சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் பிள்ளையான் !

by wp_fhdn

சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் பிள்ளையான் ! on Wednesday, November 20, 2024

இன்று (20) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் வாக்குமூலம் அளித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோவை பிரித்தானிய சேனல்-4 கடந்த ஆண்டு ஜூன் 8ஆம் திகதி ஒளிபரப்பியது.

சுமார் 50 நிமிடங்கள் ஒளிபரப்பான குறித்த காணொளியில், சுவிட்சர்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் அணியின் ஊடகப் பேச்சாளரான அசாத் மௌலானா என்பவரே இந்த தகவலை முன்வைத்துள்ளார்.

பின்னர், சம்பந்தப்பட்ட காணொளியின் உள்ளடக்கம் குறித்து ஆராய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு முறைப்பாடு கிடைத்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையைத் தொடங்கியது.

இதன்படி, மேற்படி விசாரணை தொடர்பான வாக்குமூலங்களைப் பெறுவதற்காக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கடந்த 12ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், அன்றைய தினம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகாத நிலையில், சட்டத்தரணிகள் ஊடாக வாக்குமூலத்தை வழங்குவதற்கு வேறு திகதியை அவர் கோரியிருந்தார்.

அதன்படி இன்று மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டு இன்று காலை 9.30 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்