டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பதவியை பெற்றுள்ள விவேக் ராமசாமியின் தமிழ்நாட்டு பின்னணி என்ன? – உறவினர்கள் எங்கே உள்ளனர்?
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள டிரம்ப், ‘அரசாங்கத்தின் திறன் சார்ந்த துறை’ (Department of Government Efficiency – DOGE) என்ற முகமையை உருவாக்கி அதன் தலைமை பதவியில் ஈலோன் மஸ்க் உடன் விவேக் ராமசாமியையும் நியமித்துள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், விவேக் ராமசாமியை ‘தேசப்பற்று கொண்ட அமெரிக்கர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒருவரால், ‘தேசப்பற்று கொண்ட அமெரிக்கர்’ என்று அங்கீகரிக்கப்பட்டுள்ள விவேக் ராமசாமி, அமெரிக்காவின் பிறந்தவர் என்றாலும், அவருடைய பெற்றோர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடக்கஞ்சேரியை சேர்ந்தவர்கள்.
‘‘பாலக்காட்டில் வாழும் தமிழ் குடும்பத்தினர் பலர் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். எங்கள் முன்னோரும் அங்கிருந்து வந்தவர்கள்தான்.” என்கிறார் பாலக்காட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரசாத்.
பிரசாத், விவேக் ராமசாமியின் ஒன்று விட்ட சகோதரர். அவர் மேலும் கூறுகையில், ‘‘வடக்கஞ்சேரியில்தான் விவேக் ராமசாமியின் தந்தை ராமசாமி பிறந்து வளர்ந்தார். விவேக்கின் தாயார் கீதா, பொள்ளாச்சியைச் சேர்ந்தவர். இருவருக்கும் பழனியில்தான் திருமணம் நடந்தது. நானும் அந்தத் திருமணத்தில் பங்கேற்றேன்.’’ என்கிறார்
இரு குடும்பங்களும் வடக்கஞ்சேரியில் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்ததாகக் குறிப்பிடும் பிரசாத், விவேக் ராமசாமியின் தந்தை வி.ஜி.ராமசாமியின் குடும்பத்தைப் பற்றி விரிவாக விளக்கினார்.
உடன்பிறந்தது 6 பேர்; ஊரில் இருப்பது ஒருவர்!
விவேக் ராமசாமியின் தந்தை வி.ஜி.ராமசாமி எனப்படும் வடக்கஞ்சேரி கணபதி ராமசாமியுடன் பிறந்தவர்கள் 6 பேர். உடன் பிறந்தவர்களில் தற்போது சந்திரா என்ற சகோதரி மட்டுமே, இந்தியாவில் பாலக்காட்டில் வசித்து வருகிறார். மற்ற 5 பேரும் 1960 களிலிருந்து 1970களுக்குள் அமெரிக்கா சென்று அங்கேயே குடியேறிவிட்டனர் என்கிறார் வழக்கறிஞர் பிரசாத்.
சந்திராவின் கணவர் சுப்பிரமணியம், பாலக்காட்டில் குழந்தைகள் நல மருத்துவராகவுள்ளார். இவர்களின் மகன் இருதய நோய் நிபுணர். அவரும் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார்.
சந்திரா சுப்பிரமணியத்திடம் பிபிசி தமிழ் பேசியபோது, ‘‘விவேக் ராமசாமி, என் உடன்பிறந்த சகோதரரின் மகன்தான். அவருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.’’ என்றார்.
இந்தியா வந்த விவேக் ராமசாமி
மேலும் பேசிய பிரசாத் ‘‘1960 களின் இறுதியில் அமெரிக்கா சென்ற வி.ஜி. ராமசாமி, அங்கே தனது ஆராய்ச்சிப் படிப்பை முடித்து, காப்புரிமை சார்ந்த சட்ட நிபுணர் ஆகத் தேர்ச்சி பெற்று, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார்.”
