிறு மதியம் வரை அதை செய்யவில்லை. அப்போது அனைத்தும் முடிந்துவிட்டது.
திகைத்து நின்ற ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறை
“அடுத்த நாள், வங்கி மேலாளர்களும், பணியாளர்களும் அவர்களின் வார இறுதி நாளில் வங்கியை திறக்க அழைக்கப்பட்டனர். பாதுகாப்பு அதிகாரிகளுடன் உள்ளே சென்ற காவல்துறையினர், பெட்டக அறைக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்று உறுதியாக நம்பிக்கையோடு வெளியே வந்தனர். அவர்கள் வங்கியின் நுழைவுக் கதவுகளை மூட, பெட்டக அறையின் கதவுகளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த கொள்ளையர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டிருந்தனர். காவல்துறையினர் இருந்த போது, சிறு மூச்சின் சத்தமும் அவர்களின் இருப்பை காட்டிக் கொடுத்திருக்கும். அதன் பிறகு 40 அடி சுரங்கத்தின் வழியே, தவழ்ந்த வண்ணம் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர் கொள்ளையர்கள்.” என்று தி டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
திங்கள் கிழமையன்று மீண்டும் பணிக்கு வந்த வங்கி ஊழியர்கள், பெட்டக அறை சரியாக இல்லை என்பதை உணர்ந்தோம் என்று கூறியிருக்கின்றனர்.
ஸ்காட்லாந்து யார்டை சேர்ந்த காவலர் கமாண்டர் ராபர்ட் ஹண்ட்லே,”எதிர்பாராத வகையில் மக்களின் விமர்சனத்திற்கு நாங்கள் ஆளாகினோம். நாங்கள் மிகவும் மெதுவாக செயல்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்,” என்று கூறியிருந்தார்.
நாங்கள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வங்கிக்குள் சென்ற போது, பெட்டக அறை திறக்கப்படாமல் இருந்தது. ஆனால் அந்த அறையின் மற்றொரு பக்கம் வழியாக அவர்கள் வந்திருப்பார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. 120 துப்பறியும் அதிகாரிகள் இந்த வழக்கில் பணியாற்றினார்கள்.
இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருக்கும் என்ற தகவல்கள் எங்களுக்கு கிடைத்து வந்தன என்று கூறினார் ஹண்ட்லே. “மிஸ்டர் பிக் ஒரு முகமற்ற பாதசாரியாக இருந்திருக்கலாம்,” என்று நாங்கள் நினைத்தோம்.
வழக்குக்குப் பின்னால் ஒருவர் மாற்றி ஒருவர் இந்த குற்றத்திற்கு இவர் தான் காரணம் என்று கைகாட்ட ஆரம்பித்தனர்.
ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை, பாதுகாப்பு அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இது நிகழ்ந்தது என்று குற்றம்சாட்டினார்கள். பாதுகாப்பு அதிகாரிகளோ, ஸ்காட்லாந்து யார்டு நபர்கள் தான் அவர்களின் எச்சரிக்கை அழைப்பான்கள் ‘சிறப்பாக செயல்படுவதை’ உறுதி செய்தனர் என்று பதிலுக்கு குற்றம்சாட்டினார்கள்.
தி போஸ்ட் ஆபிஸ், சரியான நேரத்தில் அழைப்பு விடுத்திருந்தால் கொள்ளையர்களை பிடித்திருக்க இயலும் என்று குற்றம்சாட்டினார்கள்.
மேலும், காவல்துறை ஏன் அருகில் இருக்கும் தோல் பொருட்கள் விற்பனை நிலையத்தை சோதனையிடவில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார்கள். அதை சரியாக சோதனை செய்திருந்தால், பெட்டகத்திற்கு சென்றிருக்கும் வழியோடு சேர்த்து, அங்கே 286 டெபாசிட் பெட்டிகளை திறந்து பார்த்து கொள்ளை அடித்துக் கொண்டிருந்த நபர்களையும் காவல்துறை கண்டுபிடித்திருக்க இயலும் என்று கூறினார்கள்.
2008-ம் ஆண்டு வெளியான ‘தி பேங் ஜாப்’ என்ற படம் இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.
