வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில் உக்ரேன் தலைநகர் கீவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதன்கிழமை (20) மூடப்பட்டது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ள தூதரகம், உக்ரேனில் உள்ள அமெரிக்க குடிமக்கள் சாத்தியமான வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளுக்குத் தயாராகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தியது.
பதவியிலிருந்து வெளியேறும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் புதிய அங்கீகாரத்தைத் தொடர்ந்து, உக்ரேன் அமெரிக்க வழங்கிய ATACMS ஏவுகணைகளை ரஷ்ய எல்லைக்குள் செலுத்திய ஒரு நாளுக்குப் பின்னர் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
ஏவுகணை தாக்குதலுக்குப் பின்னர் ரஷ்யா “தகுந்த” பதிலடி வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
உக்ரேனுக்கு அதன் எல்லைக்குள் ஆழமான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதற்கு எதிராக மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ உறுப்பினர்களை போரில் நேரடி பங்கேற்பாளர்களாக ரஷ்யா கருத வழிவகுக்கும் என்று மொஸ்கோ எச்சரித்துள்ளது.