‘‘விவேக்கின் தாயார் கீதா, மனநோய் மருத்துவர். அவர், திருமணத்துக்கு முன்பே அமெரிக்காவுக்குச் சென்று விட்டார்.’’ என்று மேலும் விளக்கிய பிரசாத், ராமசாமியும் அவரின் மனைவி கீதாவும் இப்போதும் ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்தியாவுக்கு வந்து செல்வதாகக் கூறுகிறார்.
இந்தியா வரும்போது, பாலக்காட்டில் உள்ள தனது வீட்டில்தான் இருவரும் தங்குவதாகக் கூறும் பிரசாத், கடந்த 2018 -ஆம் ஆண்டில் விவேக் ராமசாமியும், அவருடைய மனைவி அபூர்வாவும் இந்தியா வந்ததை நினைவு கூர்ந்தார்.
”விவேக்கும், அபூர்வாவும் வந்து எங்கள் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து சென்றனர். அவர் இந்திய உணவு வகைகளை விரும்பி உண்ணுவார். ஆனால் இதுதான் வேண்டுமென்று எதிர்பார்க்காமல் எதை கொடுத்தாலும் அதை விருப்பத்தோடு சாப்பிடுவார். இந்திய கலாசாரத்தை அவர் பெரிதும் விரும்புவார். தன் ஆன்மிக நம்பிக்கையை வெளிப்படையாகச் சொல்வார்.’’ என்றார்.
‘‘விவேக் மிகமிக எளிமையானவர். அதை விட மிகவும் பாஸிட்டிவ் ஆனவர். ஒரு தீர்மானம் எடுத்தால் அதை கண்டிப்பாகச் செய்து முடித்து விடுவார். அவர் படித்துக் கொண்டிருக்கும்போது, நான் அமெரிக்கா சென்றிருந்தேன். அப்போதே அவர் அரசியல் விவாதங்களில் பங்கேற்பார் ” என்றார் பிரசாத்.
விவேக் ராமசாமிக்கு தமிழ் தெரியுமா?
விவேக் ராமசாமியின் மனைவி அபூர்வாவைப் பற்றிக் கூறிய பிரசாத், ”அவர் ஒரு மருத்துவர். விவேக்கிற்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.’’ என்றார்.
விவேக் ராமசாமிக்கு தமிழ் தெரியுமா என்று பிரசாத்திடம் கேட்டபோது, ‘‘நன்றாகத் தமிழ் தெரியும். சற்று தடுமாற்றத்துடன் பேசுவார். எனது தாயாரிடம் இப்போதும் தமிழில்தான் பேசுவார். அவருடைய பெயரை டிரம்ப் அறிவித்தபின், அவரிடம் நாங்கள் எல்லோரும் பேசி வாழ்த்துக் கூறினோம்.’’ என்றார்.
கல்விக்கு தங்கள் முன்னோர் கொடுத்த முக்கியத்துவம்தான் தங்கள் குடும்பத்துக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்திருப்பதாக வழக்கறிஞர் பிரசாத் கூறினார்.
‘வடக்கஞ்சேரி கிராமமே மகிழ்ச்சியில் இருக்கிறது’
”விவேக்கிடம் மிகப்பெரிய பொறுப்பை டிரம்ப் ஒப்படைத்துள்ளார். அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டு வர அவர் விரும்புகிறார். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் குறிப்பிட்ட இலக்கை எட்டுவோம் என்று விவேக் கூறியுள்ளார். அதற்கான உழைப்பும், திறனும், முயற்சியும் அவரிடம் இருப்பதால் அதைச் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.’’ என்றார் பிரசாத்.
வடக்கஞ்சேரியில் விவேக் ராமசாமியின் தந்தையின் பூர்வீக வீட்டுக்கு அருகில் வசிக்கும் ராமசாமி என்பவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், ‘‘ராமசாமியின் மகன் அமெரிக்காவில் இவ்வளவு பெரிய பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பதில் வடக்கஞ்சேரி கிராமமே மகிழ்ச்சியில் இருக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய கெளரவம்.’’ என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு