பாராளுமன்றத்துக்கு பஸ்ஸில் வருகை தந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் ! on Wednesday, November 20, 2024
ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் 50 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (20) பாராளுமன்றத்துக்கு பிரத்தியேக பேருந்தில் வருகைத் தந்து தகவல்களை பதிவு செய்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (20) பத்தரமுல்லை பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த விசேட கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய உறுப்பினர்களுக்கு இதன்போது பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சியின் பொதுச்செயலாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்போது பாராளுமன்றத்தில் நடந்துக் கொள்ளும் முறைமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். ஆகவே மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையிலும், மக்களால் வெறுக்கப்படும் வகையிலும் எந்நிலையிலும் செயற்பட வேண்டாம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த சந்திப்பின் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் பாராளுமன்றத்துக்கு ஒன்றாக சென்று தகவல்களை பதிவு செய்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 24,25,27 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.