by adminDev

ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த நிதி மோசடி குற்றச்சாட்டுக்களை நிரூபிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்து- நாமல் ! on Wednesday, November 20, 2024

தேர்தல் காலத்தில் ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த நிதி மோசடி குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக சட்டத்தின் முன் நிரூபிக்குமாறு ஜனாதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன்.

குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அநுராதபுரம் -ருவன்வெலிசாயவில் இன்று புதன்கிழமை (20) மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான நிர்வாகத்தின் மீது நாட்டு மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளார்கள்.மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் சிறந்த முறையில் நிறைவேற்ற வேண்டும்.

மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கைகள் மற்றும் அபிலாசைகளை நிறைவேற்றுவது சவால்மிக்கது என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாட்டின் ஒற்றையாட்சி, தேசிய அபிலாசைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி செயற்படுவோம். சந்தர்ப்பத்துக்கு ஏற்றாட் போல் ஒற்றையாட்சி தொடர்பான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள போவதில்லை. ஒற்றையாட்சி தொடர்பில் ராஜபக்ஷர்கள் என்றும் ஒரே நிலைப்பாட்டையே கடைப்பிடிப்பார்கள்.

தேர்தல் பிரச்சாரங்களின் போது ராஜபக்ஷர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களும் ஆட்சி மாற்றத்துக்கான பிரதான காரணியாகும். 2015 ஆம் ஆண்டும் இவ்வாறான தன்மையே காணப்பட்டது. இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ராஜபக்ஷர்கள் மீது பல நிதி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

ராஜபக்ஷர்கள் மீது முன்வைத்த நிதி குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக சட்டத்தின் முன் நிரூபிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம்.

எம்மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட வேண்டிய தேவை எமக்கு உள்ளது. குறுகிய அரசியல் இலாபத்துக்காக எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் அவற்றை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும்.

பாராளுமன்றத்தின் கௌரவத்தை மதித்தே செயற்படுவோம். பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஒருபோதும் செயற்படவில்லை.

பாரம்பரியமான எதிர்க்கட்சியாகவும், மக்கள் விடுதலை முன்னணியை போன்றும் நாங்கள் செயற்பட போவதில்லை. நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்