இரண்டாவது நாளாக தொடரும் ருஹுனு பல்கலைக்கழகத்தின் பணிப்புறக்கணிப்பு ! on Wednesday, November 20, 2024
ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை பதவி நீக்கம் செய்யுமாறு கோரி பல்கலைக்கழக கல்வி, கல்விசாரா மற்றும் மாணவர் சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (20) இரண்டாவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த பிரச்சினை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் நேற்று பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த இதனைத் தெரிவித்தார்.
“பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்ற பிறகு கல்வித்துறை ஊழியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களை கடும் அழுத்தத்திற்கு உள்ளாக்கி தனிப்பட்ட பழிவாங்கலுக்கு உள்ளாக்கியுள்ளார். குறிப்பாக, பல மாணவர்களின் கல்வி ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது நிறுத்தப்பட்டுள்ளது.”
மேலும் கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க.
“நாங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்தவுடன், அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்த நிலையில், பிரதமர் இது குறித்து கலந்துரையாடினார். கலந்துரையாடல் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். ஆனால் இந்த துணைவேந்தரை பணியில் இருந்து நீக்கும் வரை இந்த வேலை நிறுத்தம் நிறுத்தப்படாது” என்றார்