தெரிவு செய்யப்பட்ட எம்.பிக்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கை நிறைவு பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை நடத்துவதற்கு தேவையான வசதிகளை இலகுபடுத்தும் விதமாக, நேற்றும் (19) இன்றும் (20) பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல் சேகரிக்கும் நடவடிக்கைகள் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
இந்த நிகழ்வில் முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக பாராளுமன்ற ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அனைத்து எம்.பி.க்களுக்கும் பயனுள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களை வழங்குதல், எம்.பி.க்களின் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுத்தல், மின்னணு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் தொடர்பான கைரேகைகள் எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் முதலாவது கூட்டத்தை நடத்துவது தொடர்பான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக, இணையவழி முறை (Online) ஊடாக உரிய தகவல்களை உள்ளீடு செய்யும் வசதியும் இம்முறை வழங்கப்பட்டிருந்தது.