ட்ரினிடாட்டைச் சேர்ந்த ஆயுதக் குழுவின் தலைவரான மைக்கல் எக்ஸ் என்ற நபர், இளவரசி மார்கரெட்டின் அந்தரங்க புகைப்படங்களை அந்த வங்கியின் டெபாசிட் பெட்டியில் வைத்திருந்ததாகவும் அதனை மீட்க பிரிட்டனின் பாதுகாப்பு சேவை முயற்சி செய்ததாகவும் கதைக்களம் அமைந்திருக்கும்.
கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரீடர் தொடர்பாக செய்தித்தாள்களில் வந்த வதந்திகளும் அதில் இடம் பெற்றிருந்தன. அதன்படி, ரீடரின் நண்பர் ஒருவர், நிச்சயமாக ரீடர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது ஒரு அரசியல் தலைவர் குழந்தைகளை துன்புறுத்தும் புகைப்படங்களை வங்கியில் கண்டதாகவும் கூறியதாக குறிப்பிட்டிருந்தார்.
பிறகு, காவல்துறையினர் பார்க்கும்படியாக அந்த புகைப்படங்களை ரீடர் தரையில் விட்டுச் சென்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை நிரூபிக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை.
டி.எஸ்.எம்.ஏ என்ற நோட்டீஸை அரசாங்கம் வெளியிட்டதாகவும் அதன்படி பிரிட்டன் ராணுவம் மற்றும் உளவுத்துறை தொடர்பான தகவல்களை பொதுவெளியில் பகிர தடை விதிக்கும் நோட்டீஸாகும். இந்த காரணத்தால் பத்திரிகைகளில் இந்த கொள்ளை தொடர்பாக எந்தவிதமான செய்திகளும் வெளியாகவில்லை என்ற வதந்தியும் இந்த படத்தின் கதையில் இடம் பெற்றிருந்தது.
ஆனால் ஏற்கனவே நடைபெற்ற கொள்ளை தொடர்பாக செய்திகள் வெளியாவதை தடுப்பதற்காக இது போன்று நோட்டீஸ்கள் வெளியிடப்படுவதில்லை.
உண்மையில் இது தொடர்பான ஆர்வம் குறைந்துவிட்டது. ஆனாலும் தேசிய மற்றும் பிராந்திய செய்தித்தாள்களில் இந்த விவகாரம் தொடர்பாக செய்திகள் வெளிவந்த வண்ணமே இருந்தன.
ராபர்ட் ரோலாண்ட்ஸ், பத்திரிகை ஒன்றுக்கு அலைபேசி வாயிலாக தகவல்கள் வழங்க முற்பட்ட போது காவல்துறை அதை வாங்கி பத்திரிகை ஆசிரியரிடம் அதனை பரிசுரிக்க அனுமதி கிடையாது என்று கூறிய பின்பு இது போன்ற வதந்திகள் பரவியிருக்கலாம்.
பல ஆண்டுகளுக்கு பிறகு இதை நினைவு கூர்ந்த ரோலண்ட்ஸ், காவல்துறை தங்களின் இயலாமையை மறைக்கவே இது போன்று செயல்பட்டிருக்கலாம் என்று கூறினார்.
உண்மையில் அந்த வார இறுதியில் என்ன தான் நடந்தது? தேசிய ஆவண காப்பகத்தில் 800 பக்கங்களைக் கொண்ட ஆவணங்களில் என்னதான் இருக்கிறது. இன்னும் அதனை 47 ஆண்டுகளுக்கு யாராலும் அணுக இயலாது.
லாய்ட்ஸ் வங்கி இந்த விவகாரம் குறித்து என்ன தான் தெரிவித்தது.
அங்கே வங்கிக் கணக்கு வைத்திருந்த நபர்கள், தங்களின் பாதுகாப்பு பெட்டிகளில் வைத்திருக்கும் பொருட்களுக்கு காப்பீடுகளை பெற வலியுறுத்தியது. ஆனால் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பொறுப்பேற்க மறுத்துவிட்டது.
இவ்வளவு பெரிய கொள்ளை சம்பவம் நடந்தும் கூட, “கீழ் தளம் வழியாக வந்து கொள்ளை அடிப்பது அசாதாரணமாக இருக்கிறது,” என்று தான் அந்த வங்கி கூறியிருந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு