டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா – சீனா உறவு எப்படி இருக்கும்? ஓர் அலசல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், லாரா பிக்கர்
  • பதவி, சீன செய்தியாளர்

பெய்ஜிங்கில் பணி ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் சிலர், டெம்பிள் ஆஃப் ஹெவனுக்கு அருகே உள்ள விளையாட்டுத் திடலில் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

“எனக்கு 74 வயதாகிறது. இந்த உடற்பயிற்சி தான் என்னை நீண்ட நாள் உயிருடன் வாழ வைக்கிறது என்று நான் நம்புகிறேன்” என்று ஒருவர் கூறுகிறார். ஆண்களும் பெண்களும் இந்த முன்பனி காலத்தில் வீசும் குளிர்ந்த காற்றில் உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

நல்ல அறுவடை வேண்டி இந்த மிங் பேரரசின் புனித தyத்திற்கு சீன பேரரசர்கள் வருவதுண்டு. சீனாவின் வளர்ச்சிக்கு பல காலமாக பங்களிப்பை வழங்கிய பொதுமக்கள் பலரும் இந்த பூங்காவில் தங்களின் நேரத்தை செலவிடுகின்றனர்.

உலக நாடுகளுக்கு இணையாக சீனா வளர்வதையும், அவர்களின் தொழிற்சாலைகள் பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதையும், அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா உருவெடுத்திருப்பதையும் இவர்கள் பார்த்திருக்கின்றனர்.

ஆனால், தற்போது அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், ஏற்கனவே உறுதியளித்ததைப் போன்று சீனப் பொருட்களுக்கு அதிக வரியை விதித்தால் அது சீனாவின் ஏற்றுமதி-சார் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சுகின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டிரம்பை பற்றி சீனர்கள் கூறுவது என்ன?

சீனாவைப் பொறுத்தவரை, டிரம்ப் என்பவர் ஒரு நகைச்சுவையானவர். சமூக வலைதளங்களில் அவர் நடனமாடும் வீடியோ வைரலானதால், மீமாக வைரலான நபர் என்ற எண்ணமே அவர்களிடம் உள்ளது. அவர் யூகிக்க முடியாத நபராக இருக்கிறார் என்றும் பலர் வருத்தம் அடைகின்றனர்.

“எனக்கு டிரம்ப் பிடிக்கும். ஆனால் அவர் கணிக்க முடியாத நபர். அவர் என்ன செய்வார் என்று யாருக்கு தெரியும்? ” என்று கூறுகிறார் பெயர் கூற விரும்பாத 74 வயதான ஓய்வூதியதாரர்.

டிரம்பின் நிர்வாகத்தில் இடம் பெறும் நபர்களாக அறிவிக்கப்பட்டவர்களும் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்கோ ரூபியோ, சீனாவை “இந்த நூற்றாண்டிற்கான அச்சுறுத்தல்,” என்று கூறியுள்ளார்.

டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கான தேர்வாக உள்ள மைக் வால்ட்ஸ் இம்மாத துவக்கத்தில், “அமெரிக்கா யுக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் பிரச்னைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அப்போது தான், அமெரிக்கா தன்னுடைய கவனத்தை எங்கே செலுத்த வேண்டுமோ அங்கே செலுத்தும்” என்று கூறி “சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வரும் அச்சுறுத்தலுக்கு பதிலடி தர அமெரிக்கா கவனத்தை செலுத்தும்,” என்று தெரிவித்திருந்தார்.

சீனா, டிரம்பின் மீள் வருகைக்கு தன்னை தயார்படுத்தி வருகிறது என்று கூறுகிறார் லண்டனை தலைமையகமாக கொண்டு செயல்படும் சிந்தனை மையமான சாத்தம் ஹவுஸில், சீனாவைப் பற்றி ஆய்வு செய்யும் மூத்த ஆராய்ச்சியாளர் யு ஜீ.

மக்கள் கவலை கொண்டிருந்தாலும் கூட, சீனாவைப் பொறுத்தவரை டிரம்பின் வெற்றி பெரிய ஆச்சரியத்தை அளிக்கவில்லை என்று அவர் தெரிவிக்கிறார். மேலும், யாரும் நினைக்காத வகையிலான ஒரு உறவை, டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரும் போது, உலக மக்கள் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எனக்கு டிரம்ப் பிடிக்கும். ஆனால் அவர் நிலையற்றவர். அவர் என்ன செய்வார் என்று யாருக்கு தெரியும் என்கின்றனர் சீனர்கள்

சீனாவின் பனிப்போர் எச்சரிக்கை

டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு முன்பிருந்தே இரு நாடுகளுக்கும் இடையேயான போட்டி அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

பைடன் ஆட்சியின் போது பதற்றமான சூழலாக மாறியது. ஏன் என்றால் அவரின் ஆட்சி காலத்தின் போது தான் ஏற்றுமதிக்கான வரி விதிப்பும், தைவானின் எதிர்காலம், ரஷ்யாவின் யுக்ரேனிய படையெடுப்பு போன்றவை நடந்தன.

புதிதாக ஆட்சிக்கு வரும் டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், கடந்த முறை அதிபர் ஜோ பைடனுடான சந்திப்பில், “புதிய பனிப்போர் ஏற்படக் கூடாது. ஏற்பட்டால் அதில் வெற்றி பெற இயலாது,” என்று அமெரிக்காவை எச்சரித்திருக்கிறார்.

“சீனாவை கட்டுக்குள் வைக்க நினைப்பது நல்ல முடிவல்ல, ஏற்புடையதும் அல்ல. அது நிச்சயமாக தோல்வியை சந்திக்கும்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவை கட்டுக்குள் வைக்க நினைப்பது நல்ல முடிவல்ல, ஏற்புடையதும் அல்ல. அது நிச்சயமாக தோல்வியை சந்திக்கும் என்று ஷி எச்சரித்துள்ளார்.

சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் முயற்சி செய்து வருவதாக அமெரிக்கா மீது சீனா நீண்ட காலமாக குற்றம் சுமத்தி வருகிறது. சீனாவில் உருவாக்கப்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி விதி, உயர் தொழில்நுட்ப செயற்கை நுண்ணறிவு சிப்களை பெற கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் சட்டங்களை உருவாக்குவது, தெற்கு சீன கடல் பகுதிகளில் ராணுவ கூட்டமைப்பைக் கொண்டிருப்பது போன்ற பல செயல்களை சீனா இவ்வாறாகவே அணுகுகிறது.

சீனாவை மிகவும் கடுமையாக அணுகவே டிரம்ப் தனது நிர்வாகத்தில் ரூபியோ மற்றும் வால்ட்ஸ் போன்ற நபர்களுக்கு இடம் அளித்துள்ளார் என்று ஆசியா சொசைட்டீஸ் சென்டர் ஃபார் சீனா அனலசிஸை சேர்ந்த லைல் மோரிஸ் குறிப்பிடுகிறார்.

ஜின்பிங்குடனான தனிப்பட்ட உறவை, பேச்சுவார்த்தைக்கு பயன்படுத்த டிரம்ப் நினைக்கும் அதே வேளையில், சீனா தொடர்பான கொள்கைகளை மிகவும் கடுமையாக சமரசமின்றி எடுக்க, வால்ட்ஸ் மற்றும் ரூபியோவை அதிகம் சார்ந்து டிரம்ப் செயல்படுவார் என்று லைல் மோரிஸ் கூறுகிறார்.

அமெரிக்காவின் பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் சீனா ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என்று வாஷிங்டனில் எழும் குரல்கள் பெய்ஜிங்கில் உள்ள சராசரி மனிதனுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

அமெரிக்காவில் இருப்பதைக் காட்டிலும் நீங்கள் இங்கே நன்றாக வாழலாம் என்று கூறிக் கொண்டே தன்னுடைய உடற்பயிற்சியை தொடர்கிறார் 74 வயதான அந்த மனிதர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷியுடனான தனிப்பட்ட உறவை, பேச்சுவார்த்தைக்கு பயன்படுத்த டிரம்ப் நினைக்கலாம்

கோவிட் பரவல் குற்றச்சாட்டு முதல் அணு ஆயுத போட்டி வரை

டெம்பிள் ஆஃப் ஹெவனின் வட பகுதியில் மக்கள் நுழைய தடை செய்யப்பட்ட நகரமாகும். அங்கே சீன பேரரசர்கள் 500 ஆண்டுகள் வாழ்ந்து வந்தனர்.

2017-ஆம் ஆண்டு, இங்கே தான் ஷி, டிரம்பை வரவேற்று கவுரவித்தார். பீப்பிள்ஸ் ரீபப்ளிக் ஆஃப் சீனா தோற்றுவிக்கப்பட்ட பிறகு வேறெந்த அமெரிக்க அதிபருக்கும் அளிக்கப்படாத மரியாதை அது.

ஜின்பிங் அந்த பகுதியை முழுமையாக பிறரின் வருகைக்கு தடை செய்தார். அங்கே அமைந்துள்ள மாளிகைகளின் பகுதிகளை டிரம்பிற்கு சுற்றிக்காட்டினார். அந்த சந்திப்பின் ஒவ்வொரு நிகழ்வும் அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. டிரம்பிற்கு குங் பாவ் சிக்கன் இரவு உணவு விருந்தில் வழங்கப்பட்டது. டிரம்ப் தன்னுடைய பேத்தி அரபெல்லா குஷ்னெர் சீன மொழியில் பாடிய வீடியோ ஒன்றை ஜின்பிங்கிற்கு வழங்கினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

சீன – அமெரிக்க உறவில் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது அந்த சந்திப்பு. ஆனால் கொரோனா தொற்று 2019-ஆம் ஆண்டு வூஹான் மாகாணத்தில் ஆரம்பித்த போது அந்த உறவில் கசப்பு ஏற்பட்டது. 2020-ஆம் ஆண்டு அது உலகம் முழுவதும் பரவியது.

டொனால்ட் டிரம்ப் தொடர்ச்சியாக இந்த வைரஸை சீன வைரஸ் என்று அழைத்தார். நோய் பரவலுக்கு சீனாnவ காரணம் என்று குற்றம் சுமத்தினார் டிரம்ப்.

பிறகு வர்த்தகப் போரை துவங்கினார் அவர். டிரம்ப் காலத்தில் விதிக்கப்பட்ட வரிகள் இன்றும் தொடர்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரு நாட்டு உறவுகள் பற்றி அதிகமாக ஷி பேசியது இல்லை. டொனால்ட் டிர்மபின் பெயரை அரிதாகவே அவர் பயன்படுத்துகிறார்

டிரம்ப் தனது இரண்டாவது ஆட்சியை துவங்கும் போது, ​​அவர் ஒரு வலுவான ஜின்பிங்கிற்கு சந்திக்க நேரிடும். சீனாவில் மூன்றாவது முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து தன்னுடைய நிலையை உறுதியாக்கியுள்ளார். வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தில் நீடிப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக தெரிய வருகிறது.

உலகின் மிகப் பெரிய இராணுவம் மற்றும் கடற்படையை ஏற்கனவே கொண்டிருக்கும் சீனா, இப்போது ஒரு பெரிய அணு ஆயுத கையிருப்பை உருவாக்குவதால் வாஷிங்டன் கவலை அடைந்துள்ளது.

டிரம்ப் தனது நிர்வாகத்தில் இடம் பெறும் நபர்களைப் பற்றி அறிவிக்கும் அதே நேரத்தில், சீன அரசு ஊடகம் அந்த நாட்டின் மிகப்பெரிய வானூர்தி கண்காட்சியின் வீடியோக்களை வெளியிட்டது. சீனா தயாரித்துள்ள அதிநவீன போர் விமானம் J35-A சாகசங்களை புரிவது அந்த காட்சிகளில் இடம் பெற்றிருந்தன.

(இந்த போர் விமானம் ஸ்டெல்த் போர் விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது, ரேடார் கருவிகளால் கண்டறிய முடியாத வகையில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானங்கள் வேவு பார்க்கவும் பயன்படுத்தப்படும்)

ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த 2 வகை அதிநவீன ஸ்டெல்த் போர் விமானங்களை கொண்டுள்ள இரண்டு நாடுகளில் சீனாவும் ஒன்று. மற்றொரு நாடு அமெரிக்கா. இரண்டு இருக்கைகள் கொண்ட உலகின் முதல் ஸ்டெல்த் போர் விமானமான J20-Sவும் காட்சிக்கு வைக்கப்பட்டது.

அணுசக்தியில் இயங்கும் விமானந்தாங்கி போர்க்கப்பலை தயாரிப்பதற்காக, அதற்கான அணு ஆயுத ப்ரொபல்ஷனை சீனா உருவாக்கி வருவதை செயற்கைக்கோள் படங்கள் மூலம் கலிபோர்னியாவில் உள்ள மிடில்பரி இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் ஆய்வாளர்கள் கடந்த வாரம் கண்டுபிடித்துள்ளனர்.

“பெய்ஜிங்கின் முதல் (அணு ஆயுத )பயன்பாட்டு உத்தி மற்றும் அதிகரிக்கும் அணுசக்தி அச்சுறுத்தல்கள் பற்றிய தீவிர கவலைகளை இந்த ஆய்வு முடிவுகள் எழுப்பியுள்ளன. இதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா தன்னுடைய அணுசக்தி திறன்களை கணிசமாக அதிகரிப்பதற்கான சூழலை ஆதரவை இது அதிகரிக்கும்” என்று கார்னெகி எண்டோமென்ட் ஃபார் இண்டர்நேஷனல் பீஸ் (Carnegie Endowment for International Peace) என்ற சிந்தனைக் குழுவைச் சேர்ந்த டோங் ஜாவோ கூறுகிறார்.

“டிரம்ப் தனிப்பட்ட முறையில் தலையிடாவிட்டால், (சாத்தியங்கள் இல்லாவிட்டாலும் கூட), இரு நாடுகளும் சர்வதேச நிலைத்தன்மையில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில் மிகவும் தீவிரமான அணுசக்தி போட்டியின் விளிம்பில் நிற்கக் கூடும்” என்கிறார் டோங்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா பெருந்தொற்றுக்கு முழுக்காரணமும் சீனா என்று கூறிய டொனால்ட் டிரம்ப் அதனை சீன வைரஸ் என்றே பலமுறை அழைத்து வந்தார்

தைவான் குறித்த கேள்வி

சமீபத்திய ஆண்டுகளில் ஜின்பிங் தலைமையின் கீழ், தைவான் மற்றும் தென் சீனக் கடல் பிராந்தியங்களில் உரிமை கோருவதில் சீனா மிகவும் உறுதியாக உள்ளது.

தைவான் மீதான படையெடுப்பிற்காக பெய்ஜிங் இராணுவ ரீதியாக முன்னேறி வருவது ஒரு கவலையாக மாறியுள்ளது. தைவானை ஒரு பிரிந்து சென்ற மாகாணமாகவே சீனா பார்க்கிறது. இறுதியில் சீனாவின் கட்டுப்பாட்டில் தைவான் வந்துவிடும் என்று நம்புகிறது. டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தின் கீழ், தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா தயாராகுமா?

ஒவ்வொரு அமெரிக்க அதிபரிடமும் கேட்கப்படும் கேள்வி இது. டிரம்பிடம் கேட்ட போது, “அதற்கு இராணுவ சக்தியைப் பயன்படுத்த வேண்டிய தேவை எல்லாம் இல்லை. ஏன் என்றால், டிரம்ப் ஒரு ‘க்ரேஸி’ என்று ஷிக்கு தெரியும். மேலும் அப்படி ஏதேனும் நடந்தால் சீன பொருட்கள் மீது இறக்குமதி வரிகள் விதிக்கப்படும் என்பதையும் அவர் உணர்ந்திருப்பார்.” என்று கூறினார்.

வெளிநாட்டுப் போர்களில் பங்கேற்க டிரம்ப் நாட்டம் காட்டாத போதும், பெரும்பாலான நிபுணர்கள், தைவானுக்கு அமெரிக்கா இராணுவ உதவியை தொடர்ந்து வழங்கும் என்று எதிர்பார்க்கின்றனர். அதற்கு காரணம், தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய சட்டம் உள்ளது. மேலும், வேறெந்த அதிபர்களைக் காட்டிலும் டிரம்ப் ஆட்சியின் போது தைவானுக்கு அதிக ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

“தைவானுக்கு தொடர்ந்து இராணுவ உதவி வழங்குவதற்கு வலுவான ஆதரவு உள்ளது. தைவானுக்கான ஆயுத விற்பனையில் டிரம்ப் கணிசமான மாற்றங்களைக் கொண்டுவருவார் என்று நான் நினைக்கவில்லை,” என்று மோரிஸ் கூறுகிறார்.

ஜின்பிங் பற்றி டிரம்ப் உண்மையில் என்ன நினைக்கிறார்?

இந்த வெளிப்படையான வேறுபாடுகள் ஒருபுறம் இருக்க, ஜின்பிங் மீது டிரம்ப் நன்மதிப்பை கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

2020-ஆம் ஆண்டு, இரு நாட்டுக்கும் இடையே வர்த்தகப் போர் நிலவி வந்த போதும் கூட, ஜின்பிங்கும் தானும் ஒருவரை ஒருவர் நேசிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

வால் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் அவருடன் மிகவும் வலுவான உறவைக் கொண்டிருந்தேன்,” என்று மீண்டும் கூறினார்.

ஜின்பிங் என்ன நினைக்கிறார் என்பதை அறிவது கடினம். அவர் இரு நாட்டுத் தலைவர்களின் உறவைப் பற்றி மிகக் குறைவாகவே கூறியுள்ளார். வெகு அரிதாகவே அவர் டிரம்பின் பெயரை பயன்படுத்துகிறார்.

2018ஆம் ஆண்டு, சீன அரசு ஊடகமான சி.ஜி.டி.என் (CGTN) டிரம்பை நேரடியாக குறிவைத்து, “நன்றி டிரம்ப், நீங்கள் சிறந்தவர்!” என்ற எள்ளல் தொணியில் ஒரு தலைப்போடு வீடியோ ஒன்றை வெளியிட்டார். பிறகு அது நீக்கப்பட்டது.

ஆனால் இரு தலைவர்களும் ஒரு வகையான தேசியவாதத்தை முன்னிறுத்துவதையே நாம் அறிந்திருக்கிறோம்.

ஜின்பிங்கின் கனவு சீன தேசத்தின் பெரும் புத்துயிராக இருக்கிறது. டிரம்போ அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற தன்னால் மட்டுமே முடியும் என்று நம்புகிறார். இருவரும் தங்கள் நாடுகளுக்கு ஒரு புதிய பொற்காலத்தை வழங்கும் நோக்கில் செயல்படுவதாக வாக்குறுதி வழங்குகின்றனர்.

அமெரிக்காவிற்கான டிரம்பின் “பொற்காலம்” சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு 60% வரி விதிப்பையும் உள்ளடக்கியது.

ஆனால் இரண்டாவது வர்த்தகப் போரை எதிர்கொள்ளும் மன நிலையில் சீனா இல்லை. அதற்கு அதன் சொந்த பிரச்னைகளே அதிகம் உள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரண்டாவது வர்த்தகப் போரை எதிர்கொள்ளும் மன நிலையில் சீனா இல்லை. அதற்கு அதன் சொந்த பிரச்னைகளே அதிகம் உள்ளது.

மந்தமான பொருளாதாரமும் ஈலோன் மஸ்க்கும்

அதிபர் ஜின்பிங்கின் செழுமைக்கான கனவு ஆபத்தான நிலையில் உள்ளது. சீனாவின் பொருளாதாரம் மந்தமாக உள்ளது. ரியல் எஸ்டேட் துறை பின்னடைவை சந்தித்துள்ளது, சீன இளைஞர்களில் 20% பேர் வேலை வாய்ப்பின்மையால் அவதியுறுகின்றனர். உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் வயதான மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா உள்ளது.

இந்த பொருளாதார சிரமங்களை வெளிச்சம் போடுகின்றனர் டெம்பிள் ஆஃப் ஹெவனில் உடற்பயிற்சி மேற்கொண்ட சிலர்.

வெள்ளைப் பளிங்கு வாயில்கள் வழியாகச் செல்லும் சீனப் பயணக் குழுக்களோடு நாங்களும் கலந்து கொண்டோம்.

பள்ளி மாணவர்கள் தங்கள் நகரத்தின் வண்ணமயமான வரலாற்றைப் பற்றிய தகவல்களை கவனமாகக் கேட்கின்றனர். சிலர் தங்களின் வேண்டுதல்களை முன்வைக்கின்றனர். அங்கே கருப்பு நிற உடை அணிந்த பெண் ஒருவரும் தன்னுடைய பிரார்த்தனைகளை முன்வைத்தார். அவர் என்ன வேண்டினார் என்று நாங்கள் கேட்டோம்.

“பலர் தங்கள் குழந்தைகளுக்கு வேலை கிடைக்க வேண்டும் அல்லது நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று இங்கே வேண்டிக் கொள்கிறார்கள். நாங்கள் சிறந்த வாழ்க்கை மற்றும் வாய்ப்புகளை விரும்புகிறோம்,” என்று அவர் கூறுகிறார்.

தன்னுடைய நாட்டில் தீவிர வறுமையை ஒழித்துவிட்டதாக சீனா கூறும் போது, ​​நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள், சீனாவின் எழுச்சிக்கு பங்களித்தவர்கள், அடுத்து என்ன நிகழப்போகிறது என்ற அச்சத்தில் உள்ளனர்.

அந்த பெண்ணின் எதிர்காலமும், சீனாவின் பொருளாதாரத்தின் எதிர்காலமும், டிரம்ப் விதிக்க இருக்கும் வரியைப் பொறுத்து தான் அமையும். ஆனால் இம்முறை சீனா தன்னை தயார்படுத்தியுள்ளது என்கிறார் யு ஜீ.

“சீனா ஏற்கனவே விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளை (குறிப்பாக பிரேசில், அர்ஜென்டினா மற்றும் ரஷ்யா நாடுகள் வழியே) பன்முகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நட்பு நாடுகள் அல்லாத நாடுகளில் சீனா தன்னுடைய ஏற்றுமதியின் அளவை அதிகரித்துள்ளது.

பெய்ஜிங்கில் மற்றொரு நம்பிக்கையும் உள்ளது. செல்வந்தர் ஈலோன் மஸ்க் இப்போது ட்ரம்பின் நெருங்கிய வட்டத்தில் இருப்பது போல் உள்ளது. அவரது நிறுவனமான டெஸ்லா, உற்பத்திக்காக சீனாவைச் சார்ந்துள்ளது. டெஸ்லாவின் மின் வாகனங்களில் பாதி சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. டிரம்பின் வர்த்தக போர் எண்ணத்தை ஈலோனால் கட்டுப்படுத்த முடியுமா என்று சீனத் தலைவர்கள் கேட்கலாம்.

ஆனால் 21-ஆம் நூற்றாண்டின் பெரும் அதிகாரப் போராட்டம் வெறும் வர்த்தகம் சார்ந்தது அல்ல. சீனாவை உலகின் மேலாதிக்க சக்தியாக மாற்றும் கனவையும் ஜின்பிங் கொண்டுள்ளார்.

இங்குதான் மற்றொரு டிரம்ப் ஆட்சி சீனாவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கக்கூடும் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இறக்குமதி பொருட்களுக்கான வரி விதிப்பை குறைக்க எலோன் மஸ்க் உதவக்கூடும் என்று சீனர்கள் சிலர் நம்புகின்றனர்

உலக அரங்கில் சீனா

உலகின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரே சக்தி அமெரிக்கா தான் என்றும், சீனா மிகவும் பொறுப்பான, நம்பிக்கையான உலக சக்தி என்றும் சீன தலைவர்கள் ஒரு பிம்பத்தை கட்டியெழுப்ப முயல்வார்கள் என்று கூறுகிறார் யு ஜீ.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஆசியாவில் தென்கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளுடன் பைடன் நட்பை உருவாக்கிக் கொண்டார். இவை அனைத்தும் சீனாவின் முயற்சியை கட்டுக்குள் வைக்கத்தான்.

கடந்த காலங்களில், டிரம்பின் அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற கருத்தாக்கம் இந்த கூட்டணியை வலுவிழக்க செய்தது. தனித்துவமான தூதரக நடவடிக்கைகளில் ஈடுபட்ட டிரம்ப், அமெரிக்காவின் நட்புறவுக்கு விலை நிர்ணயம் செய்தார்.

2018-ஆம் ஆண்டு, தென் கொரியாவில் அமெரிக்க துருப்புகளை தொடர்ச்சியாக வைத்திருக்க அந்த நாடு பணம் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வளர்ந்துவரும் நாடுகளுடன் சீனா ஏற்கனவே உறவை வளர்த்து வருகிறது. பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் மோசமடைந்த உறவை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆசிய நட்பு நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் உறவை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது.

உலக அரங்கில் அமெரிக்காவின் செல்வாக்கு குறையும் பட்சத்தில் அது சீனாவின் அதிபர் ஜின்பிங்கிற்கு வெற்றி தான்.

பூங்காவில் அமெரிக்க தேர்தல் முடிவுகள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் நான்கு விரல்களை தூக்கிக் காட்டி, “டிரம்பிற்கு நான்கே நான்கு ஆண்டுகள் தான் உள்ளன. அமெரிக்காவில் தலைவர்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருப்பார்கள். சீனாவில் எங்களுக்கு அதிக நேரம் இருக்கிறது.” என்றார்.

உண்மையில் சீனாவின் பக்கமே காலம் நிற்கிறது. வாழ்நாள் முழுவதும் ஜின்பிங் இங்கே அதிபராக திகழ முடியும். அவருடைய இலக்கை அவர் பொறுமையாக அடைய இயலும்.

அவரின் வழியில் டிரம்ப் குறுக்கிட்டாலும் கூட அது நீண்ட காலம் நீடிக்காது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு